Alappuzha Gymkhana Review: வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமாதான்; ஆனாலும் நஸ்லெனிடம் என்ன ஸ்பெஷல்?

0

ஆலப்புழாவைச் சேர்ந்த நஸ்லெனும் அவரது கூட்டாளிகளும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைகிறார்கள்.

இதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியில் சேர்வதற்காக, பாக்ஸிங் கற்றுக்கொள்ளலாம் எனக் கூட்டாக முடிவெடுக்கிறார்கள்.

ஆலப்புழா மாவட்டத்திலுள்ள பிரபலமான அமெச்சூர் குத்துச்சண்டை பயிற்சி மையமான 'ஆலப்புழா ஜிம்கானா'-வில் இணைகிறார்கள்.

குத்துச்சண்டையின் உண்மை முகம் தெரியாமல் விளையாட்டாகச் சேரும் இவர்களுக்கு, லக்மன் அவரன், கோட்டயம் நஸீர் ஆகியோரின் பயிற்சி குறுக்கு எலும்பை உடைக்கிறது.

Alappuzha Gymkhana Review
Alappuzha Gymkhana Review

ஆனாலும், குத்துச்சண்டையை விடாது இறுக்கிப் பிடிக்கும் குட்டி குட்டன்கள், மாநில அளவிலான அமெச்சூர் குத்துச்சண்டை கோப்பைக்குத் தயாராகிறார்கள்.

இந்தப் பயணம் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இறுதியில் கோப்பையை வென்றார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது காலித் ரஹ்மானின் 'ஆலப்புழா ஜிம்கானா' மலையாளப் படம்.

நண்பர்களாக வரும் கணபதி, சந்தீப் பிரதீப், ஃப்ரான்கோ ஃப்ரான்சிஸ், சிவா ஹரிஹரன், ஷோன் ஜோய் ஆகியோர் காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் என எல்லா ரிங்கிலும் தூண்களாக நின்றிருக்கிறார்கள்.

குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தங்களின் உடலை அனைவரும் உருமாற்றியிருப்பது படத்தை நெருக்கமாக்கியிருக்கிறது.

தன் பக்குவமான நடிப்பால் லக்மன் அவரனும், தன் அனுபவ நடிப்பால் கோட்டயம் நஸீரும் வலுசேர்த்திருக்கிறார்கள்.

Alappuzha Gymkhana Review
Alappuzha Gymkhana Review

புழைகளாலும், ஏரிகளாலும் ஆன ஆலப்புழாவின் நில அமைப்பின் அழகையும், குத்துச்சண்டை ரிங்கின் ஆக்ரோஷத்தையும் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித்.

இரண்டாம் பாதி குத்துச்சண்டை மேடையிலேயே கழிந்தாலும், அதை அயற்சியின்றி, திரையேற்றியிருக்கிறார் ஜிம்ஷி காலித். இதற்கு மறைந்த படத்தொகுப்பாளர் நிஷாத் யூசஃபின் சுவாரஸ்யமான கட்-கள் கலைநயத்தைச் சேர்த்திருக்கின்றன.

விஷ்ணு விஜய் இசையில், அந்தோணி தாஸின் குரலில் 'பஞ்சர பன்ச்' ரொமான்ஸ் வைப் மெட்டீரியல்! பின்னணி இசையிலும் தேவையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் விஷ்ணு விஜய்.

பழக்கப்பட்ட ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா கதையை, 2கே வாழ்வியலாலும், கலகலப்பான அணுகுமுறையாலும் ஒரு கலர் ஃபுல்லான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக மாற்றியிருக்கிறது காலித் ரஹ்மான் - ஶ்ரீனி சசீந்திரன் எழுத்து.

யூகிக்கும்படியே கதை நகர்ந்தாலும், காட்சிக் களங்களைப் படகு, தென்னை நார் தொழிற்சாலை, சின்ன சின்ன நீர்நிலைகள் போன்றவற்றில் பாடமாக்கியதும், சின்ன சின்ன காமெடி வசனங்களும் படத்தைச் சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருக்கின்றன.

எல்லா நண்பர்களுக்கும் பொதுவான குணம், தனித்துவமான குணம் எனக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதை, அதைத் திகட்டலின்றி திரையோட்டத்தோடு செய்திருக்கிறது.

பயிற்சியாளராக வரும் லக்மன் அவரனுக்கு ஒரு சோகப் பின்கதை, நண்பர்களுக்கு ஆளுக்கொரு சோகப் பின்கதை என வலிந்து திணிக்காமல், நடப்பு காட்சிகளை வைத்தே ஒரு எமோஷனல் நெருக்கத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது படம்.

Alappuzha Gymkhana Review
Alappuzha Gymkhana Review

ஹீரோவிற்கான மாஸ் மொமன்ட்கள், உருவக்கேலிகள், பெண்களை உதாசினப்படுத்துவது எனப் பல விஷயங்களைப் போகும்போக்கில் கலாய்த்திருப்பது கைத்தட்டல்களை அள்ளியிருக்கின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை ஓரிடத்திலேயே தேங்கி நிற்கும் உணர்வைத் தருகிறது.

ஒவ்வொரு நண்பர்களுக்குமான குத்துச்சண்டைப் போட்டி, அதற்கு அவர்கள் தயாராகும் விதம், போட்டிகளுக்கு இடையில் நடக்கும் உரையாடல்கள் போன்றவை ரசிக்க வைத்தாலும், அதீத நீளத்தில் காட்சிகள் நீண்டுகொண்டே போவது கொஞ்சம் அயற்சியைத் தருகிறது.

Alappuzha Gymkhana Review
Alappuzha Gymkhana Review

நிறையக் கதாபாத்திரங்களையும் அதன் எமோஷனல் மீட்டரையும் முழுமையாக முடித்து வைக்காமல், தெருச் சண்டை, தேவையில்லாத ஹீரோயிஸம் என அரக்கப்பறக்க இறுதிக்காட்சிக்கு ஓடுகிறது திரைக்கதை.

இறுதிக்காட்சியில் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவும், அதற்கான காரணமும் படத்தைத் தனித்துக் காட்டியிருக்கிறது.

எதார்த்தமான இளைஞர்கள், இலகுவான அவர்களின் உலகம், நுணுக்கமான எமோஷன் என விரிந்திருக்கும் `ஆலப்புழா ஜிம்கானா', ஒரு ஃபீல் குட் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக ஜெயிக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*