28 Years Later Review: ஐபோனில் எடுக்கப்பட்ட ஜோம்பி படம்; டேனி பாயிலின் பரீட்சார்த்த முயற்சி எப்படி?

0

வில்லிலிருந்து பாய்கிறது அம்பு. `ரேஜ்' (Rage) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டு அதிவேக ஜோம்பி ஆகியிருக்கும் அந்த உயிரினத்தின் மீது அது பாய்கிறது. ரத்தம் தெறிக்க, கேமரா சட்டென அதிவேகத்தில் கோணத்தை மாற்றுகிறது. கதாபாத்திரங்கள் ஓடும்போதும், வன்முறை வெறியாட்டம் திரையில் அரங்கேறும்போது நம்மையும் அந்தப் பதைபதைப்புக்குள் இறக்கிவிட்டதுபோல இருக்கிறது மொத்த படமாக்கமும். கிட்டத்தட்ட `கேண்டிட்' பாணியில் எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தின் பாதிப்பு இந்த ஜோம்பி ஆக்ஷன் த்ரில்லரில் இருக்கிறது. இப்படியான ஒரு அவுட்புட்டைக் கொண்டுவர இயக்குநர் டேனி பாயில் (`ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ்) கையில் எடுத்த கருவி என்ன தெரியுமா? வெறும் ஐபோன் 15!

விதவிதமான கேமரா ரிக்குகள், அதன் மூலம் நினைத்த மாதிரி காட்சிகளையும் கோணங்களையும் மாற்றுவது, என ஒளிப்பதிவில் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்க இந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார். இப்படியான பரீட்சார்த்த முயற்சி பாராட்டுக்குரியதுதான் என்றாலும் அது திரைப்படத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, தொழில்நுட்பம் தாண்டி ஒரு படமாக இந்த ஜோம்பி த்ரில்லர் நம்மைப் பதறவைக்கிறதா?

28 Years Later Review

'28 Days Later' என்ற இப்படத்தொடரின் முதல் பாகம் வெளியானபோது அதன் படத்தொகுப்பு மற்றும் படமாக்கல் பாணி, ஜோம்பி கதைக்குள் எமோஷன்களைக் கடத்தியது என அந்தக் குறிப்பிட்ட ஜானரில் அடுத்தகட்ட முயற்சியாகக் கொண்டாடப்பட்டது. '28 Weeks Later' என்ற அடுத்த பாகமும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகே அந்த யுனிவர்ஸின் மூன்றாவது படம் வந்திருக்கிறது. இந்த முறை மீண்டும் இயக்குநர் அரியணை ஏறியிருக்கிறார் டேனி பாயில். படத்தொடர்தான் என்றாலும் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள முதல் இரண்டையும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டியதில்லை என்பது கூடுதல் ப்ளஸ்! இதன் அடுத்த பாகமும் ஏற்கெனவே இதே பாணியில் எடுத்து முடிக்கப்பட்டு ஜனவரியில் வெளியாகும் என்கிறார்கள்.

இந்தப் பாகத்தின் கதை..? 'ரேஜ்' வைரஸின் இரண்டாம் அலைக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதையில் பிரிட்டிஷ் தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே 'க்வாரன்டீன்' செய்யப்பட்டு வாழ்கிறார்கள். அப்படி ஒரு தீவில் தன் 12 வயது மகன் ஸ்பைக் மற்றும் நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் வசிக்கிறார் ஜேமி. அந்தத் தீவை, பிரதான 'மெயின்லேண்டு'டன் இணைப்பது ஒரு கடல் பாலம் மட்டுமே. ஸ்பைக்குக்கு வேட்டை அனுபவத்தைக் கற்றுத் தர ஜேமி அவனை மெயின்லேண்டுக்கு அழைத்துச் சென்று வருகிறான். அங்கு ஆபத்துகள் இருப்பினும் ஒரு மருத்துவர் அங்கே இருப்பதை அறிந்துகொள்கிறான் ஸ்பைக். நோய்வாய்ப்பட்ட தன் அம்மாவுக்குச் சிகிச்சை அளிக்க தன் தீவில் யாருமே இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தாயை அழைத்துக் கொண்டு மெயின்லேண்டுக்குச் செல்ல எத்தனிக்கிறான். இந்தச் சாகசப் பயணம் அவனுக்குத் தரும் அனுபவங்களே படம்!

28 Years Later Review

நாயகன் ஸ்பைக்காக அல்ஃபி வில்லியம்ஸ் தன் பதின்பருவதுக்கே உரிய குழப்ப ரேகைகளை முகபாவனைகளில் படரவிடுகிறார். முதன்முதலான தன் தீவை விட்டு வெளியே வந்து பெரும் நிலத்தை அதிசயமாகப் பார்க்கும் இடம், அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், வேட்டை ஆடுதல் என எல்லாவற்றிலும் தேர்ந்ததொரு நடிப்பு! ஜேமியாக தன் மகனைப் பாதுகாக்கும் ஆரம்ப வேட்டைக் காட்சிகளில் ஆரோன் - டெய்லர் ஜான்சன் யதார்த்தம்! ஆனால் அதன் பிறகு அந்தக் கதாபாத்திரம் இந்தப் பாகத்தில் நட்டாற்றில் விடப்பட்டுவிட்டது ஏமாற்றமே! ஸ்பைக்கின் தாயாக ஜோடி கோமர், நோய்வாய்ப்பட்டவராக, பதற்றம் கொள்பவராக, நினைவு பிறழ்ந்தவராக நம்மையும் பரிதாபப்பட வைக்கிறார். பிரசவம் பார்க்கும் காட்சியில் அவரின் நடிப்பு எமோஷனல் கவிதை! பாதி வழியில் சில காட்சிகளுக்கு மட்டுமே வந்தாலும் சீனியர் நடிகர் ரேல்ஃப் ஃபின்னஸ் தன் அனுபவத்தைத் திரையில் படரவிட்டுப் போகிறார். ஸ்பைக்குடனான அவரின் உரையாடல், வாழ்க்கைக்கான டானிக்!

ஐபோன் மேஜிக் மட்டுமின்றி ஆங்காங்கே டிரோன் ஷாட்களாலும் மிரள வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்டனி டாட் மேன்டில். இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்துகொடுக்கும் கேமராவுக்கு ஏற்றவாறு பதற்றத்தைக் கூட்டும் படத்தொகுப்பைப் படமெங்கும் வழங்கியிருக்கிறார் எடிட்டர் ஜான் ஹாரிஸ். யங் ஃபாதர்ஸ் குழுவின் பின்னணி இசை மிரட்டல்! தொடக்கத்தில் வரும் அந்தப் பாடலும் அதற்கேற்ற காட்சிக் கோர்வையும், எடிட்டிங் மாயாஜாலமும் இந்தப் படம் எத்தகைய அனுபவத்தைத் தரப் போகிறது என்பதற்கான டிரெய்லர்!
28 Years Later Review - படமாக்கப்பட்ட விதம்

இத்தனை பிளஸ்கள் இருந்தும் தொழில்நுட்ப ரீதியாக ஐபோன் மட்டும் போதும் என்ற முடிவு இருமுனை கத்தியாக மாறியிருக்கிறது. நிறையக் காட்சிகளில் சட்டகங்களில் பிரமாண்டம் இருந்தும் காட்சியின் தரத்தில் இல்லாதது, பட்ஜெட் குறும்படம் பார்க்கும் உணர்வைக் கொடுத்துவிடுகிறது. DI-யிலும் பெரிதாக விளையாட முடியாததால் காட்சி அனுபவமாகப் படம் நம்மை ஈர்க்கத் தவறுகிறது. லைட்டிங் பிரச்னைகள், இலக்கணமற்ற ஷாட்கள் உங்களுக்கு ஒவ்வாமை என்றால் இந்தப் படம் ஏமாற்றமளிக்கலாம். ஓ.டி.டி-க்கு ஓகே, தியேட்டருக்கு ஏன் என்ற கேள்வியும் எழலாம். ஃபவுண்டு புட்டேஜ் மற்றும் மாக்குமென்ட்ரி (Mockumentary) வகை படங்களிலிருக்கும் சீரற்ற தன்மைதான் இது என்றாலும் இப்படியொரு கதையை இந்த பார்மேட்டில் எடுக்கத் தெளிவான காரணங்கள் எதுமில்லை என்பது ஏமாற்றமே!

இந்த ஒழங்கற்ற தன்மை தாண்டி, ஜோம்பிக்களைப் படமாக்கிய விதம் மிரட்டல்! விதவிதமான ஜோம்பிக்கள் கூட்டமாக, குடும்பமாக வாழ்வது, ஆல்ஃபாவுக்கு அடிபணிவது, பரிணாம வளர்ச்சியடைவது என 'ஜோம்பி' ஜானரில் இன்னும் ஒரு படி மேலே தாவியிருக்கிறார்கள். மகனை 'வீரனாக' காட்ட முயலும் அப்பா, பாழடைந்த டிரெயினுக்குள் நடக்கும் அந்தப் பிரசவக் காட்சி, அந்தக் குழந்தையின் நிலை, டாக்டர் கதாபாத்திரம் ஸ்பைக்குடன் நிகழ்த்தும் ஆத்மார்த்தமான உரையாடல், மகனை 'அப்பா' என்றழைக்கும் அம்மா என எமோஷனலாக காட்சிகளை அடுக்கிய விதம் கச்சிதம்! அதே சமயம் மகனைக் காணாத பாசக்கார அப்பா, அத்தனை நாள்கள் என்ன முயற்சிகள் எடுத்தார் என்பதில் தெளிவில்லை.

28 Years Later Review
படத்தின் வித்தியாசமான ஆக்கம் சிக்கல் இல்லை என்றால், பரீட்சார்த்த முயற்சிகளுக்கு ஹார்ட்டின் விட்டு வரவேற்பீர்கள் என்றால் இந்தப் படத்தை நீங்கள் `லைக்'கலாம்!


from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*