
அமெரிக்காவில் ஆர்கிடெக்டாக இருக்கும் ரோஹன் (பிரணவ் மோகன்லால்) சில நாட்கள் தன்னுடைய சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு வருகிறார். ரோஹன் இங்கு வந்திருக்கும் நேரத்தில் அவருடைய பள்ளித் தோழி கனி தற்கொலை செய்கிறார். கனியின் இழப்பிற்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனியின் இல்லத்திற்குச் செல்கிறார் ரோஹன்.
அங்கு அவரின் ஹேர் க்ளிப் ஒன்றையும் தன்னுடைய இல்லத்திற்கு எடுத்து வருகிறார். அந்த ஹேர் க்ளிப் அவருடைய இல்லத்திற்கு வந்த பிறகு சில அமானுஷ்ய சம்பவங்கள் ரோஹனைத் தூங்கவிடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன.
அவற்றுக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்னென்ன, அதற்கு ரோஹன் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதுதான் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கும் 'டீயஸ் ஈரே' படத்தின் கதை.
எலைட் இளைஞராக பிரணவ் மோகன்லால் கரார் முகத்தைக் காட்டுமிடத்திலும், அமானுஷ்ய விஷயங்களைக் கண்டு அஞ்சுமிடத்திலும் குட் மார்க்ஸ் வாங்குகிறார். ஆனாலும், சில எக்ஸ்பிரஷன்களைக் கையாளும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
படம் முழுக்க பதற்றமான உடல்மொழியையும் மர்மமான முகபாவனைகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் கிபின் கோபிநாத்துக்கு க்ளாப்ஸ்!
நம்மிடையே பரிதாபத்தை வரவழைக்கும் பெண்மணியாகக் கவனிக்க வைக்கும் ஜெயா குரூப், இரண்டாம் பாதியில் எடுக்கும் அவதாரத்திலும் மிரட்டுகிறார். கனியின் தம்பியாக வரும் அருண் அஜிகுமார், மனோகரி ஜாய் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
மூன்று வீடுகள், அதற்குள் நடக்கும் திகில் ஆட்டங்கள் எனப் பெரும்பாலான பகுதிகளை நுணுக்கமான க்ளோஸ் அப் ஷாட்களில் படம்பிடித்து படத்திற்குத் திகில் உணர்வைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனத் ஜலல்.
இந்த திகில் படம் கேட்கும் நிதானத்தைக் கணித்து கட்களைக் கையாண்டு, காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகமது அலி. ஜம்ப் ஸ்கேர்களைப் பெரும்பாலான பகுதிகளில் தவிர்த்தது ஆறுதல் சாரே!
பின்னணியில் ஒலிக்கும் ஆங்கிலப் பாடல்கள், திகிலூட்டும் மெல்லிய இசை எனப் படத்தின் பெரும் பலமாக ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர். நம்மைப் பதைபதைப்புடனேயே நகர்த்தும் காட்சிகளில் சைலன்ஸுக்கும் போதுமான இடம் கொடுத்திருப்பதும் குட் ஜாப்!
ஒவ்வொரு காட்சிகளிலும் வரும் துல்லியமான 'ஒலி வடிவமைப்பானது' திகில் படையலுக்குக் கூடுதல் ருசி சேர்க்கும் சைடிஷ்!
படத்தின் முதற்பாதி நிதானமாகவே நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் அகங்களை நுணுக்கமாகத் திறந்துகாட்டி, நம்மைத் தொய்வடைய வைக்காத வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.
திகில் படங்களில் சம்பிரதாயமாக அட்டெண்டென்ஸ் போடும் சில பார்முலாக்களை இந்தப் பேய் படத்தில், இயக்குநர் தவிர்த்திருப்பது குட் சாய்ஸ்.
ரோஹனின் வாழ்க்கை, அவருக்கும் கனிக்கும் இடையேயான உறவு போன்றவற்றைக் காட்டுவதற்குத் தனியாக ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குச் செல்லாமல் ஓரிரு மான்டேஜ்களில் காட்டிய விதமும் சிறப்பு. சாதாரண பழிவாங்கும் திகில் கதைதான் என நாம் முடிவுக்கு வரும் சமயத்தில் `இருங்க சேட்டா' எனக் கொண்டு வரும் டிவிஸ்ட்டும் அடிப்பொலி ரகம்!
இயக்குநர் ராகுல் சதாசிவனின் முந்தைய இரண்டு படங்களையும், அதன் கதாபாத்திரங்களையும் துருத்தலின்றி, இப்படத்தோடு இணைத்த விதம் நச்! ஆனால், கனியின் மரணத்திற்குக் காரணம் என்ன?, கனியின் தம்பி ஏன் வெறுப்பான மனநிலையிலேயே இருக்கிறார் என நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் தராமல் பல்டி அடித்திருப்பது நியாயமா இயக்குநரே!
மிகவும் கொடூரமாக காயமடைந்த அருண் அஜிகுமார் எப்படி உயிர்பிழைத்தார்?, உயிருக்குப் போராடும் அவரைக் கண்டு சுற்றி இருப்பவர்கள் பதறாமல் இருக்கிறார்களே என இந்த திகில் திரைப்படம் எழுப்பும் சில லாஜிக் கேள்விகளுக்கான விடையை பேய் போல மறைந்து ஓட வைத்திருப்பது ஏனோ?
கச்சிதமான தொழிற்நுட்ப ஆக்கத்தோடு, திகில் படங்களுக்கான புதிய இலக்கணங்களை அறிமுகப்படுத்தி, பக்காவான திரையனுபவத்தைத் தந்த விதத்தில் இந்தப் பேய் படம் தனித்து நிற்கிறது.
from Movie Review | திரை விமர்சனம்
Umn news
