ஆழி விமர்சனம்: ஒற்றைப் படகில் நடக்கும் உயிர்ப் போராட்டம் - சாகசமாக ஈர்க்கிறதா?

0

கப்பல் மற்றும் படகுகளைச் சீர் செய்யும் மெக்கானிக்காக இருக்கும் மூர்த்தி (சரத்குமார்) தனது மனைவி, மகளுடன் (முகில்) வாழ்ந்து வருகிறார்.

படகுகளைச் சீர் செய்வதோடு போதைப் பொருட்களைக் கடத்தும் க்ரைம் வேலைகளையும் செய்கிறார். மூர்க்கக் குணம் கொண்டவராக இருக்கும் மூர்த்தி, மனைவி, மகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துப் பாதுகாக்கவும் நினைக்கிறார்.

Aazhi Review | ஆழி விமர்சனம்
Aazhi Review | ஆழி விமர்சனம்

இப்படியான சமயத்தில், கல்லூரியில் படிக்கும் இவருடைய மகள் முகிலா, அருள் என்பவரைக் காதலிக்கும் தகவல் மூர்த்திக்குத் தெரிய வருகிறது. அதற்கு உடன்படாதவர், அருளை விசைப் படகில் ஏற்றிக்கொண்டு சென்று கொலை செய்துவிடலாம் எனத் திட்டமிடுகிறார்.

இறுதியில் அருளுக்கு என்ன ஆனது, கொலை செய்யும் திட்டத்துடன் படகேறிய மூர்த்தி என்னென்ன விஷயங்களை உணர்கிறார் என்பதுதான் இயக்குநர் மாதவ் ராமதாஸன் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை.

கடுஞ்சினம் கொண்டவராக அருளைத் துரத்துமிடம், அங்கு ஏற்படும் விபத்துகளால் மெய்யுணரும் இடம் எனக் 'க்ரே டு வைட்' கதாபாத்திரத்தைத் தனது வழக்கமான நடிப்பு மற்றும் உடல்மொழியால் துடுப்பு போட்டுக் கரை சேர்கிறார் சரத்குமார்.

குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், அதனால் உண்டாகும் ஒருவிதமான பயம், அப்படியான சமயத்தில் மலரும் காதல், அந்தக் காதல் கொண்டு வரும் இடர்கள் என அருள் கதாபாத்திரத்தைத் தத்தளித்து கரை சேர்க்கிறார் இந்திரஜித் ஜெகஜித்.

இந்த இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக வருவதால், மற்ற கதாபாத்திரங்களுக்கு வெறுமென அட்டெண்டென்ஸ் போடும் வேலை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Aazhi Review | ஆழி விமர்சனம்
Aazhi Review | ஆழி விமர்சனம்

நடு 'ஆழி'க்குள் மிதக்கும் ஒரு விசை படகு, அதற்குள் நிகழும் சண்டைக் காட்சிகள், அதற்கேற்ப அமைத்திருக்கும் தேர்ந்த ஒளியமைப்பு எனக் கவனத்தைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் என். நாயர்.

ஒரு விசை கப்பலுக்குள்ளாகவே சுற்றிச் சூழலும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கே. ஸ்ரீனிவாஸ், பரபரப்பின்றி கத்தரித்த விதம், குறுகிய 'ரன் டைம்' படமாக இருந்தாலும் நம்மை 'டயர்டு' சுழலுக்குள் சிக்க வைக்கிறது.

ஜாஸி கிஃப்ட் இசையில் பாடல்கள் நங்கூரமாக மனதில் தங்காமல் எவ்வித தாக்கமும் தராமல் அலையாக ஓடியிருக்கின்றன. பரபரப்பூட்டும் பின்னணி இசையை ஓரிரு இடங்களில் மட்டுமே தந்து 'பார்ட் டைம்' மாலுமி வேலையைக் கவனித்துப் போகிறார் பின்னணி இசையமைத்திருக்கும் வில்லியம் ஃப்ரான்சிஸ்.

கோபக்காரரின் மகளைக் காதலிக்கும் அருள், அதனால் அருளுக்கு வரும் நெருக்கடி என அவர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கதையை ஒரு விசைப் படகை வைத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாஸன்.

Aazhi Review | ஆழி விமர்சனம்
Aazhi Review | ஆழி விமர்சனம்

காதலை மறுக்கும் தந்தை, அதனால் காதலனுக்கு ஏற்படும் பிரச்னைகள் என வழக்கமான கோட்டிலேயே தோணியை நகர்த்திக் கதைக்குள் கொண்டு செல்கிறார் இயக்குநர்.

அருளுக்கு என்னவாகிடும், அவனை மூர்த்தி என்ன செய்யப் போகிறார் போன்ற எதிர்பார்ப்புகளை திரைக்கதை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்து நிகழும் சுமாரான திருப்பங்களும் நிகழ்வுகளும் இந்தப் படகின் மோட்டாரைப் பழுதாக்கி விடுகின்றன.

அதுவும் நாம் ஏற்கெனவே கணித்துவிட்ட விஷயங்களையே அடுத்தடுத்து 'சர்ப்ரைஸ்' என நீட்டுவதெல்லாம் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்' லாஜிக் சாரே!

உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சிறிய இடத்திற்குள் நிகழும் போராட்டம் என்கிற ஐடியா சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும், அதற்குப் பிறகான எமோஷனல் நிகழ்வுகள், காட்சிகளின் அழுத்தத்தை மூழ்கவிடுவதோடு நம் கண்களுக்குக் 'கிறுகிறு'ப்பையும் தருகின்றன.

Aazhi Review | ஆழி விமர்சனம்
Aazhi Review | ஆழி விமர்சனம்

மூர்த்தி ஏன் இத்தனை கோபம் கொண்டவராக இருக்கிறார், எதனால் அவர் போதைப்பொருள் கடத்தும் கிரிமினல் எனப் பெயருக்கு மட்டும் சொல்கிறார்கள் போன்ற லாஜிக் வலைக்குள்ளும் சிக்கிக் கொள்கிறது இப்படம்!

வானிலை பார்த்து, கச்சிதமான ஆயத்தங்களோடு, படகேறி கடலின் ஆழத்தைத் தொட்டிருந்தால், பெரும் லாபங்களை இந்த 'ஆழி' அள்ளித் தந்திருக்குமே!



from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*