Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

0

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இவர்களுக்கிடையில் மோதல் முட்டுகிறது. அந்த மோதல், பிரேக்-அப்பில் வந்து முடிகிறது. பிரேக்-அப்பிற்குப் பிறகு கைலாஷும், தனுஷாவும் காதல் நினைவுகளை மறப்பதற்கும், அதிலிருந்து நகர்ந்து செல்வதற்கும் உடற்பயிற்சி, ஆன்மிகம் என பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். அதே சமயம், இருவரும் வேறொரு காதலையும் தேடிச் செல்கிறார்கள். இறுதியில், கைலாஷுக்கும் தனுஷாவுக்கும் என்ன ஆனது, அவர்கள் பிரேக்-அப் எப்படி பேட்ச் அப் ஆகிறது என்பதுதான் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கும் இக்காதல் படத்தின் கதை.

Pookie Review | பூக்கி விமர்சனம்
Pookie Review | பூக்கி விமர்சனம்

காதல் தோல்வியிலிருந்து வெளிவரத்துடிக்கும் இளைஞனாகத் துள்ளல், பிரிவு, கோபம் எனப் பல்வேறு எமோஷன்கள் கொண்டு இந்தக் காதல் கதையைத் தாங்கியிருக்கிறார் நடிகர் அஜய் திஷன். ஆனால், தேவையின்றி இடையிடையே தலைதூக்கும் மிகை நடிப்பு பக்கங்களைக் கசக்கிப் போட்டிருக்கலாம். நாயகியாக ஆர்.கே. தனுஷா ஏமாற்றம், பிரிவின் வலி, நினைவுகளிலிருந்து மீள முடியாத துயரம் என நடிப்பில் தேவையான டச் தந்து 'பூக்கி'யாக பெயர் வாங்குகிறார். ஆனால், உடல் எடையை உடனுக்குடன் ஏற்றி இறக்கும் லாஜிக் மீறலை (continuity) இவருடைய கதாபாத்திரத்தில் கண்டும் காணாமல் விட்டிருப்பது ஏனோ?!

தந்தையாக பாண்டியராஜன் குறைந்த திரை நேரத்தில் வந்தாலும், எமோஷனலாக ஸ்கோர் செய்கிறார். இவரைத் தாண்டி இந்துமதி மணிகண்டன், ப்ளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் வழக்கமான கதாபாத்திரங்களிலேயே வந்து அட்டெண்டன்ஸ் மட்டும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

Pookie Review | பூக்கி விமர்சனம்
Pookie Review | பூக்கி விமர்சனம்

வண்ணமயமான ப்ரேம்கள் கொண்டு இந்தக் காதல் கதைக்கு வசீகரிக்கும் திரைமொழியைச் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இந்தக் கதைக்குக் கொடுக்க வேண்டிய சுவாரஸ்யப் பின்னல்களைக் கொடுக்காமல் சிக்கல்களுக்குள் சிக்கிச் சுழல வைத்திருக்கிறது விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு. க்ரீன் மேட் உதவி கொண்டு சாத்தியப்படுத்தியிருக்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளின் தரமும் சுமார் ரகமே!

விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் பாடல்களில், அவருடைய டிரேட்மார்க் வைப் 'கீ' இடம்பெறாமல் போயிருப்பது கோஸ்டிங் செயல் ப்ரோ! பின்னணி இசையிலும் இந்தக் காதல் கதையை உயிர்ப்புடன் வைக்கத் தவறியிருக்கிறார். ஆங்காங்கே, காட்சிகளை ஸ்டாக்கிங் செய்யும் ஜிங்கிள் வடிவிலான பாடல்களும் செவிகளுக்குத் தொந்தரவையே உருவாக்குகின்றன.

Pookie Review | பூக்கி விமர்சனம்
Pookie Review | பூக்கி விமர்சனம்

மாற்றுப் புரிதல்களால் உண்டாகும் கைலாஷ் மற்றும் ஆழியின் காதல் பிரிவு, என நேரடியாகவே திரைக்கதைக்குள் செல்கிறது படம். அதிலிருந்து காமெடி, காதல் என வலுவிழந்த பரிசலிலேயே பயணிக்கிறது இக்கதை. சமூக வலைதள டிரெண்டிங் மீம் வசனங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் சிலது மட்டுமே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இடைவெளி இன்றி, இப்படியான வசனங்களைத் திரைக்கதை முழுவதுமாக அடு...க்கி நமக்குச் சலிப்பையே உண்டாக்குகிறார்கள். சமூக வலைதள டிரெண்டிங் வசனங்களையும் முகங்களையும் திரையில் கொண்டு வருவதால் மட்டுமே அது ஜென் ஜி சமூகத்திற்கான படைப்பாகாது இயக்குநரே!

காதல் பிரிவிலிருந்து கடந்து செல்ல நாயகன், நாயகி கையிலெடுக்கும் அடுத்தடுத்த முயற்சிகள் என மீண்டும் மீண்டும் ஒரு இடத்திற்குள்ளாகவே வட்டமிட்டு 'ரெட் ஃப்ளாக்'யே பெறுகிறது இந்த திரைக்கதை. இடையிடையே குடும்ப சென்டிமென்ட், ஆன்மிகம் என்கிற பெயரில் செய்யப்படும் அரசியல் ஏமாற்று ஆட்டம் திரைக்கதையைத் தேவையில்லாத திசைகளுக்கு டேட்டிங் அழைத்துச் சென்றிருக்கிறது. பெண்ணியவாதிகள் குறித்துத் தவறான பிம்பத்தைக் கட்டமைக்கும் வகையில் சித்திரித்திருப்பதும் இந்த 'ஜென் ஜி' காதல் கதை செய்திருக்கும் பூமர் செயல்! காதல் பிரிவில் ஆண்கள், பெண்கள் என இருவரும் பாதிக்கப்படுவதாக முதல் பாதியில் காட்சிப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் பெண்கள் மீது வெறுப்பை உண்டாக்கும் 'ஆண் மைய' பார்வையோடு காட்சிகளை எழுப்பியிருப்பது மோசமான போக்கே!

Pookie Review | பூக்கி விமர்சனம்
Pookie Review | பூக்கி விமர்சனம்
அழுத்தமான திரைக்கதையில்லாமல் சோதனையாட்டம் கண்டிருக்கும் இந்த 'பூக்கி', ஜென் ஜி, ஜென் எக்ஸ், மில்லினியல்கள் என எவருடனும் நெருங்காமல், அந்நியமாகிப் போயிருக்கிறது.


from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*