காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?

0

சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று வயதேயான பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது.

குழந்தையின் தாய் சஞ்சு (அபர்ணதி), அபார்ட்மென்ட் செகரட்டரி ரூபா சுந்தரி (சங்கீதா) என அனைவரும் தேடுதல் வேட்டையில் இறங்க, காளிதாஸ் (பரத்), ஏசி வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) தலைமையிலான காவல் படையும் களத்தில் குதிக்கிறது.

சந்தேகப் பார்வை, அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜூனியர் வக்கீலும் பேச்சுலருமான ஸ்டீபன் (அஜய் கார்த்தி) மீது விழுகிறது. உண்மையில் குழந்தைக்கு என்னாவானது, ஸ்டீபன் குற்றவாளியா என்பதை க்ரைம் த்ரில்லராகச் சொல்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.

'காளிதாஸ்' பாகம் ஒன்றில் கவனம் ஈர்த்த அதே கதாபாத்திரத்தில் பரத். இந்த முறையும் படத்தைத் தாங்கும் கதாநாயகனாக வராமல், எட்ட நின்று கதை எனும் ஜோதிக்குள் ஐக்கியமாகியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review
காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review

ஏசி வைஷ்ணவியாக பவானி ஸ்ரீ, ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக உடல்மொழியில் பலம் சேர்த்தாலும் எந்நேரமும் எல்லோரிடமும் கடுகாக வெடித்துக்கொண்டிருப்பது ஏனோ?!

ஜூனியர் வக்கீலாக குற்றம் சாட்டப்படும் ஸ்டீபன் பாத்திரத்தில் வரும் அஜய் கார்த்திக்கு நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. ரகசியங்கள் பொதிந்த வேடத்தில் சங்கீதா ஒரு சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

அபர்ணதி, அனந்த் நாக், சிறிய வேடத்தில் கிஷோர் என அனைவருமே கூட்டத்தில் காணாமல் போகின்றனர். ஒரே காட்சியில் தோன்றினாலும் பிரகாஷ்ராஜின் அதகளம் தனித்துவம்!

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு அபார்ட்மென்ட்டைப் பல கோணங்களில் வட்டமடிப்பது, லாங் ஷாட், டிரோன் ஷாட் என அழகியல் பேசுவது ஓகே என்றாலும் கம்பிகளுக்கு நடுவே கேமரா கோணம் வைப்பது, ஜன்னலுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பது போன்றவை எல்லாம் 'டூ மச்' பாஸ்!

புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பு தடதடக்கும் திரைக்கதைக்கு வலு சேர்த்தாலும், 'இதோ க்ளைமாக்ஸ், அதோ க்ளைமாக்ஸ்' எனக் கடைசி 20 நிமிடங்கள் போக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றன.

சாம் சி.எஸ்-ஸின் இசையில் அந்த பிளாஷ்பேக் காதல் பாடல் ஸ்பீட்பிரேக்கரே! பின்னணி இசைக்குக் கொஞ்சமேனும் 'ஃபுல்ஸ்டாப்' அவசியம் சாரே!

காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review
காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review

காணாமல் போகும் குழந்தை, அபார்ட்மென்ட் வாசிகள் மீது திரும்பும் சந்தேகப் பார்வை, அலைக்கழிக்கும் விசாரணை என ஒரு பரபர பாக்கெட் நாவல் டெம்ப்ளேட்டில் சரியாகப் பொருந்துகிறது அரவிந்தன் ஆனந்த்தின் திரைக்கதை.

இந்த வழக்குக்குச் சம்பந்தமில்லாத பாணியில் தொடங்கும் அந்த நீதிமன்ற வளாகக் காட்சிகள், 'ஆணவக்கொலை' போன்றவை பதற்றத்தைக் கூட்டினாலும் ஏன், எதற்கு என்ற கேள்விகள் துரத்துவதால் அதனுடன் ஒன்ற முடியாத உணர்வு!

குழந்தை தொடர்பான விசாரணை தொடங்கியதும் சுவாரஸ்யம் தொற்றிக்கொள்வது பெரும்பலம். ஆங்காங்கே வரும் சின்ன சின்ன ட்விஸ்ட்களும், அதிர்ச்சியூட்டும் இடைவேளையும் பாஸ் மார்க் வாங்குகின்றன.

ஆனால் இரண்டாம் பாதியில் பிரகாஷ்ராஜ் வரும் காட்சியினைத் தவிர்த்து மற்ற காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாதது விசாரணையை டல்லடிக்க வைத்திருக்கிறது.

காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review
காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review

க்ளைமாக்ஸை நீள வைத்திருக்கும் அந்த ஒரு 'ட்விஸ்ட்' நல்லதொரு எழுத்து என்றாலும், வரப்போகும் மற்ற திருப்பங்களை எல்லாம் நான்கு காட்சிகளுக்கு முன்னரே கணிக்க முடியுமளவுக்குத் திரைக்கதை 'வீக்'காக இருப்பது அதன் தாக்கத்தை மட்டுப்படுத்தியிருக்கிறது.

500 வீடுகளுக்கு மேல் உள்ள அபார்ட்மென்ட்டில் சிசிடிவி-க்கள் குறைவாக இருக்கின்றன எனச் சொல்லி லாஜிக் ஓட்டையை அடைத்தாலும், காவல்துறை கடைசிவரை புத்திசாலித்தனமாக எதையுமே செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பது என்ன லாஜிக்கோ!

எண்ணிக்கையில் அடங்காத துணை கதாபாத்திரங்களும், அவர்களுக்கான காட்சிகளும் 'தேவையில்லாத ஆணிகளே'!

காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review
காளிதாஸ் 2 விமர்சனம் | Kalidaas 2 Review

கதையாக, களமாக இந்த 'காளிதாஸ்' திறம்படக் கவி பாடினாலும், உள்ளடக்கத்தில் முதல் பாகம் போல இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சுவதால் இந்த முறை பரிசில் பெறாமல் வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார்.



from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*