Lee Cronin's The Mummy Review: `மம்மி'தான், ஆனால் இது `பாடி ஹாரர்' சினிமா! அச்சுறுத்துகிறதா படம்?

0

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் படத்தொடர்களில் ஒன்றான `தி மம்மி'-யை 2017-ல் டாம் க்ரூஸை வைத்து ரீபூட் செய்தது ஹாலிவுட். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு `மம்மி'. `ஈவில் டெட் ரைஸ்' இயக்குநர் லீ குரோனின் இந்த முறை `மம்மி'யை சாகசப் படமாக அணுகாமல் முழு நீள ஹாரர் படமாக மாற்றியிருக்கிறார். இந்த `மம்மி' டெரர் காட்டுகிறதா?
Lee Cronin's The Mummy Review

எகிப்தின் கைரோவில் டிவி நிருபராக பணியாற்றுகிறார் சார்லி கேனன் (ஜேக் ரெய்னோர்). மனைவி லரிசா (லையா கோஸ்டா), மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஒருநாள் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த மகள் கேட்டி காணாமல் போகிறாள். எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில், சார்லியின் குடும்பம் மெக்ஸிக்கோவுக்கு மாற்றலாகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகு கேட்டி கிடைத்துவிட்டாள் என்ற செய்தி எகிப்திலிருந்து வருகிறது. ஆனால் இப்போதிருக்கும் கேட்டி சுயநினைவின்றி மனநலச் சிக்கலோடு இருக்கிறாள். உண்மையில் கேட்டிக்கு என்ன நடந்தது, அவளால் வரும் ஆபத்துகள் என்ன என்பதை ஹாரர் விருந்தாக முன்வைக்கிறது படம்.

சார்லியாக ஜேக் ரெய்னோருக்கு அப்பாவாக, குடும்பத்தலைவராகப் பொறுப்பான வேடம். துப்பறியும் காட்சிகள், அப்பாவாகப் போராட எழுந்துநிற்கும் க்ளைமாக்ஸ் காட்சி போன்றவற்றில் தேவையான நடிப்பு. அவரின் மனைவியாக லையா கோஸ்டா, எமோஷனலான வேடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மகள் இங்கேதான் இருக்கவேண்டும் என வெடிக்கும் இடத்தில் நல்லதொரு நடிப்பு! சிறுவயது கேட்டியாக எமிலி மிட்செல் க்யூட் என்றால், பதின்பருவ கேட்டியாக நடாலி கிரேஸ் மிரட்டல்! ஹாரர் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் பாய்ச்சல் கதிகலங்கச் செய்கிறது. விருதுகள் நடாலி வசம்! மகனாக சைலோ மொலினா, இரண்டாவது மகளாக பில்லி ராய் சிறப்பான பங்களிப்பு. பல்செட்டை மாட்டும் காட்சியில் பில்லி திகிலில் உறைய வைக்கிறார். விசாரணை அதிகாரியாக மே கலாமவே, பாட்டியாக வெரோனிகா ஃபால்குன் கொடுக்கப்பட்ட வேடங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

Lee Cronin's The Mummy Review

பெரும்பாலும் வீட்டின் உட்புறங்களிலேயே படமாக்கப்பட்ட ஹாரர் காட்சிகளுக்கு அமானுஷ்யத்தைக் கூட்டிருக்கிறது டேவ் கார்பெட்டின் ஒளிப்பதிவு. கேட்டி சம்பந்தப்பட்ட ஹாரர் காட்சிகளில் வெளிப்படும் ஒலியமைப்பு, 'பாடி ஹாரர்' வகையறா காட்சிகளுக்கு நம்பகத்தன்மை கூட்டும் மேக்கப் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், அதன் வீரியத்தைப் பாதுகாக்கும் பிரையன் ஷாவின் படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்ததொரு படைப்பாக மிளிர்கிறது இந்த 'தி மம்மி'.

காணாமல் போகும் சிறுமி, வெளிச்சமே படாமல் கல்லறைக்குள் கிடந்து வெளியே வருவது, வந்தவுடன் விநோதமாக, அமானுஷ்யத் தன்மையோடு செயல்படுவது, அதனால் அவளின் குடும்பம் சந்திக்கும் ஆபத்துகள் என ஹாலிவுட் ஹாரர் டெம்ப்ளேட் கதைதான். அதை மறைக்கவும், புதுமை சேர்க்கவும் 'மம்மி' பெயரைக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதே சமயம், இதுவரை பார்த்த 'மம்மி' ரூட்டை எடுக்காமல், அதற்குள் 'பாடி ஹாரர்' எனப்படும் 'உடல் வதை' காட்சிகளை ஏகத்துக்கும் சேர்த்திருக்கிறார்கள்.

Lee Cronin's The Mummy Review

முதன்முதலில் கேட்டியைக் குளிப்பாட்டும் காட்சியில் நடக்கும் அசம்பாவிதம், கேட்டியால் பாட்டிக்கு ஆகும் சேதாரம், இறப்பு வீட்டில் நடக்கும் அச்சுறுத்தும் கலாட்டா, அதிரடிக்கும் க்ளைமாக்ஸ் என நிறையக் காட்சிகள் எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் படத்தைச் சுவாரஸ்யமானதாய் மாற்றிவிடுகின்றன. துல்லியமான ஒலியமைப்பு ஒவ்வொரு ஹாரர் காட்சியையும் மறக்க முடியாத அனுபவமாய் மாற்றியிருக்கிறது.

கேட்டிக்கு என்னவானது என்பதற்குக் கொடுக்கப்பட்ட ஏகத்துக்கும் அதிகமான பில்டப்புக்கு நியாயம் செய்யாத பின்கதை ஏமாற்றமே! எகிப்து வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பழங்கதைகள் அதன் அடிப்படை என்றாலும் அவை அனைத்துமே பிற படங்களில் பார்த்தவை என்பதுதான் இந்த ஏமாற்றத்துக்கான காரணம். இப்படி நிறையப் படங்களிலிருந்து ஒவ்வொரு கொத்தாக எடுத்தே மூட்டையைக் கட்டியிருப்பதுதான் இந்த 'மம்மி'யின் மைனஸ்!

Lee Cronin's The Mummy Review
`பாடி ஹாரர்' அனுபவத்துக்காகவும், `மம்மி' காட்சிகளுக்காகவும், தொழில்நுட்ப ரீதியிலான மிரட்டலுக்காகவும் வேண்டுமானால் இந்தப் படத்தை ரசிக்கலாம். ஆனால், `ஸ்ட்ரிக்ட்லி அடல்ட்ஸ் ஒன்லி!'


from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*