Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

0

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள்.

நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம், அப்போது ஏற்பட்ட பனிச்சரிவினால் தொலைந்து போய்விடுகிறது.

யார் கைகளுக்கும் அது போய்விடக் கூடாது என்பதற்காக, அதனைப் பாதுகாக்க ரா உளவாளியான பரமேஷ்வர் பிரதாபைச் (சரத்குமார்) நியமிக்கிறது இந்தியா.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

பல வருடங்கள் அதனை அவர் கண்காணித்து வந்தாலும், அவரை மீறி 2026-ல் அந்த அணு சாதனத்தை ரஷ்யா எடுத்துவிடுகிறது. ரஷ்யாவிடமிருந்து அதனை மிஸ்டர் எக்ஸ் என்கிற அடையாளமற்ற நபர் எடுத்துவிட முயல்கிறார்.

இதன் பிறகு ஏற்படும் பிரச்னைகள் என்ன? இதனை கௌதம் & டீம் எப்படிச் சரி செய்கிறார்கள்? அணு சாதனத்தை எடுத்துக்கொள்ள நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் யார் என்பதுதான் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இந்த ஸ்பை ஆக்ஷன் சினிமாவின் கதை.

மிடுக்கான தோற்றத்துடன், நாட்டுக்காகக் கடல் மலை தாண்டியோடும் ரா உளவாளியாக ஆக்ஷன் களத்தில் நச் ரகம் காட்டியிருக்கிறார் ஆர்யா.

ஆனால் எமோஷனல் ஆட்டத்தில் தன்னுடைய வழக்கமான பாணியையே கடைப்பிடித்து ஏமாற்றமளிக்கிறார்.

சுற்றிநடக்கும் அத்தனை பிரச்னைகளையும் அநாயசமாகக் கையாளும் வில்லனாக நடிப்பில் மாற்றம் காட்டி பாஸ் மார்க் பெறுகிறார் கௌதம் ராம் கார்த்திக்.

ரா அமைப்பின் தலைமை அதிகாரியாக மஞ்சு வாரியர் நடிப்பில் தீவிரமான முகபாவனைகளால் மெடல்கள் வாங்கிக் கொள்கிறார்.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

தோட்டா தெறிக்கும் ஆக்ஷன் காட்சியிலும் ஆடிப்பொலி ஆட்டம்! சரத்குமார், இறுக்கத்துடன் இருக்கும் அவருடைய வழக்கமான நடிப்பையே தந்து போயிருக்கிறார்.

இவர்களைத் தாண்டி அனகா, ரைசா வில்சன், அதுல்யா ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். மூவரின் கதாபாத்திரங்களிலும் இன்னுமே ஆழம் சேர்த்திருக்கலாம்.

இவர்களோடு காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், மோகன் ராம் ஆகியோர் அவரவர் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.

கடல், பாலைவனம், ரகசிய கூடங்கள் என ரா உளவாளிகளுடன் ஏழு கடல் ஏழு மலை ஏறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட். ஆக்ஷன் காட்சிகளுக்கு இவர் கையாண்டிருக்கும் யுக்தியும், அதனை மெருகேற்றிக் காட்டியிருக்கிறது.

படத்தின் வேகத்தைச் சீரான நிலையிலேயே வைத்திருக்கும் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, குழப்பமூட்டும் கதை சொல்லலைக் கவனித்திருக்கலாம்.

ஆக்ஷன் காட்சிகளில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரத்தையும் கூர் நோக்கியிருக்கலாம். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், 'ஹையோடி' பாடலில் மென்மையான வைப் தந்திருக்கிறார்.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

அதோடு, இடையிடையே வரும் ஆங்கிலப் பாடல்களில் சில பகுதிகள் மட்டுமே நம் கவனத்தைப் பெறுகின்றன. ரா உளவாளிகள் குழுவுடன், அவரின் பின்னணி இசையும் ரகசியமாக உடன் நின்று மிஷனை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறது.

ஸ்டன்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, படத்திற்கு அடர்த்தியான ஆக்ஷன் நிறம் சேர்த்திருக்கிறது.

பாதுகாக்கப்படும் அணு சாதனம், அதனை அடைய நினைக்கும் மிஸ்டர் எக்ஸ் டீம், இவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்டும் கௌதம் & டீம் என்பதாக இந்த ஸ்பை ஆக்ஷன் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.

பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்படும் அணு சாதனம் கண்டுபிடிக்கப்படுவது, அந்த நேரத்தில் சென்னையில் நடக்கும் ஜி20 மாநாடு, இந்தப் பரபரப்பான சூழலில் இந்தியாவின் ரா உளவாளிகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள் எனப் படத்திற்குப் பல அடுக்குகளுடன் சுவாரஸ்யமூட்டும் அடித்தளத்தையும் போட்டிருக்கிறார் இயக்குநர்.

கௌதம் கார்த்திக்கின் அமரன் கதாபாத்திரம் மூலம் வரும் அந்த முதல் ட்விஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

ஆனால், முதல் அரை மணி நேரத்திற்குப் பிறகான திரைக்கதையில் எங்கும் முழுமையில்லை.

இரண்டாம் பாதியிலும் அந்தக் குழப்பங்களுக்கு லாஜிக்கற்ற விடைகளையே தந்து போகிறது திரைக்கதை. இந்தக் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டும் அடிப்படையான லாஜிக்குகளைக்கூடத் தியாகம் செய்திருப்பது நியாயமா இயக்குநரே!

அமரன் கதாபாத்திரம் யார், அவருடைய பிளாஷ்பேக் என்ன, எப்படி அவர் நல்வழியிலிருந்து திசை மாறினார் என்பதற்குப் போதிய விவரங்களும் தராமல் ஓடியிருக்கிறார் இந்த 'மிஸ்டர் எக்ஸ்'.

ரைசா கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளும், அவருக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருக்கும் திருப்பங்களும் போதாமைகளாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

உளவாளிகளின் பர்சனல் பக்கத்தையும் காட்டுவதாகத் தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் எமோஷனல் கதையும் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்காமல் கடந்து போகிறது. ட்விஸ்ட்கள் பலவற்றை இயக்குநர் அடுக்கியிருந்தாலும், அவற்றின் பின்கதைகளுக்குப் போதிய விளக்கங்கள் கொடுக்கப்படாததால், எந்தக் காட்சியும் சர்ப்ரைஸ் தரவில்லை.

Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்
Mr. X Review | மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

மிகப் பாதுகாப்பான இடங்களில் வில்லன் கேங் அவ்வளவு எளிதாக நுழைவது உள்ளிட்ட இரண்டாம் பாதியின் பல சம்பவங்கள் கேள்விகளை மட்டுமே எழுப்பி க்ளைமாக்ஸை எட்டுகிறது.

க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்கள் சமாளிக்கப்பட்டிருக்கும் விதமும் உருட்டல் ஆட்டமே! நாலைந்து டெக்னிக்கல் விஷயங்கள், புரோட்டோக்கல் பெயர்களை வைத்து லாஜிக் ஓட்டைகளை அடைக்க முற்பட்டிருப்பதும் குபீர் ரகமே!

முதல் ஓவரில் அதிரடி காட்டும் மிஸ்டர்.எக்ஸ், அதன்பிறகு மழை பெய்த டெஸ்ட் மேட்ச்சாக ஏமாற்றமளிக்கிறார். முதலில் ஸ்பைகளை சினிமாவிடமிருந்து யாரேனும் காக்கட்டும்!


from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*