Michael Review: ஆட்டத்தை நிறுத்திடாத பெரும் கலைஞனின் கதை - ஆனால் முழுமையான பயோபிக்காக இருக்கிறதா?

0

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கிறது மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் படமான `மைக்கேல்' (Michael). ஒருபுறம் உலக பாக்ஸ் ஆஃபிஸில் இதுவரை எந்த பயோபிக் படமும் செய்யாத வசூல் சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்க, இன்னொருபுறம் படம் குறித்து பார்வையில் விமர்சகர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே ஒரு பனிப்போரே தொடங்கியிருக்கிறது.

பாப் உலகின் முடிசூடா அரசனாகக் கருதப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையின் முதல் அத்தியாயத்தைத் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது 'மைக்கேல்'. தனது சகோதரர்களையும் உள்ளடக்கிய 'ஜாக்சன் 5' இசைக்குழு மூலம் எப்படி 10 வயதிலேயே அவர்மீது புகழ் வெளிச்சம் விழுகிறது, கண்டிப்பான தந்தையின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவித்த மைக்கேல் எவ்வாறு அந்தப் பிடியிலிருந்து விலகி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பதே படத்தின் மையக்கரு.

Michael Review

வழக்கமான வாழ்க்கை வரலாற்றுக் கதையாக அல்லாமல், முக்கிய தருணங்கள், கான்சர்ட் பர்பாமென்ஸ், ஹிட் பாடல்கள் உருவான பின்னணி என முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகக் கதை சொல்லப்படுகிறது. உலகையே கட்டிப்போட்ட குரலும், பார்ப்பவரை மயக்கிய நடனமும் கொண்டிருந்த மைக்கேல் ஜாக்சன், தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிக்கும் தனிமையும், தந்தையின் கண்டிப்பால் அவர் கொண்டிருந்த உளவியல் சிக்கல்களும் படத்தில் நுணுக்கமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. விலங்குகள் மீது கொண்டிருந்த ஆர்வம், தோல் நிறமாற்றம், தொண்டு நடவடிக்கைகள், ஊடகங்களிலிருந்து பெரிதும் விலகியிருந்த காரணம், குழந்தை சுபாவம் என உலகம் அறிந்த மைக்கேல் ஜாக்சன் விஷயங்களின் பின்னணியும் ஆங்காங்கே சொல்லப்படுகிறது. மைக்கேல் அன்று எத்தனை பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்தார் என்ற மிரட்சியையும் சரியாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார்கள்.

மைக்கேல் ஜாக்சனாக அவரது சகோதரரின் மகன் ஜஃபார் ஜாக்சன் நடித்திருக்கிறார். துடிப்பும் அப்பாவித்தனமும் கொண்ட இளம் வயது மைக்கேலை உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார். உடல்மொழி, தோற்றம் என அப்படியே மைக்கேல் ஜாக்சனாக மாறியிருக்கிறார். மிகவும் சவாலான அவரது துள்ளல் நடனத்தையும் அதே எனர்ஜியுடன் திரைக்குக் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் ஜஃபார். இன்னொருவர் நடிக்கிறார் என்பதையே மறக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பே படத்தின் மிகப்பெரும் பலம். சிறுவயது மைக்கேலாக வரும் ஜூலியானா வால்டி குறுகிய நேரமே வந்தாலும் வசீகரிக்கிறார்.

Michael Review

தொழில்நுட்ப ரீதியாக மியூசிக்கல் பயோபிக் படங்களுக்கு புதிய மைல்கல் இந்த 'மைக்கேல்'. வெளிச்சம் - இருள்; மேடை - தனிமை என மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையின் நேரெதிர் பக்கங்களைச் சிறப்பாகப் படமாகியிருக்கிறது டியோன் பிபியின் கேமரா. கான்சர்ட் காட்சிகளையும் பிரமாண்டம் குறையாமல் திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார். த்ரில்லர், பில்லி ஜீன், பீட் இட் போன்ற மைக்கேல் ஜாக்சனின் உலகளாவிய ஹிட் பாடல்களை அப்படியே ரீ-க்ரியேட் செய்யக் கடுமையாக உழைத்திருக்கிறது இயக்குநர் அன்டோயின் ஃபுகுவா தலைமையிலான படக்குழு.

உலகளாவிய ஹிட் பாடல்கள் மட்டுமின்றி மைக்கேல் ஜாக்சனின் சில ஆரம்பக்கட்ட பாடல்களையும் இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது படம். அதன் விளைவாகவே மீண்டும் ஸ்பாட்டிஃபை சார்ட்ஸில் டாப் இடங்களுக்கு முன்னேறி இன்றைய பாடல்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன சில எம்.ஜே கிளாஸ்சிக்ஸ்!

இப்படி நிறைகள் அதிகம் இருந்தாலும், ஒரு முழுப்படத்தை தாங்குவதற்கான திடமான கருப்பொருள் இல்லாதது படத்தின் முக்கிய குறை. சட்டரீதியான சிக்கல்கள் இருந்ததால் கடைசி நேரத்தில் குழந்தை வன்கொடுமை வழக்கு தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டு, சில காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து படத்தை முடித்திருக்கிறார்கள். இதனால் பாதியிலேயே படம் முடிந்துவிடும் உணர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. 'அவர் கதை தொடரும்' என்ற வாசகத்துடன் படம் முடிந்தாலும், சர்ச்சைகள் பற்றிப் பேசாமல் அவரது கதையின் அடுத்த அத்தியாயத்தை எப்படி முழுமையாகச் சொல்ல முடியும் என்ற கேள்வியும் அனைவருக்கும் இருக்கிறது.

இதனாலேயே, மைக்கேல் மீது எழுந்த சர்ச்சைகளை முற்றிலும் புறக்கணித்து அவரை புனிதராகச் சித்திரிக்கப் படம் முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டை விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். இதன் காரணமாகவே ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் வெறும் 38% விமர்சகர்கள் மட்டுமே படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளித்திருக்கிறார்கள். ஆனால், அதே தளத்தில் 97% ரசிகர்கள் இதை நல்ல படமென மதிப்பிட்டிருக்கிறார்கள். விமர்சகர்கள் ஒற்றை விஷயத்தை மட்டும் முன்னிறுத்திப் படத்தை விமர்சிப்பது சரியான அணுகுமுறையல்ல என்ற கருத்தும் ரசிகர்களிடம் வலுவாக இருக்கிறது.

Michael Movie Review
Michael Movie Review

மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சர்ச்சைகளைப் பேசாது என்பது எப்படியும் எதிர்பார்த்த ஒன்றே. மைக்கேலின் மரணத்திற்கு பிறகும் அவரது அழியாத புகழாலும் படைப்புகளாலும் இதுவரை 3 பில்லியன் டாலர் வருமானத்தை மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட் ஈட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, மீண்டும் மைக்கேலின் புகழை வெள்ளித்திரை மூலம் உலகமெங்கும் கொண்டுசெல்வது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்க முடியும் என்பதே நிதர்சனம்.

ஒரு யுகத்திற்கான இசைக் கலைஞனாக உலகை மகிழ்வித்தவர் மைக்கேல் ஜாக்சன். இந்த விமர்சனங்களைத் தாண்டி, அவரின் தாக்கம் அறியாத இன்றைய தலைமுறையினருக்கும் அவரது கான்சர்ட்டுக்கு சென்றுவந்த அனுபவத்தைக் கொடுப்பதில் வெற்றிபெறுகிறது `மைக்கேல்'.


from Movie Review | திரை விமர்சனம்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*