மகள் பினுவின் (அனகா ரவி) அறுவை சிகிச்சைக்காக, கேரளாவிலிருந்து சென்னை வருகிறார் பினுவின் தந்தை (இந்திரன்ஸ்). சென்னைக்குப் புதியவர்கள் என்பதால், வழி தவறிச் சென்றுவிடும் பினு மற்றும் அவரின் தந்தையிடம் திருடர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பினுவின் அறுவை சிகிச்சைக்குப் பணம் திரட்டுவதற்காக வைத்திருந்த நகைகளையும் அந்தத் திருடர்கள் திருடிவிடுகிறார்கள். இதனால், போலீஸ் மற்றும் கோர்ட் உதவியை நாடுகிறார் பினுவின் தந்தை.

கருப்பு விமர்சனம் | Karuppu Review

ஆனால், அங்கு அநீதிக்குத் துணைபோகும் வழக்கறிஞராக இருக்கும் பேபி கண்ணன் (ஆர்.ஜே.பாலாஜி) பினுவின் தந்தையுடைய அப்பாவித்தனத்தைப் பயன்படுத்தி ஏமாற்ற நினைக்கிறார். பேபி கண்ணன் தொடர்ந்து தங்களை அலைக்கழிப்பதால் வெறுப்பாகும் பினுவின் தந்தை, நீதி தரும் வேட்டைக் கருப்பசாமிக்கு, மிளகாய் சாந்து தேய்த்து வேண்டுகிறார். இதன் பிறகு கருப்பன் (சூர்யா) இறங்கி வந்து ஆடும் ஆட்டமே ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் இந்த 'கருப்பு'.

Karuppu: இறுதியாக திரையை எட்டும் 'கருப்பு' - படம் தாண்டிய தடைகள் என்னென்ன?

வேட்டை கருப்பு அவதாரத்தில் வந்திறங்கி நடிப்பில் சூர்யா ஆடியிருப்பது பேயாட்டம்! மக்களின் துன்பங்களைக் கண்டு துடிப்பவராக எமோஷனல் எல்லையிலும், அவர்களுக்காக நீதி பெற்றுத்தர ஆக்ஷன் எல்லையிலும் சூர்யா தந்திருப்பது நச் தரிசனம்! வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி, காமெடிகளைக் கொஞ்சம் மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு நடிப்பில் தேவையான மீட்டரைக் குறைவின்றித் தந்திருக்கிறார். கருப்பனின் ஆட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் த்ரிஷா, கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். ஆனால், லிப் சின்க்கில் தடுமாறியிருப்பது துருத்திக்கொண்டு தெரிகிறது.

கருப்பு விமர்சனம் | Karuppu Review

ஏமாற்றுபவர்கள் குணம் அறியாமல் அனைத்தையும் அப்பாவித்தனத்துடன் கையாள்பவராக தன் அனுபவத்தைக் காட்டியிருக்கிறார் இந்திரன்ஸ். படத்தின் எமோஷனல் கட்டடத்திற்குத் தூணாகவும் இருந்திருக்கிறது இந்திரன்ஸின் நடிப்பு. இதற்கு அனகா ரவியும் உதவியாக இருந்து, கதாபாத்திரம் கோரும் அழுத்தத்தைத் தாராளமாகத் தந்திருக்கிறார். ஊழல் கரை படிந்த கோட் அணிந்து வரும் நீதிபதியாக நடிகர் நட்டி சுப்பிரமணியம் நம் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இவர்களைத் தாண்டி ஸ்வாசிகா, ஷிவதா, நமோ நாராயணா, மன்சூர் அலி கான், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், தீபா ஷங்கர், லொள்ளு சபா மாறன் ஆகியோர் அவரவர் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

Karuppu: "ஊழியர் ஒருவரின் தவறால்..." - கருப்பு படக் காட்சிகள் இணையத்தில் கசிந்தது எப்படி?

தனது டிரேட்மார்க் ஸ்லோ மோஷன் ஷாட்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி வேட்டை கருப்பனின் ஆட்டத்தைப் பிரமாண்டத்தோடு திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு. வேகத்திற்குத் தடையில்லாமல், விறுவிறுப்புடன் காட்சிகளை வெட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன். ஆனால், அளவிற்கு அதிகமாக நீளும் க்ளைமாக்ஸை, கருப்பனின் அரிவாளைக் கடன் வாங்கிச் சீவியிருக்கலாம். 'காட் மோட்', 'ராத்து ராசன்', 'கருப்பாகூட வா', 'வெரப்பா' எனப் பாடல்களில் கருப்பனுக்குச் சுருட்டு, கிடாக்கறி அடங்கிய படையலைப் பரிமாறியிருக்கிறார் சாய் அபயங்கர்.

கருப்பு விமர்சனம் | Karuppu Review

பின்னணி இசையிலும், நாக்கைத் துருத்திக் கொண்டு நிற்கும் துடிப்பான கருப்பனுக்கு மேலும் ஆவேசத்தை ஏற்றியிருக்கிறார். நீதிமன்ற வளாகம், கருப்பசாமி கோயில்கள், மார்க்கெட் எனக் கலை இயக்குநர் அருண் வெஞ்சாரமூடு தனது வேலையைச் செவ்வனே செய்திருக்கிறார். படத்தின் ஃபேண்டஸி விஷயங்களைக் கைதூக்க உதவும் கிராபிக்ஸுக்கு இன்னும் கவனத்தைக் கொடுத்திருக்கலாம்.

Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி

நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்காகக் கருப்பனே வந்திறங்கி நீதி பெற்றுத் தரும் கதையைப் ஃபேண்டஸியைக் கலந்த கமர்ஷியல் ஹைவேயில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி. நீதி வேண்டிச் செல்லும் நீதிமன்றத்திலேயே ஊழல் அழுக்குகள் சூழ்ந்திருப்பது, அதனால் மக்கள் எத்தனை துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைப் படத்தின் முதல் 40 நிமிடங்கள் பேசுகிறது. இந்தக் காட்சிகளை எமோஷனல் குவியலாகவே கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. வழக்கமான ஒன்லைன்தான் என்றாலும், நடிகர்களின் முதிர்ச்சியான நடிப்பால் இந்தக் காட்சிகள் எமோஷனல் தாக்கத்தை உண்டாக்குகின்றன.

கருப்பு விமர்சனம் | Karuppu Review

இதன் பிறகு, பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கும் பிரச்னைகளைத் தனது அரிவாள் கொண்டு வேரோடு அறுக்கப் படத்திற்குள் வருகிறார் கருப்பு. கருப்பனின் வருகைக்குப் பிறகு நிகழும் சின்ன சின்ன ஃபேண்டஸி விஷயங்கள், அதனைச் சுற்றி நடக்கும் நகைச்சுவைகள் போன்றவற்றால் லேசாகக் கலகலப்பு விபூதியைத் தூவி விடுகிறது திரைக்கதை.

Karuppu: "ஏ.ஆர். ரஹ்மான் விலகிய பிறகு, சாய் அபயங்கரைத் தேர்வு செய்தது ஏன்?" - ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்

நீதியை நிலைநாட்டுவதற்காகக் கருப்பன் ஆடும் உக்கிர ஆட்டத்தோடு படமும் இடைவேளையை எட்டுகிறது. இந்த இடைவேளை காட்சியும் நல்லதொரு திரையனுபவம் கருப்பா! இரண்டாம் பாதியில் வேட்டை கருப்பன் இன்னும் தனது தீவிரமான வேட்டையைத் தொடங்குகிறார். மாஸ் கூட்டுவதற்குச் சில தருணங்களை, வேறு யூனிவர்ஸிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இருப்பினும், லாஜிக்குகளைக் கடந்து அது படத்திற்கு லாபகரமானதாகவே மாறியிருக்கிறது! கருப்பனின் 'எல்லை' விதிகள், வேட்டை கருப்பு - காவல் கருப்பு அவதாரம், அதனை மையமாக வைத்து வடிவமைத்திருக்கும் மாஸ் சண்டைக் காட்சிகளும் அதிரடி! திரைக்கதையாசிரியர்கள், இப்படியான மாஸ் காட்சிகளை அடுக்குவதில் காட்டிய முழு கவனத்தைச் சிறிதளவு இரண்டாம் பாதி கதையிலும் காட்டியிருக்கலாம்.

கருப்பு விமர்சனம் | Karuppu Review

அத்தனை பெரிய நீதிமன்றத்துக்கு ஒரே நீதிபதிதான் என்பதெல்லாம் போங்காட்டமே! கருப்பன் கடவுள் என்றவுடன் நொடியில் பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியுமே என்ற கேள்வி எழாமலில்லை. அது தொடர்பாகக் கருப்பன் செய்த சத்தியமும் இரண்டாம் பாதியில் காற்றில் பறந்திருப்பது ஏனோ?! இப்படி லாஜிக் விஷயங்களை லாங் ஜம்ப்பில் தாண்டிச் செல்வது, திகட்டச் செய்யும் க்ளைமாக்ஸ் உள்ளிட்டவை இரண்டாம் பாதியின் சில பிரச்னைகள். சாமி இறங்கி வந்து ஆடும் ஆட்டம் குறித்து, 'கோர்ட்' வாசிகள் தாண்டி பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன லாஜிக்கோ!

தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில், 'அலை ஓசை' படத்தின் 'போராடடா' பாடலைப் பயன்படுத்தியிருப்பது தவறான போக்கு ஆர்.ஜே.பி சார்!

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், சூர்யாவின் மிரட்டல் நடிப்பும், மேக்கிங்கும் நல்லதொரு திரையரங்க அனுபவமாக படத்தை மாற்றியிருக்கிறது.

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a