வேற்றுக்கிரக வாசிகள் குறித்த பன்னெடுங்கால ரகசியத்தை (?) உலகின் 8 பில்லியன் மக்களுக்கு அம்பலப்படுத்தும் முயற்சியே இந்த `டிஸ்க்லோஷர் டே' (Disclosure Day).

சயின்ஸ் பிக்ஷன் - ஏலியன்ஸ் காம்போவில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படம் என்றாலே அதற்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஏலியன்கள் குறித்து அவர் எடுத்த 'Close Encounters of the Third Kind', 'E.T. (Extra Terrestrial), 'War of the Worlds' என அனைத்துமே இன்றுவரை கிளாசிக்காகக் கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட தன் ஃபேவரைட் ஜானருக்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்!

Disclosure Day Review

உலகமே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்திலிருக்க, 'வார்டெக்ஸ்' (Wartex) என்ற நிறுவனத்தின் ரகசிய, பாதுகாக்கப்பட்ட கோப்புகளையும், ஒரு மர்மமான கருவியையும் திருடிவிடுகிறார் அந்நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டியில் பணியாற்றும் டேனியல் கெல்னர் (ஜாஷ் ஓ'கானர்). அவரை அந்நிறுவனத்தின் சிஇஓ (காலின் ஃபிர்த்), தன் படைகளுடன் துரத்த, தன் காதலியுடன் தப்பி ஓடுகிறார் கெல்னர்.

மறுபுறம் கான்சாஸ் நகரத்தில், டிவி வானிலை அறிவிப்பாளராக இருக்கும் மார்க்கரேட் ஃபேர் சைல்டுக்கு (எமிளி பிளன்ட்) திடீரென அதீத நுண்ணறிவுத்திறன், ஒருவரைப் பார்த்தவுடன் அவர்களின் வரலாற்றையே அறிந்துகொள்ளும் திறன் போன்றவைக் கிடைக்கின்றன. கெல்னர் திருடிய ஃபைல்களில் இருக்கும் ரகசியம் என்ன, அவரை வழிநடத்துவது யார், மார்க்கரேட்டின் சக்திகள் இவர்களுக்கு எப்படி உதவப்போகின்றன என்பதை ஆக்ஷன் த்ரில்லராக சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தடவி பரிமாறியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

கதை நாயகியாக எமிளி பிளன்ட், அசாத்திய நடிப்பால் தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார். மேக்கப் போட்டுக்கொண்டு ரெடியாகி, ஸ்டூடியோவில் ஒருவருடன் கொரிய மொழியில் உரையாடிவிட்டு, மீண்டு நடந்து வானிலை அறிக்கை சொல்லும் இடத்துக்குச் செல்வது வரையிலான சிங்கிள் ஷாட் காட்சியில் மிரட்டல் நடிப்பு! ரயிலுக்குள் நிகழும் அவரின் 'எமோஷனல்' அழுகை, இறுதிக் காட்சியில் தன் வீட்டைப் பார்த்துக் கலங்கும் நொடிகள், தன் சக்திகளைத் தடுமாற்றத்துடன் அவர் கையாளும் விதம் என அம்மணியின் நடிப்புக்கு இன்னும்கூட உதாரணங்களை அடுக்கலாம். அமைதியான 'இன்ட்ரோவெட்' முகத்துடன் ஜாஷ் ஓ'கானர், எமோஷனல் மற்றும் ஆக்ஷன் மீட்டர்களைக் கச்சிதமாக அளந்திருக்கிறார். 'உண்மைகள் மக்களின் சொத்து' என்பதை வலியுறுத்தும் அவரின் வசனங்கள் பக்கபலம்!

Disclosure Day Review

படத்தின் பிரதான வில்லனாக காலின் ஃபிர்த், விடாகொண்டனாக, தன் பிடியைத் தளர்த்தாமல் சமர் செய்து திகிலூட்டுகிறார். அந்த மர்மக் கருவியை வைத்து அவர் நிகழ்த்தும் 'விசாரணை' மாயாஜாலங்கள் மாஸ்! ஜேனின் காதலியாக, சம்பிரதாய கதாபாத்திரமாக மாறவிருந்த ஈவ் ஹாவ்சனின் பாத்திரத்தை மத நம்பிக்கை உள்ளவராகக் காட்டி, படத்தின் மையக்கரு சம்பந்தமான விவாதத்துக்கு அவரைப் பயன்படுத்தியது ஸ்பீல்பெர்க் டச்! மார்க்கரேட்டின் காதலனாக கர்ட் ரஸல் ஆங்காங்கே நகைச்சுவைக்கு உதவியிருக்கிறார். பெரும்பாலும் போனில் மட்டுமே உரையாடி நாயகனை வழிநடத்தும் வேடத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் கோல்மேன் டொமிங்கோ. இறுதிவரை விட்டுக்கொடுக்காத போர்வீரனாக ஹென்றி லாய்டு ஹ்யூக்ஸ் சண்டைக்காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

ஸ்பீல்பெர்க்கின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஜனூஸ் கமின்ஸ்க்கி (Janusz Kamiński), இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் இருவரும் இந்த ஆக்ஷன் படத்தின் வேகத்துக்கும் சுவாரஸ்யத்துக்கும் பலமான தூண்களாக மாறியிருக்கின்றனர். காருக்குள்ளேயே அதிகம் சுழலும் கேமரா, ஒவ்வொரு காட்சியும் ஷாட்களாக பிரிக்கப்பட்ட விதம், சட்டகத்துக்குள் இடம்பெறும் விஷயங்கள் சொல்லும் நுட்பமான கதை என இயக்குநர் - ஒளிப்பதிவாளரின் பேருழைப்பு பிரமிக்கத்தக்கது. குறிப்பாக டிரெயின் சேஸிங் காட்சி, டிரேட்மார்க் ஹாலிவுட் மசாலா என்றால், தொடக்கத்தில் இடம்பெறும் கார் சேஸிங் படமாக்கப்பட்ட விதம் புதுமை! ஜான் வில்லியம்ஸின் இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கும் ஆக்ஷன் சேஸிங்குக்கும் ஏற்றவாறு இசைந்து மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது.

Disclosure Day Review

"ஏலியன்" என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த "அரசியல்" படத்தை கமெர்ஷியல் காரம் குறைத்து வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அவரின் கதைக்கு ஏற்றவாறு எந்நேரமும் சேஸிங்கில் தடதடக்கும் திரைக்கதையை நல்கியிருக்கிறார் டேவிட் கூப். எட்டு தசாப்தங்களாக மறைக்கப்பட்ட வேற்றுக்கிரக வாசிகள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய ஃபைல்கள், உண்மைகளை வெளியே கொண்டு வரப் போராடும் குழுவினர், அவர்களுக்கு உதவும் நாயகியின் சூப்பர்பவர், நாயகனின் அறிவுத்திறன், தடுக்கப்போராடும் வில்லன்கள் என ஆடுபுலி ஆட்டத்துக்கு ஏற்ற ஸ்கெட்சைக் கச்சிதமாகப் போட்டிருக்கின்றனர்.

ஹாலிவுட்டுக்கு ஹாரர் பாடமெடுக்கும் Gen Z யூடியூபர்கள்!

பிரபஞ்ச ரகசியம் வெளியே வந்தால் மக்களிடம் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்; கடவுள் நம்பிக்கை, மதம், அரசியல் எனப் பல தளங்களை அது அசைத்துப் பார்க்கும்; போர்ச்சூழலில் இந்த உண்மை வெளியே வரக்கூடாது எனப் போராடும் வில்லனின் (?) தர்க்கமும் ஏற்றுக்கொள்ளும்படி இருப்பதே இந்தத் திரைக்கதையின் வெற்றி! அதே சமயம், எந்தச் சூழலாக இருந்தாலும் மக்களுக்கு உண்மைகள் கட்டாயம் தெரியவேண்டும், அது தொடர்பான முடிவுகளை அவர்களே எடுக்கவேண்டும் என ஜனநாயகத்தின் அறத்தைப் பேசுகிறது போராளிக்குழு! இந்தத் தர்க்கம் படம் முழுவதும் இழையோடுவது அலாதியான திரையனுபவம்.

Disclosure Day Review

படமாக்கப்பட்ட விதத்திலேயே சாதாரண காட்சிகள்கூட த்ரில்லராக, உணர்வுபூர்வமான உரையாடலாக மாறி நிற்பது நிச்சயம் ஸ்பீல்பெர்க்கின் மேஜிக்கல் திரைமொழியால் மட்டுமே! `Full Disclosure' என்பதாக டிவி சேனலில் அரங்கேறும் அந்த இறுதி அத்தியாயம் அட்டகாசமான திரை அனுபவம்! இதைத்தான் ஹாலிவுட் கடந்த சில வருடங்களாக மிஸ் செய்ததோ?!

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

அதே சமயம், மூன்றாம் உலகப் போர்ப் பின்னணியில் ஆழமில்லை. மக்கள் மாபெரும் சிக்கலில் இருக்கிறார்கள் என்பது எங்குமே ஆழப்பதியாததால், "ரகசியங்கள்" குறித்த தர்க்கங்கள் சில இடங்களில் நீர்த்துப்போகின்றன. இதனாலேயே டக்கென முடியும் க்ளைமாக்ஸ் அசத்தலான ஹைக்கூ என்றாலும், சொல்லவந்த மெசேஜ் சற்றே வலுவிழந்த உணர்வு!

எமிலி பிளன்ட்டின் கதாபாத்திரத்தின் சூப்பர்பவர்கள் குறித்து இன்னுமே தெளிவாக விளக்கியிருக்கலாம். தொழில்நுட்பம் இத்தனை முன்னேறிவிட்ட காலத்தில், ரகசிய கோப்புகளை ஆன்லைனில் வெளியிட்டு பிரச்னையை முடிக்காமல், டிவி ஸ்டேஷன், பவர்கட் செய்யப் போராடும் வில்லன்கள் எனத் தலையைச் சுற்றி டேபிளை உடைப்பது ஏனோ?! ஏலியன்கள் குறித்த வீடியோக்கள் அதிர்ச்சிதான் என்றாலும், அதே டெம்ப்ளேட்டில் ஆயிரக்கணக்கான ஃபேக் வீடியோக்களைப் பார்த்துச் சலித்துவிட்ட இணைய சமூகம் இதற்கெல்லாம் பேரதிர்ச்சியாவது போங்காட்டம் சாரே!

Disclosure Day Review

குறைகளை மறைந்து, நிறைவான ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் சினிமாவைப் பார்க்கவும், இன்னும் தீரம் குறையாத ஸ்பீல்பெர்க்கின் மேக்கிங்கைப் பார்த்து ரசிக்கவும் நிச்சயம் தியேட்டருக்கு விசிட்டடிக்கலாம்!

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a
Disclosure Day Review: ஏலியன்ஸ் குறித்த ரகசியங்களை வெளிக்கொண்டு வருகிறாரா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்?
June 14, 2026
0