பெரம்பூரில் வசித்து வரும் சிருமாமில்லா சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்) குழந்தைகளுக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே ஆங்கிலோ இந்தியன் பெண்ணான மேஜிக் (ரம்யா ரங்கநாதன்) மீது கிருஷ்ணாவுக்குக் காதல். ஆனால், அப்போது 'காதல் வேண்டாம். நாம் பிரண்ட்ஸ்' என மேஜிக் சொல்லிவிடுகிறார்.

Anbe Diana Review | அன்பே டயானா விமர்சனம்

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் காதல் துளிர்விடுகிறது. இந்தக் காதல் வெற்றி பெற்றதா, சுயசாதிப்பற்று கொண்ட, கண்டிப்பான தாயார் சரளாவால் (ரோஜா) கிருஷ்ணாவுக்கு எப்படியான சிக்கல்கள் வருகின்றன என்பதை காதல் மற்றும் காமெடி ரூட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன்.

நூறு சாமி விமர்சனம்: அம்மா, சாமியல்ல மனுஷி! நெகிழ வைக்கிறதா மறுமணம் குறித்த எமோஷனல் டிராமா?

தந்தையிடம் நட்பு, அம்மாவிடம் பயத்தோடு வரும் மரியாதை, காதலியிடம் ஆர்வமும், வெறுப்பும் காட்டும் முகம் என இந்தக் காதல் கதைக்குத் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார் பாரி இளவழகன். க்ளைமாக்ஸில் காமெடி கலாட்டா செய்யும் இந்த சி.எஸ்.கே, 'உன் மாவுக்கடையில, மாவு வாங்குறவனெல்லாம் உன் சாதிக்காரன்தானா?' என ஓங்கிப் பேசும் இடத்தில் விசில் போடவும் வைத்திருக்கிறார்.

சட்டென வரும் கோபம், அடுத்த நிமிடமே அதை மறந்து இயல்பாய் மாறும் இடம் என நாயகி ரம்யா ரங்கநாதனின் நடிப்பும் சிறப்பு. எப்போதும் ஜாலி செய்பவராக, எப்போதும் மகனின் விருப்பத்திற்கு உடன்படுபவராகக் கலகல டோனில் சேத்தன் அதகளப்படுத்தியிருக்கிறார். 'நான் பண்ணினதுக்கு என்ன அடிக்காம என்ன பண்ணுவாங்க' என மாஸ் காட்சியைச் சட்டென காமெடியாக மாற்றும் இடமும் சிரிப்பொலி ரகளை! அந்த சிங்கிள் ஷாட் காட்சியிலும் அவரின் பங்களிப்பு சிறப்பு!

Anbe Diana Review | அன்பே டயானா விமர்சனம்

சாதியைத் தூக்கிப் பிடிக்கும் கண்டிப்பான தாயாக ரோஜா, அக்கதாபாத்திரம் கோரும் தேவையான அழுத்தத்தைத் தந்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி பெங்களூரு தமிழ் பேசுபவராக 'பரிதாபங்கள்' கோபி, மாமாவாக செல்முருகன், மிஸ்டர் பெர்ஃபெக்ட் தம்பி சிரஞ்சீவியாக சுதர்சன் காந்தி என அனைவருமே காமெடி ரூட்டுக்கு நெரிசலில்லாத வழியை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களோடு எமோஷனல் பகுதியில் தனது பங்களிப்பைக் குறைவின்றி தந்திருக்கிறார் அக்காவாக வரும் இஸ்மத் பானு.

பரபரப்பான பெரம்பூர் பகுதியையும், பட்டாம்பூச்சிகள் மொய்க்கும் வண்டர்லேண்டையும் இந்தக் காதல் கதைக்கு ஏற்ற மொழியில் விஷுவல்களாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். இரண்டாம் பாதியில் காதல் + காமெடி என்ற அளவைக் கச்சிதமாகக் கவனித்துக் கொண்ட படத்தொகுப்பாளர் பார்த்தா எம்.ஏ, முதல் பாதியை இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.

Anbe Diana Review | அன்பே டயானா விமர்சனம்

'மச்சான் மாட்டிக்கிட்டான்', 'தொடுவானத்தில்' எனப் பாடல்கள் 'பாகுந்திரா' ரகம்! பின்னணி இசையிலும் குறையில்லாத பங்களிப்பைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் பரத் சங்கர்.

Idhayam Murali Review: நம் இதயத்துக்கு நெருக்கமாகின்றனவா இந்த இதயாவின் ஒரு தலை ராகங்கள்?!

காதலுக்குத் தடையாக மாறும் விஷயங்களை மீறி எப்படி நாயகி மேஜிக்கை, நாயகன் கிருஷ்ணா கரம் பிடிக்கிறார் என்கிற ஒன்லைனை 'நிறைய காதல், கொஞ்சம் காமெடி' என அளவெடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன்.

கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதிசயங்கள் என விவரிப்பைத் தந்தபடி படத்திற்குள் செல்கிறது படம். அதோடு, பன்முகக் கலாசாரங்களை உள்ளடக்கிய பெரம்பூர் பகுதி, அங்கிருக்கும் பலதரப்பட்ட மக்கள் என்பதையும் தொடக்கத்திலேயே காட்சிகளின் வழி பதிவு செய்திருக்கிறார்.

பள்ளிக் காலத்தில் பூத்த காதலை, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாயகன் தொடரும் கதை லேசாகச் சோர்வின் நுனிக்கு நம்மை இழுக்கிறது. பின்பு, எதிரெதிர் விருப்பங்களைக் கொண்ட நாயகன் நாயகிக்கு இடையில் ஏற்படும் 'காதல் கடிதம்' ஆட்டங்கள் என மீண்டும் சுறுசுறுப்பை எட்டிப் பிடிக்கும் நேரத்தில் இடைவேளையை எட்டுகிறது படம்.

நாயகனின் பூமரிச சிந்தனையினால் ஏற்படும் விருப்ப மாற்றம், அதனால் மாறி மாறி ஏற்படும் 'தள்ளிப் போகாதே' கெஞ்சல்கள் என வழக்கமான டெம்ப்ளேட் காதல் கதைக்குள் போய் கதவை அடைத்துக் கொள்கிறது திரைக்கதை.

எமோஷனல் காட்சிகளை ஒட்டியே காமெடிகளும் வருவதால், அதன் தாக்கத்தின் வீரியமும் வலுவிழந்து போகிறது. பிறகு மீண்டும் காதல் கரை சேரும் க்ளைமாக்ஸில்தான் கதவைத் திறந்து பட்டாம்பூச்சியாய் பறக்கத் தொடங்குகிறது திரைக்கதை. இப்பகுதியில் காமெடியை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு செய்திருக்கும் சம்பவம் மஸ்து மஸ்தே! இப்படியான காட்சிகள் முதல் பாதியில் மிஸ்ஸிங் சாரே!

Anbe Diana Review | அன்பே டயானா விமர்சனம்

சாதியத்திற்குள் மூழ்கிப் பழமை பேசும் தாயாரின் சிந்தனையை கிருஷ்ணா ஒற்றை வசனத்தில் உடைக்கும் பகுதியில் பெப்பர் பாயா காரம்!

ஆனால், முதல் பாதியில் பூமரிச சிந்தனை கொண்டவராக இருக்கும் நாயகன், சட்டென இரண்டாம் பாதியில் நல்லவனாக மாறுகிறார். 'ஏன்னா அவர் ஹீரோ பாஸ்' என அக்கதையை வெறுமனே கடந்து போயிருப்பதும் சிக்கல் மக்கா!

தெளிவான சிந்தனையுடன் வலம்வரும் நாயகியின் விடாப்பிடியான காதலுக்கும் காரணம் இல்லையே இயக்குநரே?!

'அன்பே டயானா' நம்மை வண்டர்லேண்டிற்குள் கூட்டிச் சென்று சர்ப்ரைஸ் செய்யவில்லை என்றாலும், ஒற்றை ராட்டினத்தில் ஏற்றி அழகுப் பார்க்கிறது.

கட்டா குஸ்தி 2 விமர்சனம்: வலிமையான இரண்டாம் பாகம்தான்; ஆனால் திரைக்கதையில் மீண்டும் அதே குஸ்தியா?!

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a