சிறையிலிருந்து தப்பி வந்து கேங்ஸ்டர் அரசோடு (தலைவாசல் விஜய்) கூட்டணி அமைத்திருக்கும் தேவதாஸ் (லோகேஷ் கனகராஜ்), அவரின் குழுவினருடன் இணைந்து காவல் துறையினரிடமிருந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்கிறார். இதற்கிடையில், மற்றொரு பக்கம் காவல் துறையினர் பணத்திற்காக அப்பாவி ஒருவரைக் கொலை செய்துவிடுகிறார்கள். ஏற்கனவே 'வாண்டட் லிஸ்ட்'டில் இருக்கும் தேவதாஸ், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காகக் காவல் அதிகாரியைக் கொலை செய்கிறார்.

DC Review | டிசி விமர்சனம்

இப்படியான அடுத்தடுத்த சம்பவங்களால் காவல் அதிகாரி போஜ்ராஜின் (கிரிஷ் தயாள்) டீம், தேவதாஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளைப் பிடிக்கக் கிளம்புகிறது. தேவதாஸ் போலீஸ் பிடியில் சிக்கினாரா, அவரின் கடந்த காலம் என்ன என்பதை வேலூர் - ஈரோடு 'ஹைவேயில்' 'DC' படமாக நகர்த்திக்கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

ரக்கட் தோற்றத்தில் வெளியே கொடூர முகம் காட்டுபவராகவும், உள்ளுக்குள் ஈர உள்ளம் கொண்டவராகவும் வரும் தேவதாஸுக்கு ரத்தம் சொட்டச் சொட்ட உயிரூட்டியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். குழுவினரை நக்கலடிக்கும் பகுதியிலும், கதறி அழும் இடத்திலும் 'நச்' மார்க் பதிக்கிறார். ஆனால் கோபமும், பிற உணர்வுகளும் அடக்கி வாசிப்பது ஏனோ?! ஓங்கார கோபத்துடன் எதிரிகளைச் சுட்டுத் துரத்தும் இடம், நடுக்கங்கள் நிறைந்த நடையிலும், அடைபட்டிருப்பது பற்றிய தனது உள்ளுணர்வை எடுத்துரைக்கும் எமோஷனல் பகுதியிலும் வாமிகா கபி அழுத்தமான தடம் பதிக்கிறார். முக்கியமான வசனங்களைப் பேசிய பிறகு இவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள், அக்காட்சி ஏற்படுத்தும் தாக்கத்தையும் கூட்டியிருக்கின்றன.

DC Review | டிசி விமர்சனம்

மென்மையான நடிப்பைத் தந்திருக்கும் சஞ்சனா சிறிது நேரமே வந்தாலும் கவனம் பெறுகிறார். தேவதாஸ் டீமின் உறுப்பினர்களான அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, இவர்களை அழைத்துச் செல்லும் ஓட்டுநராக வரும் சரத் ரவி, காவல் அதிகாரி கிரிஷ் தயாள், குடும்பத்தை நினைத்துத் தவிக்கும் காவல் அதிகாரியாக பாலாஜி தேவிபிரசாத் ஆகியோர் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதில் சரத் ரவி கதாபாத்திரத்திற்கு இத்தனை இரட்டை அர்த்த காமெடிகள் ஏன் இயக்குநரே?!

நிதானமற்ற குளோஸ் அப் மற்றும் மிட் ஷாட் ட்ரீட்மெண்டில் படத்தை நகர்த்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் முகேஷ் ஜி, லைட்டிங்கிலும் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளின் கோணங்களும் மிரட்டல் ரகம்! போலீஸ் vs கேங்ஸ்டர் தீம் கதையை எவ்வித திசைதிருப்பலும் இல்லாமல் தனது கட்களால் விறுவிறுக்கச் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. 'They ain't nobody', 'ஹேங்கோவா', 'பூம் பா டிகா' எனப் பாடல்களில் அனிருத்தின் அலப்பறை கிளப்பும் ஸ்டைல்!

DC Review | டிசி விமர்சனம்

அதோடு 'விழிகளே' போன்ற மெலடி களத்திலும் வாடிவிடாத ரோஜா பூ போன்ற மென்மையைத் தந்திருக்கிறார். கிளாசிக்கல் இசை வடிவில் அவர் இசையமைத்திருக்கும் பின்னணி இசையில் வெளிப்பட்டிருப்பதும் 'பிளடி ஸ்வீட்' ஆட்டம்! சண்டைக் காட்சிகளுக்குப் பெரும் உழைப்பைத் தந்திருக்கிறார் ஸ்டன்ட் இயக்குநர் பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு. குறிப்பாக இடைவேளை காட்சி, பிளாஸ்ட்!

GDN Review: பரபர ஐடியாக்கள், அதிரடி திருப்பம்; ஆனால் ஒரு ஜீனியஸின் பயோபிக்குக்கு இவை மட்டும் போதுமா?

தேவதாஸ் - பார்வதி - சந்திரா என 'தேவதாஸ்' நாவலின் கிளாசிக் பாத்திரங்களைத் தன் உலகில் உலாவவிட்டிருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். குற்றம் செய்த போலீஸைத் தட்டிக் கேட்கும் கேங்ஸ்டர் குழு, அதனால் இந்தக் குழுவைத் துரத்தத் தொடங்கும் காவல் அதிகாரிகள் என்கிற மெல்லிய, பழக்கப்பட்ட கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் தொடக்கத்திலேயே தீவிரமாகக் கதைக்குள் செல்லும் படம், சின்ன சின்ன வசனங்கள் மூலம் கதாபாத்திரங்களின் பின்னணி, அவர்களின் மனவோட்டம், குழுவினருக்குள்ளேயே இருக்கும் மோதல் போன்றவற்றைக் காட்டிவிடுகின்றன. இதற்குப் பின் கதை 'டாம் & ஜெர்ரி' சேஸிங்கிற்குச் செல்கிறது.

DC Review | டிசி விமர்சனம்

இதில் விறுவிறுப்பு கியரை எங்கும் தவறவிட்டுவிடாமல் இறுக்கமாகத் திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் அருண் மாதேஷ்வரன் மற்றும் அருண் ரஞ்சன். இதன் பிறகு தீவிர ஆக்ஷன் படமாக அவதாரமெடுக்கும் படம், இடையிடையே கொஞ்சம் தேவையான நிதானத்தையும் எடுத்துக்கொள்கிறது. சந்திராவின் பின்னணி, அவரின் எண்ணவோட்டம், அவர் அடக்கி வைத்திருக்கும் மலையளவு கோபம், சந்திராவிடம் தேவதாஸுக்கு வரும் கனெக்ட் போன்றவை அடர்த்தியான காட்சிகளாக உருவம் பெற்றிருக்கின்றன.

OTT Corner: The Bear - Season 5, Human Vapor, 72 Hours

வழக்கமான கதாநாயகியாக சந்திரா கதாபாத்திரத்தை அமைத்திடாமல், கதையின் திருப்பத்திற்குள்ளும் அவரை இணைத்த விதம் கச்சிதம். ஆக்ஷன் காட்சிகளும், அதனை அரங்கேற்றிய விதமும் பிஸ்டல் கனம்! 'மானத்துக்கும் இங்க விலை இருக்கு', 'என்னை மாதிரி இந்த ரோஸும் பிளாஸ்டிக்' போன்ற வசனங்களில் சந்திராவின் ஆற்றாமையை நம்மிடையே கடத்துகிறார்கள் வசனகர்த்தாக்கள் அருண் மாதேஷ்வரன் மற்றும் பிராங்கிளின் ஜாகப். அதுபோல, 'இங்க போலீஸே தப்பு பண்ணா என்னயா பண்றது?' போன்ற வசனம் மூலம் சிஸ்டத்தையும் கேள்விக்கு உட்படுத்துகிறது படம்.

DC Review | டிசி விமர்சனம்

2011-ல் நடக்கும் கதையில் ஒரு சில இடங்கள் தவிர்த்து, ஒவ்வொரு முறையும் கேங்ஸ்டர்களின் இருப்பிடத்தை போலீஸ் சுலபமாகக் கண்டறிவது எப்படி, போலீஸிடம் அடிக்கடி மாட்டிக்கொள்ளும் நாயகன் அத்தனை சுலபமாகத் தப்பிப்பது சாத்தியமா போன்ற லாஜிக் கேள்விகளும் எழாமல் இல்லை. அதேபோல், சேஸிங் மட்டுமே க்ளைமாக்ஸ் வரை நீள்வது சோர்வைத் தருகிறது. மேலும், ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இந்த ஆக்ஷன் சினிமாவுக்கு அவசியமில்லையே அருண் சார்!

தொழில்நுட்பம், இசை, திரைக்கதை என ஆயுதங்கள் கொண்டு எழுந்து நிற்கும் இந்த 'டிசி', நல்லதொரு ஆக்ஷன் ட்ரீட்!

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a