பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ளும் படி நிர்மலா வற்புறுத்துகிறார்.

சிறுவயதில் தனக்கு நடந்த துயர் சம்பவத்தால் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் சஞ்சய். இந்நிலையில், நிர்மலாவுக்குத் தெரியாமல், வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மேடி (மமிதா பைஜூ) மூலமாக வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சஞ்சய்.

அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்களும், கல்யாணத்திற்கு சஞ்சய் மறுக்க என்ன காரணம் என்பதுமே வெங்கட் அட்லூரி இயக்கியிருக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் கதை.

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

பக்காவான ஆக்ஷன், அலட்டல் இல்லாத ஹியூமர், நேர்த்தியான எமோஷன் என விஸ்வநாத் கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் லுக், க்ளாஸ் மேனரிஸத்தால் படத்தைத் தாங்குகிறார் சூர்யா.

வழக்கமான சுட்டித்தனம், குறும்பு, நடனம் எனத் தன் 'மமிதாயிஸத்தால்' முதல்பாதிக்கு வண்ணம் பூசி, முழுப்படத்தையும் கலகலப்பூட்டி கவர்கிறார் மமிதா பைஜூ.

எமோஷன், கலாட்டா என இரண்டு மீட்டரையும் தன் அனுபவத்தால் எகிற வைத்திருக்கிறார் ராதிகா. ரவீனா டாண்டன், சுனில், ராஜீவ் மேனன், நாசர் ஆகியோர் கவனிக்க வைக்க, காளி வெங்கட், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியன் போன்றோர் கவனிப்பதற்குள் கலைந்து போகிறார்கள்.

பிரமாண்டம், கலர்ஃபுல், ஸ்டைலிஷ் என விரியும் படத்தின் உலகத்தைக் கச்சிதமாகக் கொண்டுவந்து ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி. குறி தவறியோடும் இரண்டாம் பாதியை இழுத்துப்பிடிக்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் நவின் நூலி.

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், சுப்லாக்ஷினி குரலில் 'பட்டாம்பூச்சிய...' பாடல் மனதில் ரிங்காரமிடுகிறது. மெல்லுணர்வுத் தருணங்களை நெருக்கமாக்கியிருக்கிறது ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஆர்ப்பாட்டமில்லாத பின்னணி இசை.

சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செய்த வெங்கி அட்லுரி!

ஒலிம்பிக் பதக்கம், விஸ்வநாத் குடும்பம், அவரின் குணம் என நிதானமாகவும், ஏற்ற இறக்கமில்லாமலும் தொடங்கும் திரைக்கதை, மமிதா பைஜூவின் வருகைக்குப் பிறகு காமெடி, கலாட்டா, சேட்டை எனக் கலகல ரங்கோலியாக மாறுகிறது. மமிதா பைஜூ-ராதிகா காம்போ காமெடியோடு, ஆங்காங்கே எமோஷன் ஏரியாவையும் கவனித்துக்கொள்கிறது.

திரையோட்டத்தில் தேவையில்லாமல் தலைக்காட்டும் ஆக்ஷன் காட்சிகளும், கதைக்குச் சம்பந்தமில்லாத சென்டிமென்ட் காட்சிகளும் ஆங்காங்கே தடைபோட்டாலும், மையக்கதையிலுள்ள கலாட்டா பார்வையாளர்களைத் தக்க வைக்கிறது. டெம்ப்ளேட்டான அப்பாவி/ஸ்ட்ரிக்ட் கதாநாயகன் என்ற பிம்பத்தை உடைக்கும் சில காமெடி காட்சிகள் கலகலப்பிற்கு பெட்ரோல் ஊற்றுகின்றன.

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

முதல்பாதியில் மையக்கதையில் ஓடிய திரைக்கதை இரண்டாம் பாதியில் எங்கெங்கோ ஓடுகிறது. தொடக்கத்தில் முதல்பாதியின் கலகலப்பை திரைக்கதை தக்க வைத்தாலும், முறையான சட்டங்களும், நடைமுறைகளும் இல்லாமல் சுரண்டலால் பாதிக்கப்படும் வாடகைத் தாய் விவகாரத்தை விளையாட்டாகவும், காமெடியாகவும் கையாள்வது அபத்தம்.

அன்பே டயானா விமர்சனம்: சாதியத்தை உடைக்கும் அன்பான அடாவடி காதல்; காமெடி கைகொடுக்கிறதா?

மேலும், 'கல்யாணக் கலாட்டா' என்ற தெலுங்கு சினிமா செட்டிற்குள் நுழையும் திரைக்கதை, மையக்கதையை மொத்தமாகவே மறந்துவிடுகிறது. நாசர், மமிதா பைஜூ, சூர்யாவின் காமெடி கலாட்டாக்கள் மட்டும் ஓரளவிற்குச் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன.

அங்கிருந்து நேராக க்ளைமாக்ஸுக்குத் தாவும் திரைக்கதை, வெறுமனே காதல், ரொமான்ஸ் என மேம்போக்காக மையக்கதையை அணுகாமல், காதலில் வயது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பேசியதற்குப் பாராட்டுகள்! ஆனால், அதற்கு பிறகு தெளிவாக ஒரு தீர்வை நோக்கி நகராமல், சுற்றிவளைத்து முடிகிறது படம்.

Vishwanath & Sons Review | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்

முதல்பாதியில் சரியான குறியில் பாய்ந்து தங்கப்பதக்கத்தை வெல்லும் படம், இரண்டாம் பாதியில் ஏகத்திற்கும் குறி தவறி வெள்ளிப் பதக்கத்தையே வெல்கிறது.

விஸ்வநாத் & சன்ஸ்: `சூர்யாவின் நடிப்பு Wow; மீண்டும் பார்க்க என்னை தூண்டுகிறது'- கார்த்தி பாராட்டு

from Movie Review | திரை விமர்சனம்

Umn news <a