மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையை சேர்ந்த பரசுராமன் உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், ``சுமார் 20 வருடங்களுக்கு மேல் மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன்.
இதனால் பல வீரர்கள் வெற்றியடைந்து பரிசுகள் பெற்றுள்ளனர். குறிப்பாக குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், போட்டிகளில் கலந்து கொண்டு நமது நாட்டிற்கு சிறப்பு செய்துள்ளார்.
மேலும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பாராலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாற்றுத்திறனாளி வீரர் தற்போது தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், ``மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு நிறைய வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் ``புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை எனினும், உருவாகும் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த விவரங்களையாவது முழுமையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போல தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறதா என சந்தேகமாக உள்ளது.
விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார்” என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்து அறிந்த, ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தெரிவித்ததோடு, இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/37vENbr
via
