வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள ஜாப்ராபேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் மகன் யோகராஜ் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (23). இருவரும் இந்திய ராணுவத்தில், சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் பணிபுரிந்துவந்தனர். யோகராஜ் ஜாப்ராபேட்டையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். அதேபோல், தீபக்கும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், யோகராஜிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் தீபக்கும், மற்றொரு நண்பரான நேதாஜி என்பவரும் நேற்று இரவு மது விருந்து கேட்டுள்ளனர்.
மூவரும் சேர்ந்து நேற்று இரவு மது வாங்கிக்கொண்டு கழிஞ்சூர் ரயில்வே கேட் அருகில் சென்று குடித்துள்ளனர். மது தீர்ந்துபோனது. மேலும், குடிக்கத் தோன்றியதால் டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேலானதால் கடை மூடப்பட்டுவிட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மதுவைப் பதுக்கி விற்பனை செய்யும் பெண்ணின் வீட்டுக்கு மூவரும் பைக்கில் சென்றுள்ளனர். வழியில், எதிரே பைக்கில் வந்த மர்ம கும்பலுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆயுதங்களுடன் இருந்த அந்த கும்பல், ராணுவ வீரர்கள் உட்பட 3 பேரையும் சரமாரியாக வெட்டியது. வயிற்றில் கத்தி குத்து விழுந்ததில், பிறந்தநாள் கொண்டாடவிருந்த ராணுவ வீரர் யோகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது நண்பர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். ஆயுதங்களால் தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்துச் சென்ற விருதம்பட்டு போலீஸார், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எதற்காக கொலைச் சம்பவம் நடந்துள்ளது என்பதுகுறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. பிளாக்கில் மது விற்ற நிர்மலா என்ற பெண்ணையும் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்தச் சம்பவம், காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2J9RFKU
via
