மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் பாண்டியன், எஸ்.ஐ.யாக பணியில் சேர்ந்து, தேனி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சில புகார்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று 2010-ல் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றினர்.
அந்த காலகட்டத்தில் மேலூர் அரசு சித்த மருத்துவர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த புகாரை விசாரித்தவர், மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 7 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முன்பணமாக 1,20,000 பெற்றபோது, அவர் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான வழக்கு 10 வருடம் நடந்து வந்தது. 10 வருடம் பணியில் இல்லாமல் மனச்சோர்வுடன் இருந்து வந்துள்ளார் பெருமாள் பாண்டியன். இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 ஆண்டு சிறை தண்டனை என்பதால் அவர் உடனே சிறை செல்லவில்லை. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய திட்டமிட்டிருந்தார்.
தமிழகத்திலயே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல் முறை என்ற பரவிய செய்திகளால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
Also Read: மதுரை: லஞ்சம் வாங்கிய வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்குச் சிறை! - நீதிமன்றம் அதிரடி
மதுரை தத்தனேரியில் வசிக்கும் பெருமாள் பாண்டியன், நேற்று மகன் வெளியே சென்றிருந்த நேரத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரான மனைவி உமா மீனாட்சியை சுத்தியலால் தாக்கி கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளியே சென்று விட்டு திரும்பிய மூத்த மகன் சுந்தர், வீட்டுக்கு வந்தபோது, பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், பின்பக்க வாசல் வழியாகசென்று பார்த்தபோது தாய் கொலை செய்யப்பட்டும், தந்தை தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி அலறினார்.
அதன் பின்பு செல்லூர் காவல் நிலைய அதிகாரிகள் வந்து விசாரித்தனர். `பெருமாள் பாண்டியன் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமல்லாமல் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகி மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது’ என்கிறார்கள் காவல்துறையினர். வேறு ஏதும் காரணம் உள்ளதா என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் செல்லூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/37tyTHy
via
