உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்த வழக்கில், பேக் செய்யப்படாத எண்ணெய்களை சில்லறை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நித்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில்...
'முந்திரித் தோலில் தயாரித்த எண்ணெய்யை சமையல் எண்ணெயில் கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை உதிரியாக விற்பனை செய்யக் கூடாது. பேக் செய்துதான் விற்பனை செய்ய வேண்டும்.
கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களை பேக் செய்யாமல் சில்லறை விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள்,
தமிழக அரசிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். அதில்,
'உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, சமையல் எண்ணெய் எவ்வாறு உதிரியாக விற்பனை செய்யப்படுகிறது?
எண்ணெய்யின் தரத்தை ஆய்வுசெய்ய அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் எத்தனை உள்ளன? அதன் விவரங்களை மாவட்ட வாரியாகத் தெரிவிக்க வேண்டும்.
இதேபோல் மற்ற மாநிலங்களில் எத்தனை ஆய்வகங்கள் உள்ளன?
கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை மாவட்ட வாரியாகத் தெரிவிக்கவும்.
பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'
மேற்சொன்ன கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இவற்றுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், தரமற்ற எண்ணெயை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mviln0
via
