கடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி

0

இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக இன்று கடலூர் வந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதி மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

மீனவர்களிடம் குறைகேட்கும் உதயநிதி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என்னுடைய முதல் பயணத்தில் நான் பேச பேச என்னை கைது செய்து கொண்டே இருந்தனர். பொதுக் கூட்டங்களிலும், வெளியிலும் என்னை பேச அனுமதிக்காமல் தொடர்ந்து தடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தை அரங்கத்திற்குள் நடத்திக்கொள்ளும்படி கூறினார்கள் காவல்துறையினர். ஆனால் தற்போது தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டுமென்பதற்காகவே கொரோனா தளர்வுகளை அறிவித்திருக்கின்றனர். திமுக பொதுக் கூட்டத்தை நடத்திவிடக் கூடாது என்பதற்காக இத்தனை நாள்கள் தடை விதித்திருந்தனர்.

தி.மு.கவின் பிரசாரத்திற்கு மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, தற்போது முதல்வர் மட்டும் தனியாக பிரசாரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்‌. அவருடன் மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சென்றது போல தெரியவில்லை. ஆனால் அ.தி.மு.கவிலிருந்து யார் பிரசாரத்திற்குச் சென்றாலும் கேள்வி கேட்க மக்கள் தயாராக இருக்கின்றனர். கடந்த 9 ஆண்டு காலமாகத் தமிழக மக்கள் பழிவாங்கப்பட்டு, அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா உள்பட அனைத்திலும் ஊழல் செய்த இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தெளிவான பதிலடி கொடுக்க தயாராக இருக்கின்றனர்.

தேவனாம்பட்டினம் மீனவர்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதில் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலைஞர் வீடு கட்டி கொடுத்தார். ஆனால் அந்த வீடுகளை தற்போது ஒரு சுனாமி வீடு ஒதுக்கீடு செய்வதற்கு ரூ.30,000 முதல் 50,000 வரை பணம் கேட்பதாக மீனவ மக்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்” என்றவரிடம் ‘பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.2,500 ரொக்கப் பரிசு அறிவித்திருக்கிறதே?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்தத் தொகையை மக்களுக்குக் கொடுக்கும்படி கூறியதே தி.மு.கதான். கொரோனா தொற்று துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் அப்போதெல்லாம் நிதியில்லை என்று கூறிவந்த தமிழக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் 2,500 ரூபாயை கொடுக்கின்றனர். ஆனால் இந்த பணம் மக்களுக்கு பத்தாது, மேலும் 2,500 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.

தொடர்ந்து ‘ரஜினியின் அரசியல் வருகையைப் பார்த்து தி.மு.க தலைவர் பயப்படுவதாக குஷ்பு கூறியிருக்கிறாரே?’ என்ற கேள்விக்கு, “அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை, அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர், தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக் கூடியவர். அப்படி இருக்கும்போது நாங்கள் அவரை பார்த்துப் பயப்பட வேண்டும்?

உதயநிதி ஸ்டாலின்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் என்ன முடிவை எடுத்தார்களோ அதேபோல இந்த தேர்தலிலும் எடுப்பார்கள் என நம்புகிறேன். கடந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்த மக்கள் எழுச்சியில் 90% தற்போது இருக்கின்றது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாங்களும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனாலும் மக்களிடம் தி.மு.க தேர்தல் பிரசாரங்களில் மக்களின் எழுச்சியைப் பார்க்க முடிகின்றது” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/38lnn0h
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*