விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள காளையார்குறிச்சி பகுதியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வந்த இந்த ஆலையில் 35 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால், அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி 4 அறைகள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், இருவருக்கு 80 சதவீதத்துக்கும் மேல் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து எம். ரெட்டியபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் விவரங்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை.
கடந்த 12-ம் தேதி அச்சங்குளத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான 'ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை'யில் விபத்து ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்தனர். மேலும்,30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 13-ம் தேதி, சிவகாசிஅருகே காக்கிவாடன்பட்டியில் ஓர் ஆலையில் விபத்து நடந்தது. இதில், ஒருவர் காயம் அடைந்தார்.
இந்நிலையில், மூன்றாவதாக காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன் பட்டாசு ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதா, ஆலையில் விதிமீறல் ஏதும் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். 'தமிழகத்தில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என்பது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவிட்டிருந்தது. ஏற்கெனவே, அச்சங்குளத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் உயிரிழந்த சோகம் விலகாத நிலையில் தொடர்ந்து இன்று நடந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பட்டாசுத் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: சாத்தூர்: பதறவைத்த பட்டாசு ஆலை தீ விபத்து... 12-ஆக அதிகரித்த உயிரிழப்பு! - பிரதமர், முதல்வர் இரங்கல்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pUxakG
via
