`அ.தி.மு.க அரசு, சாலைகள் போடுவது, போட்ட சாலைகளையே தோண்டி மறுபடி போடுவது, பாலம் கட்டுவது என ஒரு திட்டத்தில் 10 கோடி செலவு ஆகிறது என்றால் 50 கோடியில் பில் போடுகிறார்கள். 50 கோடி செலவு ஆகிறது என்றால் 300 கோடி அளவில் பில் போட்டு கமிஷன் தொகையை எடுக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் 3,384 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் விட்டு கடைசிநேர வசூலையும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கமிஷன் தொகையை எடப்பாடியும், வேலுமணியும் தான் பங்கு பிரித்துக் கொள்கிறார்கள். தி.மு.க ஆட்சி அமைந்தது அத்தனை பேரும் உள்ளே செல்வார்கள்” என்று அ.தி.மு.க அரசைக் கடுமையாகச் சாடினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி அரியலூர் அருகே உள்ள கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சோர்ந்த பொது மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தொடர்ந்து மக்கள் பிரச்னை குறித்து பெட்டியில் போடப்பட்டுள்ள மனுக்களில் எடுத்து அவர்களிடம் பிரச்னைகளை நேரடியாக கேட்டுப் பேசினார்.
``தி.மு.க அரசு கொள்கை அரசாகவும், மக்களுக்கான சேவை செய்யும் அரசாக அமையும்” என்றார். தி.மு.க ஆட்சியின் போது வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நினைவு கூர்ந்து பேசினார். ``தற்போது சாலைகளைப் போடுவது, போட்ட சாலைகளை மறுபடியும் போடுவது. பாலம் கட்டுவது தேவை இல்லாத இடத்தில் பாலம் கட்டுவது, கட்டடம் கட்டுவது இது ஒன்று தான் தமிழக முதல்வர் பழனிசாமி அரசின் வேலைகள். இதிலும் மக்கள் வைக்கும் கோரிக்கை திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை.
இதில் மட்டும் தான் துட்டு அடிக்க முடியும் என்பதால் 10 கோடி செலவு ஆகும் என்றால் 50 கோடியில் பீல் போடுகின்றனர். 50 கோடி செலவு ஆகிறது என்றால் 300 கோடியில் கமிஷன் போடப்படுகிறது. இது தான் பழனிசாமியின் ஆட்சி. கொள்ளையடிக்கக்கூடிய பாதையாக இருக்கக் கூடிய ஆட்சியாக இருக்கிறது. பொதுப் பணித்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய இரண்டிற்கு மட்டும் பணத்தை ஒதுக்கீடு செய்து அதில் பங்கு பிரிப்பவர்கள் தான் பழனிசாமியும், வேலுமணியும்.
இப்போது முதல்வராக இருக்கும் பழனிசாமி அவசர அவசரமாகப் பல டெண்டர்கள் விட்டுக் கொண்டிருக்கிறார். இது குறித்து ஏற்கெனவே ஆளுநரிடம் ஒரு புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறோம். முதல்வர் பழனிசாமி தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்குக் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு, அதில் கமிஷன் வாங்கியிருக்கிறார். சட்டத்தை மீறித் தொடர்ந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறோம்.
அதனை நீதிமன்றம் விசாரித்து ‘இதில் உண்மை இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது. ஆனால் சி.பி.ஐ விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் சென்று தடை வாங்கி வைத்திருக்கிறார். தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் 3,384 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விட்டு கடைசி நேர வசூல் செய்திருக்கிறார்கள். 3,384 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளைத் துணிச்சலாகச் செய்கிற ஆட்சிதான் இந்த அ.தி.மு.க ஆட்சி.
பொது பிரச்னைகள் எதையும் தீர்க்கவில்லை. பொது மக்களின் பிரச்னைகளை எதையும் தீர்க்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை 10 ஆண்டுகாலமாகப் பாழாக்கிவிட்டனர். ஆக மொத்தத்தில் பொது மக்களுக்கு அச்சத்தைத் தரக் கூடிய அரசாக அ.தி.மு.க அரசு அமைந்துவிட்டது. எனவே பொது மக்களின் அச்சத்தைப் போக்கும் அரசாக தி.மு.க அரசு அமையும் எனக் கூறினார். அ.தி.மு.க அரசு சொல்லிச் செய்யாததை தி.மு.க அரசு செய்யும் எனக் கூறினார். தி.மு.க ஆட்சி அமைந்தது ஊழல் செய்தவர்கள் அத்தனை பேரும் சிறைக்கு செல்வது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். ஊழல் அற்ற ஆட்சியை நாங்கள் கொடுக்க இருக்கிறோம்” என்று ஆவேசமாக பேசினார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3difQTO
via
