`40 ஆண்டுகளாக நடந்த கூட்டம் இந்த ஆண்டு மட்டும் நடக்காதது ஏன்?' - கேள்வியெழுப்பும் டெல்டா விவசாயிகள்

0

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக, முன்கூட்டியே முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு இக்கூட்டம் நடத்தப்படவில்லை. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

நெல் கொள்முதலில் நடைபெறும் லஞ்ச, ஊழல், குளறுபடிகள் குறித்து விவசாயிகள் முறையிடுவார்கள் என்பதால்தான் அக்கூட்டம் நடத்தப்படவில்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இது தொடர்பாகத் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பா நெல்

இது தொடர்பாகப் பேசிய இவர், ``கடந்த ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும், சம்பா நெல் கொள்முதலில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் தொடர்பாக, ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். தமிழக உணவு அமைச்சர், வேளாண்மைத்துறை அமைச்சர், இத்துறைகளின் செயலாளர்கள், காவிரி டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாகப் பதிவு செய்வது வழக்கம். நெல் கொள்முதலில் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் வரை விவசாயிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இது தொடர்பாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் எங்களது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தோம். இந்நிலையில்தான் இந்த ஆண்டு இக்கூட்டம் நடத்தப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. அதேசமயம் சம்பா நெல் கொள்முதல் தொடர்பாக, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

விவசாயிகளின் கருத்துகளைப் பதிவு செய்து, அதை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உணவுத்துறை செயலாளரும், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநரும் அலட்சியமாக இருக்கிறார்கள். இது ஏன் எனத் தெரியவில்லை. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியும் கூட, லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார், இதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். இது கடமை தவறிய செயலாகும். விவசாயிகளுக்கு விரோதமானது. விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியது. தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின் பறக்கும் படையும் இதைக் கண்டுகொள்வதில்லை.

சுந்தர விமல்நாதன்

இதுநாள் வரை எந்த ஓர் ஆய்வும் மேற்கொள்ளவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு நெல் கொள்முதலின்போது, விவசாயிகளிடமிருந்து சுமார் 375 கோடி ரூபாய், லஞ்சமாகக் கொள்ளையடிக்கப்பட்டு, கீழ் ஊழியர்கள் தொடங்கி, தலைமைச் செயலக அதிகாரிகள் வரை பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதே நிலை, இந்த ஆண்டும் தொடர்கிறது. நெல் கொள்முதலில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க, நடமாடும் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நான்கு ஆண்டுக்கு முன்பு அது வழக்கத்தில் இருந்தது. விவசாயிகளின் நிலத்துக்கே வந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நெல் கொள்முதல் காலதாமதத்தால் விவசாயிகள் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். நெல் முட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் நேருகிறது. கொள்முதல் நிலைய லஞ்ச ஊழல் மற்றும் காலதாமதங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்’’ என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qTczP5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*