`தமிழ் சமூகத்தை சாகும்வரை எனது நாவால் தட்டி எழுப்புவேன்!’ - மதுரை மாநாட்டில் தா.பாண்டியன் ஆற்றிய உரை

0

வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 'தா.பா' என்று அன்பாக அழைக்கப்பட்ட தா.பாண்டியன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தா.பாண்டியன் இறுதி உரை

மதுரை மாவட்டத்தில் பின் தங்கியப் பகுதியான உசிலம்பட்டி வட்டாரத்தை பூர்வீகமாகக் கொண்ட தா.பாண்டியன், அப்பகுதியில் பள்ளிக்கல்வியை தொடங்கி, காரைக்குடியில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து பேராசிரியர், வழக்கறிஞர், தமிழறிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், களப்போராளி, நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 3 முறை பணியாற்றியவர்.

அவரின் கணீரென்ற குரலும் ஆழமான கருத்தும் அனைவரையும் கவரும். அவர் கடைசியாக உரையாற்றியது கடந்த வாரம் மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டில், தன் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டார் தா.பாண்டியன்.

மதுரையில் நடந்த சிபிஐ அரசியல் மாநாடு

மெலிந்த தேகத்துடன் வீல் சேரில் அமர்ந்தபடி பேசினாலும், அவர் குரலில் எப்போதும் இருக்கும் கம்பீரம் குறையவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மீது தனக்குள்ள பிடிப்பையும், நிகழ்கால ஆட்சியாளர்கள் மீதான கோபத்தையும் தன் பேச்சில் வெளிப்படுத்தினார்.

பொது மேடையில் அவரின் இறுதி உரை, இதோ....

"எழுந்து நின்று பேச ஆசை.... உட்கார்ந்து பேசினாலும் சிறப்பாக பேசுவேன். தமிழ் சமூகத்தை சாகும்வரை எனது நாவால் தட்டி எழுப்புவேன். கம்யூனிச கொள்கையை எந்த கொம்பனாலும் வீழ்த்த இயலாது.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நிருபித்த நக்கீரர் வாழ்ந்த மதுரை மாநகரில் நடைபெறும் இம்மாநாட்டின் மூலம் வரும் தேர்தலில் நம் வெற்றியை பிரகடனம் செய்கிறோம். இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவரும் புடம் போட்ட தங்கங்கள்.

தோழர் தா.பாண்டியன்

அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் சட்டவிரோத செயல்களுக்கு தலை வணங்குகிறது. முட்டு கொடுக்கிறது. எடப்பாடிக்கு வகுப்புவாதமும், பதவிக்கு தலை வணங்கும் நோயும் வந்துள்ளது. நீங்கள் அடிமையாவதோடு தமிழ் மண்ணையும் அடிமையாக்க நினைத்தால் எந்த கொம்பானாக இருந்தாலும் தடுப்போம்.

Also Read: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!

எடப்பாடிக்கு நீதிமன்றம் மூலமாக அபாய அறிவிப்பு வந்துள்ளது. மோடி சென்னை வந்த உடனே, சின்ன வெங்காயம் விலை கிலோ 162 ரூபாயாக உயர்ந்துவிட்டது.

வங்கியில் உள்ள பணத்தை தேர்தல் செலவிற்காக சூறையாடுகிறார்கள். இதனை சுப்ரமணியசுவாமியே கூறியுள்ளார். பொருளாதாரம் தெரியாதவரே தற்போது நிதி அமைச்சராக உள்ளார்.

தா.பாண்டியன் இறுதி உரை

பா.ஜ.க-வை தமிழகத்தில் கால் பதிக்க விட மாட்டோம் என்ற சூளுரையோடு பணியாற்றுங்கள்" என்று உணர்ச்சிகரமாக பேசினார்.

``இந்த மாநாட்டுக்குப்பின் சில நாட்களில் அவருக்கு உடல் நலமில்லாமல் போக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நம்மை விட்டு பிரிந்து விட்டார் தோழர் தா.பா..." என்று கலங்குகிறார்கள் தோழர்கள்.

Also Read: "என் சிவப்புத் துண்டை என் கிட்டக் கொடுத்துடுங்கம்மா..." - எப்படி இருக்கிறார் தா.பாண்டியன்?



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uxSC2k
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*