`ரஜினியிடம் நிச்சயம் நேரில் விசாரணை நடத்தப்படும்!’ - ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் உறுதி

0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வதுநாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 25வது கட்ட விசாரணை கடந்த 22-ம் தேதி தொடங்கி இன்று (26-ம் தேதி) வரை நடைபெற்றது. தொடர்ந்து ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்த 25வது கட்ட விசாரணையில் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அருள் வடிவேல் சேகர் - ஆணையத்தின் வழக்கறிஞர்

அதில், 26 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை பிரமான பத்திரங்களாக அளித்துள்ளனர். இதுவரை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 943 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. அதில், 640 பேர் விசாரிக்கப்பட்டு உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை 1,089 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இன்னமும் ஒரு நபர் கமிஷன் விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் வருவாய் துறையினர், போராட்டத்தில் காயம்பட்ட காவலர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

ஒரு நபர் ஆணையத்தின் 26 வது கட்ட விசாரணை மார்ச் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ., 27 பேர் மீது வழக்குப் பதிந்து உள்ள நிலையில், தற்போது கல் எரிந்ததாக 44 பேரை கூடுதலாக குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. இந்த 44 பேரிடமும் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளோம். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்திற்கு அனுப்பிய சம்மனுக்கு அவரது வழக்கறிஞர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ’தன்னிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கான சாத்தியக் கூறுகள் மிக குறைவு என தெரிவித்துள்ளோம்.

ஆறுதல் கூறிய ரஜினி

வேண்டுமென்றால் சென்னையில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு வந்து விசாரணையில் ஆஜராகலாம் என கூறியுள்ளோம். எனவே, ரஜினிகாந்திடம் நிச்சயம் நேரில் விசாரணை நடத்தப்படும். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்னமும் 400-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அதனை துரிதப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் இறுதியாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ssKEpf
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*