காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக 5 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறிய நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியின் பலம் 14-14 என்ற நிலை ஏற்பட்டது. அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்துக்கு எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான், பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி, ஏம்பலம் செல்வம் ஆகியோரும் வந்தனர். அதேபோல என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, எம்.எல்.ஏ செல்வம் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
அ.தி.மு.க அலுவலகத்தில் சிறிது நேரம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி, ``காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். போதிய எம்.எல்.ஏக்களின் பலம் இல்லாததால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது. அதனால், காங்கிரஸ் அரசு தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் நாராயணசாமியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த அரசும் பதவி விலக வேண்டும். இந்த அரசு பதவி விலகாவிட்டால் எதிர்க்கட்சியினர் விவாதித்து முடிவெடுப்போம். ஒரு நிமிடம் கூட இந்த அரசு நீடிக்க முடியாது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தாமாக முன்வந்து பதவி விலகுகின்றனர். இந்த ஆட்சி மீது அவர்களுக்கே அதிருப்தி உள்ளது. ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கூட தரவில்லை. முதல்வர் நாராயணசாமி எதற்கும் ஒத்துழைப்புத் தருவதில்லை. இந்த ஆட்சி மிகவும் மோசமான அரசு. ஆள்வதற்கு லாயக்கற்ற அரசு. நாராயணசாமி தன்னால் முடியாது என்பதை எப்போதும் ஒப்புக்கொள்ளமாட்டார். மற்றவர்கள் மீதுதான் பழிபோடுவார்.
ஆட்சியின் செயல்பாடுகளை எதிர்கட்சியினர் எப்படித் தடுக்க முடியும்? எதிர்கட்சிகள் செயல்பட விடுவதில்லை என எங்கள் மீது குற்றம்சாட்டுவார். கவர்னர் மீது குற்றம் சாட்டுவார். திடீரென வாக்குறுதிகளை 85% நிறைவேற்றியதாகக் கூறுவார். முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது அவர் வழக்கம். அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளைக் கூட செயல்படுத்த முடியவில்லை. மோசமான நிலையில் புதுச்சேரி உள்ளது. ஒரு திட்டத்தைக்கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை” என்றார்.
Also Read: ’’ரங்கசாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை!’’ - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதிரடி
அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி இன்று புதுச்சேரிக்கு வந்து சென்ற பின் எந்த முடிவையும் எடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் முதல்அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் ரோடியர் மில் திடலுக்கு வந்தனர். பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``எங்கள் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/37oxjGq
via
