``என்னை அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக வெற்றி பெறவைத்தால், பிரதமர் மோடியை அரவக்குறிச்சிக்கு அழைத்துவந்து, ஆறு மாதத்திற்குள் தொகுதியில் திட்டப்பணிகளை அறிவிக்கச் செய்வேன்" என்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், அரவக்குறிச்சி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில், கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதி கூட்டணி கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் பா.ஜ.க-வின் துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தனது சொந்த கிராமம் உள்ள தொகுதியில் களமிறங்குகிறார்.
Also Read: `கரூரில் திமுக-வை செந்தில் பாலாஜி ஒழித்துக்கட்டிவிட்டார்!' - தம்பிதுரை
அரவக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பா.ஜ.க வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய, அண்ணாமலை,
"அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று, 6 மாதத்துக்குள் பிரதமர் மோடியை இதே இடத்திற்கு அழைத்து வந்து அவர் வாயால், அரவக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்க வைப்பேன். தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி 3-ல் 2 பங்கு தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளை பொறுத்தவரையில் இரட்டை இஞ்சின் பொருத்திய ரயில் போல் செயல்படும். அந்த ரயிலின் முதல்வர் பழனிசாமியும் ஒரு எஞ்சினாகவும், பிரதமர் மோடி மற்றொரு எஞ்சினாகவும் இருந்து செயல்படுகிறார்கள். நீங்கள் வேட்பாளரைப் பார்த்து, வெற்றிநடை போடும் தமிழகத்தை பார்த்து வாக்களியுங்கள்.
ஜெயலலிதா மறைந்தவுடன், அ.தி.மு.கவுக்கு பக்கபலமாக இருந்தது பா.ஜ.க தான். நான் சட்டமன்ற உறுப்பினரானதும், அரவக்குறிச்சி தொகுதியில் நீர் மேலாண்மை, வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவேன். அரவக்குறிச்சியில் பா.ஜ.க-வுக்கு விழக்கூடிய ஒவ்வொரு வாக்கும் அ.தி.மு.க-வை பலப்படுத்தும் வாக்காகவே அமையும்.
ஏதோ ஒருசில விசயங்களுக்காக வாக்கினை அடமானம் வைத்திட வேண்டாம். வரும் 5 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், எனக்கு சட்டசபையிலும் வாய்ப்பு தர வேண்டும். அப்போது, மத்திய அரசிடம் இருந்து என்னென்ன திட்டங்கள், சலுகைகளை கொண்டு வர முடியுமோ, அதைப் பெற்றுத்தந்து, மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து, அரவக்குறிச்சியில் தேர்தல் பணிமனையை, பா.ஜ.க கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி திறந்து வைத்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lwkgIX
via
