மதுரை மாநகருக்குள் உள்ள தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பழங்காநத்தத்தில் இன்று மதியம் பிரசாரம் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
பிரசாரத்தில் அவர் பேசும்போது, ``மதுரை மாநகரில் போட்டியிடும் 4 வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியை தேடித் தரவேண்டும் என்பதற்காக உங்களைத் தேடி வந்துள்ளேன். மதுரை எய்ம்ஸ் என்ற உன்னதமான திட்டம் கொண்டு வரபட்டு கிடப்பில் போடபட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் எய்ம்ஸ் பணியை விரைவு படுத்தி முடித்துக் காட்டுவோம் .
அரசியல் உள் நோக்கத்துடன் செயல்படமாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். அதிமுக ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. தமிழகத்தை அடமானம் வைத்துவிட்டார்கள். நமது உரிமைகள் பறிக்கபட்டுள்ளது
தொழில் முதலீட்டுக்காக அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் வெளிநாடு சென்றார்கள். ஆனால், இளைஞர்களுக்கு எந்தவொரு வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை.
மோடியும், பழனிச்சாமியும் போட்டி போட்டுகொண்டு வரியை ஏற்றி வருகிறார்கள். கொடுமையான ஆட்சியை ஒழிப்பதற்கு இந்த கடுமையான வெயிலில் நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள்.
வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடாது. அதே போல் பிஜேபியும் வெற்றி பெறக் கூடாது.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை நான். திமுகவில் 50 ஆண்டுகள் படிப்படியாக வளர்ந்து வந்தவன்.
திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக அரசு ஜெராக்ஸ் எடுத்து வெளியிடுகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் கதாநாயகனாக பார்க்கிறார்கள். அதேநேரம், அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வில்லனாக பார்க்கிறார்கள். வில்லன் என்று கூட சொல்ல முடியாது, காமெடி வில்லன்.
விரைவில், குடும்பத்திற்கு ஒரு ரயில், விமானம் கொடுக்கபடும் என அறிக்கை விட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சாகும்போதுதான் சிலர் சங்கரா சங்கரா என்பார்கள். அதுபோல் ஆட்சி போகவுள்ள நிலையில் இஷ்டத்துக்கு அறிவிக்கிறார்கள்.
தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூவை எதிர்த்து நிற்கும் நமது வேட்பாளர் எளிமை மிக்க சின்னம்மாள் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். மத்திய தொகுதியில் ஏற்கனவே சிறப்பாக பணியாற்றிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், வடக்கு தொகுதியில் கோ.தளபதி, தெற்கில் நம் கூட்டணி வேட்பாளர் பூமிநாதனுக்கும் ஆதரவு தர வேண்டும்.
கொரோனா பாதிப்பு குறித்து சட்டமன்றத்தில் நான்தான் முதலில் குரல் கொடுத்தேன். நான் கூறும் போது அதிமுக அமைச்சர்கள் கிண்டல் செய்தார்கள்.
இப்போதும் கொரோனா பாதிப்பு மீண்டும் வருவதாக சொல்கிறார்கள். உங்கள் அண்ணணாக, தம்பியாக கேட்டுக்கொள்கிறேன் மாஸ்க் போடுங்கள். அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுங்கள். நாம் நலமாக இருந்தால்தான் நம் குடும்பத்தை கவனிக்க முடியும் " என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vy3FJt
via
