தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக, கடந்த 12-ம் தேதி மதியம், போடி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓ.பி.எஸ். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து விவரங்கள் ஏதும் இடம்பெறவில்லை. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலகர்களிடம் கேட்ட போது, ``வேட்புமனு தாக்கல் செய்ய கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யலாம்” என்றனர். அதன்படி, ஓரிரு நாள்களில், ஓ.பி.எஸ் தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நேற்று, தனது சொத்துப்பட்டியலை தாக்கல் செய்தார்.!
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி ஆகியோரின் அசையும் சொத்து விவரங்கள்:
ஓ.பன்னீர்செல்வத்திடம் கையில் ரொக்கப் பணமாக 23,500 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியிடம் 3,82,500 ரூபாயும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் பெயரில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில், வைப்புத்தொகையாக 11,42,698 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமி பெயரில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகையாக 23,98,824 ரூபாய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: தேனி : `1+20; தேர்தல் விதிகளை மீறிய ஓ.பி.எஸ்!’ - நடவடிக்கை பாயுமா?
எந்த ஒரு நிறுவனதுக்கோ அல்லது தனி நபருக்கோ ஓ.பன்னீர்செல்வம் கடனாக பணம் கொடுக்கவில்லை என்றும், அவரது மனைவி விஜயலெட்சுமி, தனது கணவர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 65,55,411 ரூபாயும், தனது இளைய மகன் ஜெயபிரதீப்பிற்கு 3,12,30,803 ரூபாயும் கடனாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, தனது கணவருக்கும், மகனுக்கும் சேர்த்து, விஜயலெட்சுமி கொடுத்துள்ள மொத்த தொகை, 3,77,86,214 ரூபாய்.
ஓ.பன்னீர்செல்வத்திடம் 67,440 ரூபாய் மதிப்புள்ள 16 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும், அவரது மனைவியிடம் 8,43,000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கம், வெள்ளி நகைகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ஓ.பன்னீர்செல்வத்தின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 61,19,162 ரூபாயும், அவரது மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பாக, 4,57,52,415 ரூபாயும், சொத்துப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னென்ன வாகனங்கள் உள்ளன?
ஓ.பன்னீர்செல்வத்திடம் 5,54,980 ரூபாய் மதிப்புள்ள மஹிந்திரா ஜினியோ எல்.ஜி.வி 2011 மாடல் காரும், 17,85,655 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2013 மாடல் காரும், 25,44,789 ரூபாய் மதிப்புள்ள டொயோடா இன்னோவா 2016 மாடல் காரும் என மொத்தம் 48,85,424 ரூபாய் மதிப்புள்ள மூன்று கார்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, அவரது மனைவி பெயரில், மொத்தம் 43,34,377 ரூபாய் மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் வாகனம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திடம் அசையா சொத்துகளாக எதையும் குறிப்பிடவில்லை. அவரது மனைவி விஜயலெட்சுமியின் பெயரில் 56 ஏக்கர் 41.5 செண்ட் விவசாய விளைநிலம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, விஜயலெட்சுமி பெயரில், விவசாயம் அல்லாத 1,732 சதுரடி நிலம், பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ளதாகவும், அதன் நடப்பு சந்தை மதிப்பு, தோராயமாக 7,50,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடமாக, அதே பெரியகுளம் அக்ரஹாரத்தில் 2,068 சதுரடி கொண்ட வீடு இருப்பதாகவும், அதன் நடப்பு சந்தை மதிப்பு தோராயமாக 30 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி பெயரில் உள்ள அசையா சொத்துகள் மதிப்பு 2,63,75,106 ரூபாய்.
மொத்த சொத்து மதிப்பு:
ஓ.பன்னீர்செல்வம் : அசையும் சொத்து மதிப்பு : 61 லட்சத்து 19 ஆயிரத்து 162 ரூபாய்
விஜயலெட்சுமி : அசையும் சொத்து மதிப்பு : 4 கோடியே 57 லட்சத்து 52 ஆயிரத்து 415 ரூபாய்
ஓ.பன்னீர்செல்வம் : அசையா சொத்து மதிப்பு : இல்லை.
விஜயலெட்சுமி :அசையா சொத்து மதிப்பு : 2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ரூபாய்.
ஓ.பன்னீர்செல்வம் : மனைவிடம் வாங்கிய கடன் தொகை : 65 லட்சத்து 55 ஆயிரத்து 411 ரூபாய்
from மாவட்ட செய்திகள் https://ift.tt/30NJSYs
via
