மதுரை - தேனி அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்! - உற்சாகத்தில் தேனி மக்கள்

0

கடந்த 2011ம் ஆண்டு, மதுரை - போடி இடையிலான 90.4 கிலோமீட்டர் ரயில் பாதையை, அகலரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக வேகமெடுக்கத் துவங்கியது. முதல்கட்டமாக, மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதைப் பணிகளும், இரண்டாம் கட்டமாக, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதைப் பணிகளும் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக, ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதைப் பணிகள் முடிவடைந்து இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.

தேனி ரயில்நிலையம்

ஆண்டிபட்டி முதல் தேனி வரையிலான இந்த சோதனை ஓட்டத்திற்காக, ரயில் இன்ஜின், காலை 10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனியை மதியம் சுமார் 3 மணியளவில் வந்தடைந்தது. வழியில், இன்ஜினின் வேகத்தினை அதிகப்படுத்தியும், குறைத்தும் இயக்கி சோதிக்கப்பட்டது. தேனி ரயில் நிலையம் வந்தடைந்த இன்ஜினுக்கு, அரசியல் கட்சியினர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். தேனி எம்.பி ரவீந்திரநாத், துணை முதல்வர் ஓ.பி.எஸ் பெயர்களைக் கூறி அ.தி.மு.க-வினர் கோஷம் எழுப்பினர். அதே போல, பா.ஜ.க - வினர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இவர்கள் மட்டுமல்லாமல், தேனி நகர் மக்கள் பலரும், அங்கே கூடியிருந்தனர்.

பெரியகுளம் ரோடு பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்.

ரயிலும், போக்குவரத்து நெரிசலும் :

கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக தேனி நகரம் திகழ்கிறது. மேம்பாலங்கள் ஏதும் இல்லா மாவட்டமாகவும், புறவழிச்சாலைப் பணிகள் முடிவடையாத காரணத்தாலும், தேனி நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் எப்போதும் இருக்கிறது. தற்போது ரயில் வரும்பட்சத்தில், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் என அச்சத்தில் உள்ளனர் தேனி நகர் மக்கள். அரண்மனைப்புதூர் விலக்கு, பாரஸ்ட்ரோடு, பெரியகுளம் ரோடு ஆகிய இடங்களில் ரயில்கேட்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில், மேற்கண்ட மூன்று இடங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், நகரில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

பெரியகுளம் ரோட்டில் மட்டும் மேம்பாலம் அமைக்கப்படும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ரயிலைப் பார்த்து தேனி மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாலும், மறுபுறம், சாலைப் போக்குவரத்து நெரிசலை எண்ணி கலக்கத்துடனே உள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2O1hRJQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*