தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல முக்கிய ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போடப்படும், என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின்போது 66,007 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு 88,936 வாக்குசாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்களிக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்களர்கள் முகக்கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை முகக்கவசம் அணியாமல் யாரேனும் வந்தால், அவர்களுக்கு வழங்குவதற்காக வாக்குசாவடியில் முகக்கவசம் தயார் நிலையில் இருக்கும். வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வாக்களிக்கும் நேரம், வழக்கத்தைவிட ஒருமணிநேரம் கூடுதலாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், கட்டாய தடுப்பூசி என்ற அறிவிப்பு விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள் சிலர் ‘’தேர்தல் பணியாற்றக் கூடியவர்கள், முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சொன்னால் கூட அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது எங்களின் தனி மனித உரிமையில் தலையிடும் செயல். விரும்புகிறவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. எங்களது கருத்துக்களை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்கள்.
அதேசமயம் இவர்களில் மற்றொரு தரப்பினரோ ‘’கொரோனா நோய் தொற்று அபாயம் விலகாத நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமான ஒன்று. இந்த தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படும் என்பதற்கு சான்றுகள் இல்லை. எனவே தடுப்பூசி பற்றி கவலைப்பட வேண்டாம். அரசு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட முன்வரும் போது அதனை தவிர்க்க வேண்டாம். தேர்தல் பணியின் போது பெரும்திரள் மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் உள்ளதால் நமக்கு ஏதும் தொற்று ஏற்படக் கூடாது என்பது தான் அரசின் முதல் நோக்கம். இதனை புரிந்து கொண்டு தடுப்பூசி போட முன் வரவேண்டும்’’ என தெரிவித்தார்கள்.
தேர்தல் பணியாற்றுபவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமா ? இந்த கேள்விக்கு விடை காண, தஞ்சை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கோவிந்தராவிடம் பேசினோம். ‘’கொரோனா தடுப்பூசி கட்டாயம் அல்ல. தேர்தல் பணியாற்றுபவர்கள், விரும்பினால் போட்டுக்கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் தாமாக முன் வந்து ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இது அவசியம் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தவில்லை.’’ என தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sLXpvn
via
