காங்கிரஸ்: `துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது!’ - சொந்த கட்சியை விமர்சிக்கும் ஜோதிமணி

0

"காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிற உணர்வுகளை நான் அறிவேன்" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சொந்த கட்சிக்கு எதிராகவே வெளிப்படையாக கொந்தளித்துள்ளார்.

ஜோதிமணி

Also Read: நெய்வேலி நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு! - கொதிக்கும் ஜோதிமணி

இதுகுறித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி,

"காங்கிரஸ் கட்சியில் தொகுதி, வேட்பாளர் தேர்வுகள் வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த, வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால், யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை. எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால், இன்று நான் எம்.பி ஆகி இருக்க முடியாது.

ஜோதிமணி

இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல, துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி தனது சொந்த கட்சியையே விமர்சித்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து, கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராக போட்டி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

மறுபுறம் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2OQhGRX
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*