கடலூர்: மனைவி, மாமியாரை ஓட ஓட விரட்டி கொலை செய்த கணவர்! - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

0

கடலூர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் சலங்குக்கார தெருவைச் சேர்ந்த ரவி-பூங்கொடி தம்பதியினரின் மகள் மீனா. இவருக்கும் சோனங்குப்பத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழில் செய்துவரும் நம்புராஜ் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான நம்புராஜ், தனது மனைவி வேறு ஒருவருடன் திருமணம் உறவை மீறிய நட்பில் இருப்பதாக சந்தேகித்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட மீனா, பூங்கொடி

இந்த விவகாரத்தில் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் கடந்த ஒரு வருடமாக மீனா குழந்தைகளுடன் தனது தாய் பூங்கொடியின் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அதையடுத்து தன்னுடன் வீட்டுக்கு வரும்படி மனைவி மீனாவை அடிக்கடி அழைத்திருக்கிறார் நம்புராஜ்.

அவர் மறுக்கவே, குழந்தைகளைப் பார்க்க தனது மாமியார் பூங்கொடியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது.

தலை மறைவாக இருக்கும் நம்புராஜ்

நேற்று மாலை இரண்டாவது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தாயுடன் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார் மீனா. அதன்படி குழந்தையை பூங்கொடி துக்கிக் கொண்டு நடக்க, மீனா அவருடன் சென்றிருக்கிறார். முதுநகர் சஞ்சீவிராயன் கோயிலைக் கடக்கும்போது அங்கு வந்த நம்புராஜ் தனது மாமியாருடன் பேசும்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அப்போது பின்புற இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூங்கொடியின் முதுகில் சரமாரியாக குத்தினார்.

அதிர்ச்சியடைந்து அதனை தடுக்க முயற்சி செய்த மனைவி மீனாவையும் சரமாரியாக குத்தியதால் அவர் நிலை தடுமாறினார். குழந்தையுடன் தப்பியோட முயற்சித்து சிறிது தூரத்தில் விழுந்த பூங்கொடியை கழுத்தில் மீண்டும் துள்ளத்துடிக்க குத்தினார். அதையடுத்து சுதாரித்து எழுந்த மீனா தனது தாயை கத்தியால் குத்துவதை தடுக்க முயற்சித்தார். அதனால் மீனாவின் கழுத்திலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார் நம்புராஜ்.

Also Read: சென்னை: பிரபல ரௌடியின் மகன் ஓட ஓட விரட்டிக் கொலை - வைரலாகும் சிசிடிவி காட்சி

சிறிது நேரத்தில் அதே இடத்தில் பூங்கொடியும், மீனாவும் துடிதுடித்து உயிரிழந்தனர். தனது தாய்க்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் 1 வயது குழந்தை அழுதது அனைவரின் நெஞ்சையும் கனக்கச் செய்தது. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அதையடுத்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் நம்புராஜை தேடி வருகிறது முதுநகர் காவல்துறை. சமூக வலைத்தலங்களில் பரவி வரும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பதற வைக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ls39bd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*