தி.மு.க அலுவலகத்தில் திவாகரன்; உற்சாகத்தில் டி.ஆர்.பி ராஜா ஆதரவாளர்கள் - பின்னணி என்ன?

0

மன்னார்குடியில் தி.மு.க தேர்தல் அலுவலகத்திற்கு சசிகலாவின் தம்பி திவாகரன் சென்றுது, மன்னார்குடியில் அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சசிகலாவுடன் திவாகரன்

சசிகலாவின் தம்பி திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியினை நடத்தி வருகிறார். சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த போது திவாகரன் அதனை வரவேற்பதாகவும், சசிகலாவின் அருகில் உள்ள என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அவரது முதுகில் குத்தத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்தே இந்த முடிவினை சசிகலா எடுத்திருக்கிறார் என்றும் பேசினார்.

தினகரன் நினைத்தது நடந்துள்ளது என திவாகரன் ஓப்பனாக பேசியது அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திவாகரன்,கன்னியாகுமரி, நாகர்கோயில்,போடி,விராலிமலை உள்ளிட்ட 22 தொகுதிகளில் தனது அண்ணா திராவிடர் கழகம் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அவர்களும் தீவிரமான பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு,.க அலுவலகம்

இந்த நிலையில் திமுக தேர்தல் அலுவலகத்துக்கு திவாகரன் சென்ற காராணம் என்ன என்று விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம், `` சசிகலாவின் தம்பி திவாகரன் சமீப காலமாகவே தி.மு.கவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். கடந்த வருடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட திவாகரன், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அமர்ந்ததுடன் அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு பல இடங்களில் தி.மு.கவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார். சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக கூறியிருந்தாலும் நமது நிரந்தர எதிரியான தி.மு.கவினை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார். தினகரனும் தேர்தல் பிரசாரங்களில் தி.மு.கவினை விமர்சனம் செய்து பேசி வருகிறார். திவாகரனும் தனது கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

தி.மு.க அலுவலகம்

இந்த சூழ்நிலையில் மன்னார்குடியில் பெரிய கோயில் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணெய் தாழி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் சாமி தரிசனம் செய்வதற்காக காந்தி சாலையில் உள்ள வெண்ணெய் தாழி மண்டபத்திற்கு திவாகரன் வந்தார்.

ஆனால் சாமி வருவதற்கு தாமதமானது. இதையடுத்து சிறிது நேரம் நின்றபடி காத்திருந்த திவாகரன், பின்னர் அருகில் உள்ள தி.மு.க அலுவலகத்திற்கு போய் இருபது நிமிடம் வரை அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க நிர்வாகிகள் `அண்ணே டீ, ஜூஸ் எதுவும் வாங்கி வரட்டுமா’ என பவ்யம் காட்ட எதுவும் வேண்டாம் என கூறி அவர்களுடன் அரசியல் குறித்து பேசி கொண்டிருந்தார். அங்கிருந்த தி.மு.க நிர்வாகியான கண்ணதாசனிடன் `இந்த முறை கோட்டை விட்டுடாமா ஆட்சியை புடிச்சிடுங்க’ என்றும் `எங்க உங்க எம்.எல்.ஏ ராஜா?’ என திவாகரன் கேட்க, அதற்கு அவர் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார் என பதிலளித்துள்ளார்.

டி.ஆர்.பி. ராஜா

திவாகரன் வருகையை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க நிர்வாகிகள் திவாகரனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த தகவல் லோக்கல் அரசியல் வட்டத்தில் வேகமாக பரவியது. தற்போது அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் சிவ.ராஜமாணிக்கம், திவாகரனுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தவர். பின்னர் அ.ம.மு.க முகாமிற்கு சென்றவர் அதன் பிறகு அ.தி.மு.கவிற்கு சென்றார். ஏற்கெனவே மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவ.ராஜமாணிக்கம் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். தன்னை விட்டுச் சென்றதிலிருந்தே அவர் மீது திவாகரன் வருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் ஏற்கெனவே தி.மு.கவிற்கு ஆதரவாக பேசி வந்த திவாகரன் தி.மு.கவின் தேர்தல் அலுவலகத்திற்கும் சென்றிருப்பது, டி.ஆர்.பி ராஜா ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.

மகன் ஜெயானந், திவாகரன்

அ.தி.மு.க தரப்பிலோ, ``தி.மு.க ஆதரவாகவும், ஸ்டாலின் முதல்வராவார் எனக் கூறி வரும் திவாகரன் தி.மு.க அலுவலகத்திற்கு சென்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் அங்கு சென்றதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி’’ என தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ePYNcK
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*