டிஸ்சார்ஜ் ஆகும் நாளில் மரணமடைந்த சோகம்... துயரத்தில் `தீப்பெட்டி' கணேசன் குடும்பம்!

0

'இன்னிக்கி காலையில டிஸ்சார்ஜாகி வீட்டுக்கு வருவாருன்னு எல்லோரும் மகிழ்ச்சியா இருந்தோம். இப்படி ஆகும்னு நெனக்கலயே' என்று புலம்புகிறார்கள் ஜெய்ஹிந்துபுரத்திலிருக்கும் 'தீப்பெட்டி' கணேசனின் உறவினர்கள்.

'ரேணிகுண்டா', 'தென்மேற்குப் பருவக்காற்று', 'பில்லா-2' போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான 'தீப்பெட்டி' கணேசன் என்ற கார்த்திக், இன்று திடீரென்று மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த 'தீப்பெட்டி' கணேசன் 10 ஆண்டுகளுக்கு முன் 'ரேணிகுண்டா' படம் மூலம் அறிமுகமாகி 'தென்மேற்குப் பருவக்காற்று', 'பில்லா-2', 'நீர்ப்பறவை', 'கோலமாவு கோகிலா', 'கண்ணே கலைமானே' போன்ற படங்களில் நடித்து பிரபலமாகிக் கொண்டிருந்தார். இன்னும் வெளிவராத பல படங்களில் நடித்துள்ளார்.

தீப்பெட்டி கணேசன்

5 ஆண்டுகளுக்கு முன் ரேஷ்மா என்பவருடன் திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் சினிமா வாய்ப்புக் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டவர் மதுரையில் வசித்து வந்தார்.

வருமானத்துக்கு வாய்ப்பில்லாமல் அவர் கஷ்டப்படுவதை அறிந்து திரைத்துறையைச் சேர்ந்த சிலர் அவருக்கு நிதியுதவி அளித்தனர். ஆனாலும் குடும்பம் நடத்த நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் உடல் நிலையும் நலிவுற்றது.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன் உடல் நலமில்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தப் பிரச்னையால் அவதியுற்றவர், கொஞ்சம் உடல் நலம் தேறி வந்தார். அவரை இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், இன்று காலை வீட்டுக்குச் செல்ல தயாரான நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் மரணமடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர் மனைவி மற்றும் உறவினர்கள் கதறினார்கள்.

பின்பு அவர் உடல் ஜெய்ஹிந்துபுரத்திலுள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இயக்குநர் சீனு ராமசாமி உட்பட திரையுலகைச் சேர்ந்த சிலர் அவர் குடும்பத்தினருக்கு போன் மூலம் ஆறுதல் கூறினார்கள்.

உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை வந்திருந்த உதயநிதி ஸ்டாலினிடம் இந்தத் தகவல் சொல்லப்பட,
உடனே 'தீப்பெட்டி' கணேசன் வீட்டுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தீப்பெட்டி கணேசனின் மனைவி ரேஷ்மா, விவரம் அறியாத 2 குழந்தைகளுடன், அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கதறி அழுவது அனைவரின் மனதையும் கனமாக்குகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tHQp39
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*