மானாமதுரை தொகுதியின் முக்கிய அடையாளம் வைகை நதி. கிழக்கு - மேற்கு திசையில் பாயும் வைகையின் வளமான நீரையும், மண்ணையும் நம்பி பலரும் தொழில் செய்கின்றனர். நெல், மிளகாய், வெங்காயம், வாழை, தென்னை, பருத்தி என பல்வேறு பயிர்கள் விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதும் மானாமதுரையில் மண்ணில் செய்யப்படும் கடம் உலகின் முன்னணி இசைக்கலைஞர்களின் கையில் தவழ்கிறது. மண்பாண்டம், செங்கல் சூளை, சுண்ணாம்பு காளவாசல் என மண் சார்ந்த தொழில்கள் அதிம். திருப்பாச்சேத்தி அரிவாள், பூவந்தி பொங்கல் பானை, இளையான்குடி குண்டு மிளகாய் என்று தொகுதி முழுதும் பல்வேறு பொருட்கள் தனித்துவம் பெற்றுள்ளன.
பெருமைக்கு எப்படி பஞ்சம் இல்லையோ, அதே போல் பதட்டத்திற்கும் பஞ்சம் இல்லாத பகுதியாக இருந்துவருகிறது. அதனால் மாவட்ட காவல்துறையின் கண்கள் மானாமதுரை தொகுதியை உற்று நோக்கியபடியே இருந்துவருகிறது. தமிழரின் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வு இந்த தொகுதியில் தான் செய்யப்படுகிறது. தமிழக பாரம்பரிய மாட்டு இனமான, புலிக்குளம் காளைக்கு ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மடப்புரம் பத்திரகாளி, தாயமங்கலம் முத்துமாரி கோயிகள் மானாமதுரை தொகுதியில் அமைந்துள்ளது சிறப்பு. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது போல் மானாமதுரை வைகை ஆற்றில் வீர அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும் புகழ்பெற்றது. நிலாச்சோறு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தனித்துவமானது.
தொகுதியில் திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய மூன்று ஒன்றியங்கள் உள்ளது. இளையான்குடி சுற்று வட்டார பகுதியில் பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். அதைக் கண்டுகொள்லாமல், மணல் கொள்ளை சம்பவங்கள் கட்சி பாகுபாடின்றி நடைபெற்றுவருகிறது. தொகுதியில் அரசுக் கல்லூரி இல்லை. வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் பலரும் வெளிநாட்டு வேலையையே நம்பி இருக்கின்றனர்.
கண்ணார் தெரு முதல் கிருஷ்ணாபுரம் வரையிலான தரைப்பாலம் அமைக்கும் திட்டம் நீண்ட வருடமாக கிடப்பில் உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் மானாமதுரையும் ஒன்று. அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அ.தி.மு.க எம்.எல்.ஏ., நாகராஜன் வெற்றி பெற்றார். மானாமதுரை பகுதியில் சலவை தொழிலாளிகளுக்கு தேவையான தொட்டிகள் கட்டிக்கொடுத்துது,
இளையான்குடியில் பிணவறையைச் சுற்றி பாதுகாப்புச் சுவர்கள் கட்டியது, மூன்று தொகுதிகளிலும் சோலார் விளக்குகள் ஏற்படுத்தியது, உள்ளிட்ட பல திட்டங்கள் செய்துள்ளதாக, தெரிவிக்கிறார் எம்.எல்.ஏ.நாகராஜன். இந்நிலையில் தற்போது மானாமதுரை தொகுதி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
அ.தி.மு.க வலுவாக இருந்துவரும் இந்த தொகுதியில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் தலைவர் எல்.முருகன், போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ கண்டிப்பாக மானாமதுரை அ.தி.மு.க-வுக்கு தான் ஒதுக்கப்படும் என அடித்துச் சொல்கிறார். அ.தி.மு.க-வில் யூனியன் ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன், வழக்கறிஞர் அழகு மலை உள்ளிட் பலரும் சீட்டுக்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அ.தி.மு.க-வுக்கு தான் போட்டியிடுகிறது என்றால் எம்.எல்.ஏ நாகராஜனுக்கு தான் போட்டியிடுவார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மகள் சித்திரை செல்வி, கடந்த இடைத்தேர்தல் வேட்பாளர் இலக்கிய தாசன், முன்னாள் நீதிபதி ஒருவர் என மொத்தம் 36 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மானாமதுரை தொகுதியில் தி.மு.க கூட்டணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இது குறித்து இளையான்குடி பகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளிடம் பேசும்போது,” மானாமதுரை தொகுதியில் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அ.தி.மு.க வாக்குகள் கணிசமாக உள்ளன. ஆனால் இளையான்குடி தொகுதி அப்படியில்லை. முக்கால் வாசிக்கு மேல் தி.மு.க ஓட்டுகள் தான் இருக்கிறது. சிறுபான்மையினர், மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர், ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் என வாக்குகளை ஈர்க்கும் நிர்வாகிகள் அதிகம் உள்ளனர்.
அதனால் தி.மு.க - வின் கோட்டையாக இளையான்குடி தற்போது இருக்கிறது. ஆனால் இளையான்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த யாருக்கும் தி.மு.க இடம் கொடுக்காமல் மற்ற ஒன்றியங்கள் அல்லது வெளியூர் நபர்களுக்கு சீட்டு கொடுக்கின்றனர். அதனால் இங்கு தி.மு.க வெற்றியடைய முடியவில்லை.
எனவே தி.மு.க-வில் இளையான்குடியை சொந்த ஊராகக் கொண்டவருக்கு சீட் கொடுத்தால், தி.மு.க-வின் வாக்கு பலம் கூடும். மானாமதுரையை தி.மு.க கைபற்றும். கடந்த இடைத்தேர்தலில் கூட, இலக்கியதாசன் 4% வாக்குகளில் தான் தோல்வி அடைந்தார். அவர் திருப்புவனம் ஒன்றியம் என்பதால் கூடுதல் வாக்கு பெற முடியவில்லை. இளையான்குடிக்கு கொடுத்தால் தி.மு.க-வின் கை உயரும்.
Also Read: பா.ஜ.க-வுக்கு மானாமதுரை; அ.தி.மு.க எம்.எல்.ஏ கலக்கம் - திடீர் கிடாய் விருந்தின் பின்னணி!
இளையான்குடி பகுதியில் தான் நெட்டூர் ஊராட்சி உள்ளது. அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ நாகராஜனின் மனைவி ஊராட்சி மன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இது தி.மு.க ஒற்றுமையால் தான் முடிந்தது. மானாமதுரையை தி.மு.க மீட்டெடுக்க முடியும். அதே போல் மானாமதுரை தொகுதியில், சொந்த கட்சியினரே செய்யும் உள்ளடி வேலைகளை களையெடுக்க வேண்டும். அப்போது தான் வலுவான வெற்றியை பெற முடியும்.” என்றனர்.
மானாமதுரை தனித் தொகுதியாக இருக்கிறது. இங்கு அ.தி.மு.க. பலமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், பா.ஜ.க நின்றால் தோல்வியைத் தழுவும் நிலையே. தி.மு.க-வில் ஒற்றுமையாக வேலை செய்தால் இந்த முறை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க-வை பொருத்தவரை, கோட்டை என்று சொல்லிக்கொண்டாலும் கடுமையாக உழைத்தால் தான் வெற்றியை பெற முடியும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bkoz6V
via
