புதுக்கோட்டை மாவட்டம் அற்ந்தாங்கி தொகுதி, கடந்த 2011,2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குத் அறந்தாங்கி தொகுதியிலிருந்து தி.மு.க சார்பில் 57 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த முறை கண்டிப்பாக தி.மு.கவுக்கு தான் சீட் ஒதுக்குவார்கள் என தி.மு.க தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதற்கிடையே, அறந்தாங்கி தொகுதி தற்போது தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சிக்குத் தான் ஒதுக்கப்பட இருக்கிறது என்ற ஒரு தகவல் கசிந்ததால், விரக்தியடைந்த அறந்தாங்கி தி.மு.க தொண்டர்கள் பலரும், பேருந்து நிலையத்தின் முன்பு குவிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அறந்தாங்கி தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென தி.மு.க தொண்டர் ஒருவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை கண்ணிமைக்கும் நேரத்தில் உடம்பில் ஊற்றித் தீவைத்துக் கொள்ள முயன்றார்.
அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது. இந்த போராட்டம் குறித்து தி.மு.கவினரிடம் கேட்டபோது, " 2006-ல் தி.மு.க வேட்பாளருக்கு சீட் கொடுக்கப்பட்டது. அறந்தாங்கியில் தி.மு.க வெற்றிபெற்றதோடு தமிழகத்தில் தி.மு.க ஆட்சியும் மலர்ந்தது.
அதன்பின்பு, 2011,2016 ஆகிய இரு தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இரண்டு முறையும் தோல்வி தான் கிடைத்தது. தி.மு.க ஆட்சியும் அமையவில்லை. அறந்தாங்கியில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற சென்டிமெண்டும் இருக்கிறது. அறந்தாங்கி தொகுதி இந்த முறை கண்டிப்பாக, தி.மு.க-வுக்குத் தான் ஒதுக்கப்படும், என்று நம்பிக்கையிலிருந்தோம்.
தி.மு.க சார்பில் 57ம் பேர் வரையிலும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவே வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால், தி.மு.க-வுக்குத் தான் அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், எங்கள் போராட்டம் தொடரும்" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/38sPsU7
via
