'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்கு தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

0

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ காமராஜ். இந்தத் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார். ஆனால், அ.தி.மு.க தலைமை கடந்த 10 - ம் தேதி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் காமராஜ் பெயரில்லை. அ.தி.மு.க சார்பில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரான தானேஷ் என்கிற முத்துக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த காமராஜ் நேற்று மாலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க-வில் இணைந்தார்.

தி.மு.கவில் இணைந்த காமராஜ்

இது குறித்து பேசிய காமராஜ் ``கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதிப்பளிப்பதில்லை. அவர் தான் அப்படி என்று நினைத்தால், முதலமைச்சரும் அப்படித் தான் இருக்கிறார். அதனால், உண்மையாக உழைப்பவர்களுக்கு தேவையான மரியாதையை தரும் கட்சியான தி.மு.கவுக்கு சென்றிருக்கிறேன்" என்று நம்மிடம் தெரிவித்தார், காமராஜ்.

Also Read: `இரண்டு வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு; ஒரு புதுமுகம்!’ - கரூர் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஸ்டேட்டஸ்

போக்குவரத்துத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, காமராஜ் தனி செல்வாக்கோடு வளர்வதை விரும்பவில்லை என்று கட்சிக்குள் பேசப்பட்டது. காமராஜ் வகித்து வந்த ஜெ பேரவை மாவட்டச் செயலாளர் பதவியை, எடப்பாடி பழனிசாமியிடம் கூறி பறிக்க முயன்றதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் ஆதரவாளரான காமராஜ், அவர்மூலமாக தனது பதவியை தக்க வைத்துக்கொண்டார். அதனால் காமராஜுடன் நெருக்கமாக இருந்த கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் செந்தில்நாதனின் பதவியை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பறிக்க வைத்தார். இதனால், அதிருப்தியடைந்த செந்தில்நாதன், சமீபத்தில் பா.ஜ.கவில் இணைந்தார்.

செந்தில் பாலாஜி

ஆனால், ஓ.பி.எஸ் மூலம் தனது பதவியை தக்க வைத்துக்கொண்ட காமராஜ், அவர்மூலமாக வரும் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சீட் வாங்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். அதற்கு ஆயத்தமாக, கடந்த ஒருமாதமாகவே பணிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்தான், காமராஜ் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கோபமான அவர், தி.மு.கவுக்கு தாவும் மூடுக்கு வந்திருக்கிறார். 'காமராஜ் அதிருப்தியாக இருக்கிறார்' என்று தெரிந்த செந்தில் பாலாஜி, அவரை தி.மு.கவுக்கு கூட்டிச் சென்று இணைத்திருக்கிறார் என்கிறார்கள், கரூர் மாவட்ட தி.மு.கவினர். காமராஜ் போல் அ.தி.மு.கவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளை தி.மு.கவில் இணைக்கும் வேலையில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். பதிலுக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூர் மாவட்டத்தில் பரவலாக தி.மு.கவினர்களை அ.தி.மு.கவுக்கு இழுக்க முயற்சி செய்து வருகிறார் என்கின்றனர்.

காமராஜ்

தி.மு.க-வில் இணைந்தது குறித்து பேசிய காமராஜ் "நான் கட்சிக்காக உண்மையாக உழைத்தவன். இது, கரூரில் உள்ள கடைக்கோடி அ.தி.மு.க தொண்டனுக்கும் தெரியும். உண்மையாக உழைத்த என்னை, கரூர் மாவட்டத் தலைமை மதிக்கவில்லை. இவர்தான் இப்படின்னா, கட்சி தலைமையும் மதிக்கவில்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவருக்கும் என்னைப்பற்றி தெரியும். என்னுடைய உழைப்பின் உண்மை பற்றி புரியும். ஆனால், அத்தனை உழைப்புக்கும் உதாசீனம்தான் பரிசு என்றால், அந்தக் கட்சியில் எப்படி காலம் தள்ள முடியும்?. அதனால், உழைப்புக்கு உரிய மரியாதை தரும் தளபதியை தலைமையாகக் கொண்ட தி.மு.கவில் இணைந்திருக்கிறேன். கரூர் மாவட்டத்தில் உழைக்க தயங்காதவர்களை, மதிக்கும் பண்புள்ள செந்தில் பாலாஜி அண்ணன் தலைமையில், தி.மு.கவில் இணைந்திருக்கிறேன்" என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் கூறப்படுவதாவது,"காமராஜ், அமைச்சரைப் பற்றி தவறான தகவல்களை பகிர்கிறார். தனக்கு மரியாதை தரவில்லை என்று பொய் சொல்கிறார். எம்.எல்.ஏ சீட்டுகளை அறிவித்தது கட்சி தலைமை. அதற்கும், அண்ணனுக்கும் சம்மந்தமில்லை. எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்த உடனே கட்சி மாறியதைப் பார்த்தால், அவர் எம்.எல்.ஏ சீட்டுக்காகத்தான் கட்சியில் இருந்தார் என்று தெரிகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கிருஷ்ணராயபுரத்தில் புதுமுகத்தை நிறுத்தினால், வெற்றி பிரகாசமாக இருக்கும்னு நினைத்துத் தான், தானேஷூக்கு கட்சி தலைமை சீட் கொடுத்திருக்கு. செந்தில் பாலாஜி, தேவையில்லாத அரசியல் செய்கிறார்" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2PW9wrI
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*