தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் சந்திக்கும் 12-வது சட்டமன்றத் தேர்தல் இது. காட்பாடி தொகுதியில் மட்டும் 10-வது முறையாகக் களம் காண்கிறார். இன்று காலை செங்குட்டையிலுள்ள திரௌபதி அம்மன் கோயில் திடலிலிருந்து, தொண்டர்கள் புடைச்சூழ திறந்த வேனில் ஊர்வலமாகச் சென்ற துரைமுருகன் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘‘காட்பாடி தொகுதியைப் பொறுத்தவரை 10-வது முறை போட்டியிடுகிறேன். ராணிப்பேட்டையில் இருமுறை போட்டியிட்டுள்ளேன். அதையும் சேர்த்தால் 12-வது முறை. இத்தனை முறை என் தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகன். அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை வில்லன். வெற்றிச் சிறகடித்து நாங்கள் வெளியில் வருவோம். தேர்தல் காலத்தில் கட்சி மாறுவதை தமாசாக எடுத்துக் கொள்ள வேண்டும். சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறைவின்றி செய்தால் 15-வது முறையும் ஏற்றுக்கொள்வார்கள். மக்களுக்குத் தொண்டு செய்யாவிட்டால் அடுத்த முறை தொகுதிக்குள்ளேயே போக முடியாது. பதவி என்பதை பெரிதாக கருதாமல் மக்களுக்கு தொண்டு செய்வதற்கான நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி யார் நினைக்கிறார்களோ அவர்கள் சிறந்த எம்.எல்.ஏ-க்களாக இருப்பார்கள். நான் அந்த வழியைப் பின்பற்றுகிறேன். எனவே, 12-வது முறை தேர்தலில் நிற்கிறேன்’’ என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2OVwkaB
via
