திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளராக சுரேஷ்குமார்... ஆதங்கத்தில் சீனியர்கள்! - என்ன நடக்கிறது?

0

திருத்துறைப்பூண்டி [தனி] தொகுதியின் அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுரேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இது திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடம் ஆச்சரியத்தையும், இப்பகுதி அதிமுக-வின் ஒரு தரப்பினரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இவர் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாக, எளிமையாக பழகக்கூடியவர். வழக்கறிஞர் என்பதால் இத்தொகுயில் பலருக்கும் இவர் அறிமுகமானவர். இதனால்தான் இவருக்கு சீட் வழங்கப்படுள்ளதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

சுரேஷ்குமார்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிமுக-வின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, 50-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று முடிந்த நிலையில் இங்கு யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என பல்வேறு கணிப்புகள் நிலவி வந்தது.

தற்போது இத்தொகுதியின் அதிமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுரேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருப்பது, இத்தொகுதி மக்கள் மற்றும் கட்சிக்காரர்களிடமும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பாலதண்டாயுதம், முன்னாள் நகர்மன்ற தலைவர் உமாமகேஷ்வரி, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் ரமேஷ்... இந்த மூன்று பேரில் யாருக்காவதுதான் சீட் கிடைக்கும் என பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக பாலதண்டாயுதம் நீண்டகாலமாக கட்சியில் இருப்பவர். இவரது தந்தை உத்திராபதி கம்யூன்ஸ்டு கட்சி எம்,எல்.ஏ-வாக இருந்தவர். அவர் அதிமுக-விற்கு மாறியபோது, இவர்களது குடும்பம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது என பழைய சம்பவம் ஒன்றை உருக்கமாக நினைவுகூர்கிறார்கள் தொகுதிவாசிகள்.

அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வேறு யாரும், அதிமுக-விற்கு போய்விடக்கூடாது என்பதற்காக, ஒரு வாகனத்தில் ஜெயலலிதா போன்ற வேடம் அணிந்த ஒருவரை அமர வைத்து அவரது, காலில், உத்தரவாதி போல் வேடம் அணிந்த ஒருவர் விழுந்து வணங்குவது போல், திருத்துறைபூண்டி முழுவதும் கம்யூனிஸ்டு கட்சி ஊர்வலம் நடத்தியது. அதிமுக-வில் சேர்ந்ததற்காக உத்திராபதியின் ஒட்டுமொத்த குடும்பமுமே நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தது. அந்த குடும்பத்தில் இருந்து வந்து, கட்சிக்காக உழைத்த பாலதண்டாயுதத்திற்கு சீட் இல்லை.

2016 சட்டமன்ற தேர்தலின்போது உமாமகேஷ்வரி, நகர்மன்ற தலைவர். ஆனாலும் கூட அதை ராஜினாமா செய்துவிட்டு, அந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனதால், அவர் கடனாளி ஆனார். தகவல் தொழில்நுட்ப பிரிவு ரமேஷூம் கட்சியில் சீனியர்... அமைச்சர் காமராஜின் தீவிர விசுவாசி. ஆனாலும் கூட, நிறைய செலவு செய்வார் என்பதாலேயே வழக்கறிஞர் சுரேஷ்குமாருக்கு அதிமுக சீட் வழங்கியுள்ளது. பணம் இருக்குறவங்களுக்குதான் கட்சியில மரியாதை’’ என திருத்துறைப்பூண்டி அதிமுக-வில் ஒரு தரப்பினர் புலம்புகிறார்கள்.

அதிமுக

இவர்கள் கடைசியாக சொன்ன ஒரு தகவல்தான் மிகப்பெரிய ஹைலைட். ‘’வழக்கறிஞர் சுரேஷ்குமாரோட மகன் திமுக-வுல இளைஞரணி பொறுப்புல இருக்கார். அந்த கட்சியில் அவர் சீட் கேட்டிருந்தார். அப்பா சுரேஷ்குமார் அதிமுக-வுல சீட் கேட்டு எப்படியோ வாங்கிவிட்டார். தன்னோட சொந்த மகனையே அதிமுக-வுக்கு இவரால் கொண்டு வரமுடியலை. இல்லை, அங்க ஒருத்தர், இங்க ஒருத்தர் இருப்போம்னு பேசி வச்சிக்கிட்டு இப்படி இருக்காங்களானு தெரியலை’ ’என்கிறார்கள்.

ஆனால் வழக்கறிஞர் சுரேஷ்குமார் தரப்பினரோ, ‘’இன்னைய சூழல்ல திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட இவர் ஒருத்தர் தான் பொருத்தமான நபர். இவரது தந்தை ஓய்வுப்பெற்ற நீதிபதி. இவரது. தாய் ஆசிரியை. மனைவி இந்துசமய அறநிலையத்துறையில் இணை ஆணையராக உள்ளார். சுரேஷ்குமார் பரம்பரை பணக்காரர். இவரால்தான் எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்ய முடியும். இவர் வழக்கறிஞராக இருப்பதால், தொகுதி மக்களுக்கும் நல்ல அறிமுகம் உண்டு. அ.தி,மு,க-வை பொறுத்தவரை இது வாழ்வா, சாவா என்ற போராட்ட தேர்தல். ஒரு தொகுதியை கூட இழக்க முடியாது. சுரேஷ்குமாரை வேட்பாளராக்கினால்தான் எல்லா விதங்களிலும் ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். அனைத்து தரப்பு மக்களிடமும் எளிமையாக, அன்பாக பழகக்கூடியவர். அதனால்தான் எல்லா கணக்கும் போட்டு, கட்சித்தலைமை இவரை வேட்பாளராக அறிவிச்சிருக்கு’’ என்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cucxqG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*