சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் சென்னை தி நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த 17ம் தேதி மூன்று நாள் பயணமாக தஞ்சாவூர் சென்றார். அருளானந்த நகர் அருகில் உள்ள மறைந்த தனது கணவர் ம. நடராசனால் கட்டப்பட்ட பங்களாவில் தங்கினார். கணவரின் சொந்த ஊரான விளார் கிராமத்தில் உள்ள குல தெய்வ கோயிலுக்குச் சென்று மதுரை வீரன்,வீரனாரை வழிப்பட்டார்.
அப்போது நடராசனின் சகோதரர்கள் பழனிவேல்,ராமச்சந்திரன் ஆகியோரது பேரக்குழந்தைகளுக்கு நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொண்டு கண்கலங்க வாழ்த்தினார். கிட்டதட்ட 25 வருடங்களுக்கு பிறகு கணவரின் குலதெய்வ கோயிலுக்கு சென்று சசிகலா வழிபட்டதாக உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்நிலையில் கணவர் ம. நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான இன்று விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு வந்து மலர் தூவி மரியாதை செய்வார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற சசிகலா அங்கு சிறப்பு வழிபாடு செய்து விட்டு அப்படியே சென்னை சென்று விட்டார்.
கணவரின் நினைவு நாளை தவிர்த்து விட்டு அவசரமாக சென்னை செல்ல காரணம் என்ன, நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தினகரன் வருவதாக கூறப்பட்ட நிலையில் அவரை தவிர்க்கவே முன்னதாகவே கணவரின் சமாதிக்கு சென்று விட்டு சசிகலா புறப்பட்டதாக பேசப்படுகிறது.
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``சசிகலா மூன்று நாள் பயணமாக கடந்த 17ம் தேதி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தவர், இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி நேராக அவரது கணவர் சமாதிக்கு சென்று வணங்கினார். சுமார் 10 நிமிடம் அவரை அங்கிருந்த சிலரிடம் எதுவும் பேசாமல் கணவர் நடராசனின் போட்டோவை பார்த்தப்படியே நின்றார்.
அடுத்த நாள் காலை குலதெய்வ கோயில் வழிபாடு,காதணி விழாவில் கலந்து கொண்டவர் பின்னர் குமப்கோணம் சென்று திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று வழிபட்டார். இதையடுத்து அன்று இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பியவரை முக்கிய உறவினர்கள் சந்தித்தனர்.
நேற்று காலை அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான வேலு.கார்த்திகேயன், எஸ்.டி.எஸ் செல்வம், கூட்டணியில் உள்ள தே.மு.தி.க வேட்பாளரான டாக்டர் ப.ராமநாதன் ஆகியோர் சந்தித்து ஆசியும்,வாழ்த்தும் பெற்றனர். அவர்களிடம் தொகுதி எப்படியிருக்கு என கேட்டவர் நல்லாருக்குமா என அவர்கள் சொல்ல சோர்வடையாமல் உற்ச்சாகமாக தேர்தல் பணிகளை பாருங்கள் நல்லது நடக்கும் என சிரித்த முகத்துடன் கூறி விட்டு புறப்பட்டார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று வழிபட்டவர் அப்படியே சென்னைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு நடராசனின் சமாதிக்கு டி.டி.வி தினகரன் வந்து மரியாதை செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து அ.ம.மு.க நிர்வாகிகள்,தொண்டர்கள் அந்த இடத்தில் திரண்டனர். ஆனால் தினகரன் வருவதற்கு தாமதமானது. இதனால் உடல் நிலை முடியாமல் இருந்த நடராசன் அண்ணன் சாமிநாதன் தினகரனை சதிக்காமலேயே வீட்டிற்கு புறப்பட்டார்.
பின்னர் கும்பகோணத்திலிருந்த தினகரன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் 12 மணியளவில் சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்து விட்டு நடராசனின் தம்பி பழனிவேலை பார்த்து வணங்கி விட்டு பிரசாரத்திற்கு கிளம்பினார். மூன்று நாள் பயணமாகத்தான் சசிகலா தஞ்சை வந்தார். நினைவு நாளில் கணவர் சமாதிக்கு வந்து மரியாதை செய்வதாகவும் சொல்லியிருந்தார். ஆனால் அதன் பிறகு தினகரன் மற்றும் அ.ம.மு.கவை சேர்ந்தவர்களும் வருவார்கள் ஏற்கெனவே அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சசிகலா அறிவித்துள்ளார் அந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார்.
அ.ம.மு.க வேட்பாளர்கள் சிலர் சசிகலாவை சந்தித்து ஆதரவு தரவேண்டும் என கேட்டதற்கு சிரிப்பையே பதிலாக தந்தார் சசிகலா. இந்த சூழ்நிலையில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தினகரன் உடன் சேர்ந்து நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை சசிகலா விரும்பவில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்பதால் இரண்டு நாட்களிலேயே சென்னைக்கு திரும்பிவிட்டார்.
இதற்காகத்தான் முன் கூட்டியே கணவரின் சமாதிக்கு வந்து வணங்கி மரியாதை செய்து விட்டதாகவும், இன்றைய தினத்தில் இங்கிருந்தால் உறவினர்கள் பலர் சந்திக்க வருவார்கள் அதனால் தேவையில்லாத குழப்பங்கள் உண்டாகும் என்று நினைத்தவர் சென்னை புறப்பட்டுவிட்டார்” என்கின்றனர்.
தினகரன் ஆதரவாளர்களோ, ``சின்னம்மா இரண்டு நாள் நிகழ்ச்சிக்காத்தான் தஞ்சாவூர் வந்தாங்க. வந்த அன்னைக்கே நடராசன் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திட்டாங்க. நினைவு நாளில் சமாதிக்கு வருவதற்காக திட்டமிடப்படவில்லை. கடந்த இரண்டு நினைவு தினங்களாகவே தினகரன் இங்கு வந்து மரியாதை செய்து வருவது போல் தற்போதும் வந்து மரியாதை செய்தார். தினகரனை தவிர்ப்பதற்காகவே, சசிகலா சென்னை சென்றதாகக் கூறப்படுவது உண்மை இல்லை. ஜெயலலிதா சமாதிக்கு சென்ற பிறகு தான் எதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன நிலையில் சசிகலா இருக்கிறார்.” எனத் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tzasR6
via
