`அமைச்சருக்கு தக்க பாடம் புகட்டுவோம்’ - விஜயபாஸ்கரை எதிர்த்து சுயேச்சையாகக் களமிறங்கும் அதிமுக-வினர்

0

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மூன்றாவது முறையாக விராலிமலையில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் அமைச்சரை எதிர்த்து கட்சியில் விருப்ப மனு வாங்கக் கூட யாரும் முன்வராத நிலையில், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் மாவட்ட வழக்கறிஞரணி துணைத்தலைவர் வழக்கறிஞர் நெவளிநாதன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெங்கடாச்சலத்தின் மகள் தனலெட்சுமி ஆகியோர் விஜயபாஸ்கரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

விஜயபாஸ்கர்

இருவரும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சரின் சாதிய சர்வாதிகாரப் போக்கால் கடந்த 2016 தேர்தலைப் போல், முத்தரையர் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழக்கும் என்று அவர்கள் பேசியிருக்கின்றனர். இதுபற்றி நம்மிடம் பேசிய நெவளிநாதன், ``சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க-வில் தன்னைவிட யாரும் வளர்ந்துவிடக்கூடாது, ஆட்சி அதிகாரத்திற்குச் செல்லக்கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அம்மா மறைவுக்குப் பின்பு மாவட்டத்தில் விஜயபாஸ்கரின் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்திருக்கிறது. அமைச்சரின் சாதிய சர்வாதிகார அடக்குமுறையை ஒடுக்கத்தான் அவரை எதிர்த்து விராலிமலையில் மனுத் தாக்கல் செய்துள்ளேன்.

ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட நான் கடந்த 22வருடங்களாகக் கழகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். வழக்கறிஞரணி மாவட்ட துணைத்தலைவர் பொறுப்பிலும் இருக்கிறேன். என்னைவிட சீனியர்கள் பலரும் இருக்கின்றனர். ஆனால், எங்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல், தனக்கு விசுவாசமாக இருக்கிறார் என்பதற்காகக் கட்சியில் சேர்ந்து 2 மாதம் கூட முழுமையடைதா ஒருவருக்கு ஆலங்குடி தொகுதியில் சீட் கொடுக்க வைத்திருக்கிறார். கடந்த 2015-ல் விஜயபாஸ்கரால் திட்டமிட்டுத் தூண்டப்பட்ட சாதிய பிரச்னையால், 2016 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தரையர் சமூகத்தினர் அதிகமாக இருக்கும் விராலிமலை, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிவாய்ப்பை இழந்தது.

தலைமைக்கு நெவளி நாதன் அனுப்பிய கடிதம்

அதுபோல் தற்போதும் நடந்தால், முழுக்க,முழுக்க அமைச்சர் தான் காரணம். பல ஒன்றியங்களில் முத்தரையர்கள் அ.தி.மு.க பெரும்பான்மையாக இருந்தும், ஒன்றிய செயலாளர் பதவிகள் கூட முத்தரையர்களுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் மாவட்டச் செயலாளர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருக்கின்றனர். எனது போராட்டம் என்பது முத்தரையர் சமுதாயத்தைப் போலவே அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் மற்ற சமூகத்தினருக்கும் சேர்த்துத் தான். கட்சி பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் என்னை விடுவிக்கக்கோரி முதல்வர், துணை முதல்வருக்கு தனித்தனியாகக் கடிதம் எழுதிவிட்டுத் தான் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறேன். விராலிமலையில் எங்களின் பலத்தை இந்தத் தேர்தலில் காட்டுவோம்" என்றார்.

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலெட்சுமி பேசுகையில்,

``விஜயபாஸ்கரை நம்பி உண்மையான விசுவாசியாக இருந்தோம். கடந்த இரண்டு முறையும் எங்கள் சமூகத்தைச் சார்ந்த யாருக்கும் வாய்ப்பு கொடுக்கல. எங்கள் சமுதாயத்தை அவர் இழிவாகவும், கேவலமாகவும் நினைக்கிறார். எதுக்குன்னு தான் தெரியலை. எங்களுடைய வலி, வேதனை எப்படி இருக்கும்னு அவருக்கும் தெரியணும். அதற்காகத் தான் எனது சொந்தத் தொகுதியான ஆலங்குடியை விட்டுவிட்டு விராலிமலையில் போட்டியிடுறேன். இந்தத் தேர்தலில் எங்கள் மக்கள் எல்லாம் சேர்ந்து தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

இதுபற்றி பேசிய அமைச்சரின் ஆதரவாளர்கள்,``அமைச்சர் சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர். அமைச்சருக்குத் தொகுதிக்குள் அளவுகடந்த ஆதரவு இருக்கிறது. அமைச்சரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது" என்றனர்.

ஏற்கெனவே அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் அமைச்சருக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் நிலையில், முத்தரையர் வாக்கு வங்கி பிரிந்தால் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறாராம் விஜயபாஸ்கர். அ.தி.மு.க-வினரே சுயேச்சையாக அமைச்சரை எதிர்த்துக் களமாடுவதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lA9264
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*