'கண்டிப்பாக நான் ஜெயிக்கப் போறதில்லை. உங்க இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் ஜெயிக்கப் போறீங்க. யார் ஜெயிச்சாலும், கரூர் மக்களுக்கு இருவரும் நட்போடு இருந்து நன்மை செய்யணும்' என்று சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ் கண்ணன், செந்தில் பாலாஜி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிவுரை சொல்வது போல், நூதன முறையில் பிரசாரம் செய்தார். அதாவது, செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முகங்கள் கொண்ட முகமூடியை அணிந்த இருவரிடம், அறிவுரை சொல்வது போல் ராஜேஷ் கண்ணன் வாக்கு சேகரித்தது, மக்களை வெகுவாக கவர்ந்தது.
Also Read: கரூர்: `போலி ஆவணம்; எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தகுதிநீக்கம் செய்ய மனு!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்
கரூர் தொகுதியில், அ.தி.மு.க சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில், சுயேச்சையாக இயற்கை மற்றும் சூழலியல் சார்ந்த ஆர்வலரான ராஜேஸ் கண்ணன் போட்டியிடுகிறார். இவர், ஆரம்பத்தில் இருந்து வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். மனுதாக்கல் செய்த அன்று தனது பிள்ளைகளோடு வந்திருந்தார். அதோடு, தனது பரப்புரை வாகனத்தில் தனது புகைப்படத்தை தலைகீழாக பதிவிட்டு, வித்தியாசம் செய்திருந்தார். அதோடு, பரப்புரை வாகனத்தில், 'வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, தொடரும் என் முயற்சி' என்று எழுதி வைத்திருந்தார். அதோடு, பரப்புரை துண்டறிக்கையில், 'அரசியல் என்பது மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க' என்ற முழக்கத்தை பதிவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தவிர, எந்த வேட்பாளரும் கரூரில் நடந்த மணல் கொள்ளைப் பற்றி மக்களிடம் பேசாத நிலையில், ராஜேஸ் கண்ணன், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து புள்ளிவிவரங்களோடு மக்களிடம் பிரசாரம் செய்தார். அதோடு, தொகுதி முழுக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஒரு குட்டிகதையைச் சொல்லி, மக்களை யோசிக்க வைத்தார். இந்த நிலையில், பிரசாரம் மேற்கொள்ள கடைசி நாளான நேற்று, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜி முகம் கொண்ட முகமூடிகளை இருவரை அணியவைத்து, அவர்களிடம் 'நட்போடு இருந்து, கரூர் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும்' என்று விழிப்புணர்வு நாடகம் நடத்தி, மக்களை ரசிக்க வைத்தார்.
இதுகுறித்து, ராஜேஸ் கண்ணனிடம் பேசினோம்.
"அ.தி.மு.க, தி.மு.க னு இரண்டு கட்சி ஆட்சிகளிலும் கரூர் எந்த வளர்ச்சியையும் அடையவில்லை. மாறாக, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கு. அதனால், 'கரூரில் பல திட்டங்களை நிறைவேற்றி, தலைகீழா மாற்றினாதான் கரூர் வளர்ச்சி நிலைக்கு வரும். அதுக்கு, எனக்கு வாக்களியுங்கள்'னு உணர்த்த தான், என் புகைப்படத்தை தலைகீழாக போட்டிருந்தேன். அதேபோல், தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த நாளில் இருந்து, கரூர் தொகுதியில் அ.தி.மு.கவினரும், தி.மு.கவினரும் மாறி மாறி அடிச்சுக்கிறது, காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகறதுனு ஒரே பதட்டமா இருந்துச்சு. இவங்க அரசியலுக்காக, பொதுமக்களை பதட்டமாக வச்சாங்க. அதனால் தான், இரண்டு பேரின் முகம் கொண்ட முகமூடிகளை இருவரை அணிய வைத்து, அவர்களுக்கு நான் அறிவுரை சொல்வது போல் பிரசாரம் செய்தேன்.
இருவரையும் கட்டியணைக்க வைத்து, 'இருவரில் யாரேணும் ஒருத்தர் தான் ஜெயிக்கப் போறீங்க. அதனால், இப்போ அடிச்சிட்ட மாதிரி பின்னாடியும் அடிச்சுக்காம, ஒற்றுமையா இருந்து கரூர் மக்களுக்கு நன்மை செய்யணும்'னு நான் அறிவுரை சொல்றாப்புல பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க, தி.மு.க ஆட்சியில் இங்குள்ள காவிரி, அமராவதி ஆறுகள்ல கணக்குவழக்கில்லாம மணல் கொள்ளை நடந்திருக்கு. அதைப்பத்தி என்னைத் தவிர, வேறு எந்த வேட்பாளரும் பேசவில்லை. நான் அதுபற்றி மக்களிடம் விலாவாரியாக பேசினேன். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் கவலையில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் நடக்கும் இயற்கை சுரண்டலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக்கிட்டே இருப்பேன்" என்றார் உறுதியாக!.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2PWK3hI
via
