நாமக்கல்: `அதிமுக ஓட்டுக்கு பணம் தரலை!' -சாலை மறியல் செய்த மக்களால் போலீஸார் அதிர்ச்சி

0

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பது சிதம்பர ரகசியமாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது, வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும், வாக்காளர்கள் பணம் வாங்குவதும் வெளிப்படையாக நடக்கிறது. அதையும் தாண்டி, 'எங்களுக்கு அ.தி.மு.க பணம் தராமல் ஒதுக்கிட்டாங்க' என்று கூறி, மக்கள் வாகனங்களை சாலைக்கு குறுக்கே நிறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவும், அமைச்சருமான சரோஜா போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் மருத்துவர் மதிவேந்தன் என்பவர் போட்டியிடுகிறார். இருவரும் தங்களது வெற்றிக்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். நேற்றோடு பிரசாரம் செய்வது முடிந்ததால், நேற்று மாலையில் இருந்து இரண்டு தரப்பும் பணபட்டுவாடாவை நிகழ்த்தியதாக சொல்லப்பட்டது.

தி.மு.க சார்பில் வாக்காளருக்கு தலா ரூ. 500 ம், அ.தி.மு.க சார்பில் தலா ரூ. 1000 ம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், இன்று காலையில் ராசிபுரம் டு புதுப்பட்டி சாலையில் உள்ள பட்டணம் பேரூராட்சியில், 50 க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதை அறிந்த ராசிபுரம் காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அந்த வழியாக வரும் வாகனங்களை செல்லவிடாமல் தடுத்து வைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

Also Read: கரூர்: `போலி ஆவணம்; எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தகுதிநீக்கம் செய்ய மனு!' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

போலீஸார், மக்களிடம் சாலை மறியல் செய்வதற்கான காரணத்தை கேட்க, 'எங்க ஊர்க அ.தி.மு.க தரப்பில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க. ஆனா, எங்களுக்கு கொடுக்காம, ஏமாற்றிவிட்டுட்டாங்க. எங்களுக்கும் பணம் கொடுக்கணும்னு சொல்லிதான், போராட்டத்தில் குதித்திருக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்டு தலை கிறுகிறுத்துப்போன போலீஸார், 'பணம் வழங்கறது தப்பு. அதை நீங்க வாங்குறதும் தப்பு. அதைவிட, 'எங்களுக்கு பணம் தரலை'னு போராடுறது ரொம்ப தப்பு. அதோடு, சாலை மறியல் செய்றது தப்போ தப்பு. அதனால், உடனடியாக கலைந்து செல்லுங்க' என்கிற ரீதியில் மக்களிடம் சொல்ல, ஆனால் மக்கள் கலையவில்லை. இதனால், பலமுறை போலீஸார் எச்சரித்தும் அவர்கள் கலையாததால், சாலை மறியல் போராட்டம் செய்துகொண்டிருந்தவர்களில் மூன்று பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்ற, அதன்பிறகே மக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல் போராட்டத்தில் குதித்த மக்கள்

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், "தொகுதியில் ஜெயிக்கும் வேட்பாளர்கள், தொகுதிக்கு எதுவுமே செய்யாம, எல்லாத்துலயும் ஊழல் பண்ணி, சொத்தை சேர்க்குறாங்க. காரணம், மக்கள் மீது அவர்களுக்கு பயமில்லை. ஏன்னா, 'தேர்தல் நேரத்தில் மக்களிடம் காசு கொடுத்து அவர்களின் ஓட்டுகளை ஈஸியா வாங்கிடலாம்'ங்கிற நினைப்புதான். இருந்தாலும் மக்கள் மீது வேட்பாளர்களுக்கு, அதையும் மீறி கொஞ்சநஞ்சம் இருந்த பயத்தையும், இந்த சம்பவம் சுத்தமா இல்லாம பண்ணிட்டு. மக்களே, 'எங்களுக்கு பணம் தரலை'னு வெளிப்படையா பேச ஆரம்பிச்சுருப்பது, ஜனநாயகம் அதன் தன்மையை இழந்து, முழு பணநாயகமா மாறிவிட்டதையே காட்டுது. இதனால், இன்னும் துணிச்சலாக அரசியல்வாதிகள் ஊழல் பண்ணுவாங்க" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3wrLnd7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*