ஆத்தூர்: `கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க!’ - தி.மு.க., வினர் மீது பா.ம.க வேட்பாளர் குற்றச்சாட்டு

0

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் நான்காவது முறையாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க'வின் மாநிலப் பொருளாளர் திலகபாமா போட்டியிடுகிறார். 'ஆத்தூர் ஐ.பி'யின் கோட்டை.!' என சொல்லும் அளவிற்கு தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வருபவர் ஐ.பெரியசாமி. ஆனால், அவரை எதிர்த்து களத்தில் இறங்கிய திலகபாமா, ஐ.பெரியசாமியை பிரசார களத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க'வினர், திலகபாமா பிரசாரத்திற்கு செல்லும் இடத்தில் பல்வேறு இடையூறுகளைச் செய்ததாக கூறப்படுகிறது.

திலகபாமா

"ஐ.பெரியசாமி பற்றி இதுவரை நான் பேசாத உண்மைகளை பேசுகிறேன்." என்று அழுத்தமாக கூறிய திலகபாமா, ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்தார். குடகனாறு பிரச்னையை கையில் எடுத்து, "தன்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா?" என ஐ.பெரியசாமிக்கு சவால் விடுத்தார். ஆத்தூர் தேர்தல் களம் பரபரப்பாக காட்சியளித்த நிலையில், இன்று வாக்குப்பதிவிலும் அதே பரபரப்பு நீடித்தது.

ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி வாகுச்சாவடி வாசலில், வாக்காளர்களுக்கு தி.மு.க'வினர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பா.ம.க மற்றும் அ.தி.மு.க'வினர், தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், தி.மு.க 'வினரைப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரச்னை நடந்த இடத்திற்கு வந்த பா.ம.க வேட்பாளர் திலகபாமா, சம்பவம் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, தி.மு.க'வினர் கள்ள வாக்கு அளிப்பதாகவும், வாக்குச்சாவடி வாசலில் பணம் கொடுப்பதாகவும், இரண்டு வாக்குச்சாவடியில் பெயர் உள்ள நபர்கள் இருப்பதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திலகபாமா, வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போது, வாக்குச்சாவடிக்குள் இருந்த தி.மு.க நிர்வாகிகள், திலகபாமாவிற்கு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திலகபாமாவிடம் தொலைபேசியில் பேசினோம். "வாக்குச்சாவடி வாசலில் தி.மு.க'வினர் பணம் கொடுப்பதாக தகவல் கிடைக்க, பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். அவர்களும் தி.மு.க'வினரைப் பிடித்தனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விசாரிக்க சின்னாளபட்டி சென்றேன். அங்கு சென்றால், வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் தி.மு.க'வினர் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க நிர்வாகிகள் கூறினர். ஒருவர் வாக்களிக்கச் சென்றால், அவருடைய வாக்கை ஏற்கனவே ஒருவர் போட்டுவிட்டதாக கூறியுள்ளனர். கள்ள ஓட்டுப் போடும் அளவிற்கு ஐ.பெரியசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதா என்று நினைத்துக் கொண்டே வாக்குச்சாவடிக்குச் சென்றேன்.

திலகபாமா

அங்கே இருந்த எங்கள் தரப்பு ஏஜென்ட்கள், இரண்டு இடங்களில் ஓட்டு இருக்கும் நபர்கள் குறித்து என்னிடம் கூறினர். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு, பணப்பட்டுவாடா செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வாக்குப்பதிவை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, வாக்குச்சாவடியில் இருந்த தி.மு.க பவர் ஏஜென்ட் முரளிதரன் என்பவர், "ஐ.பெரியசாமி பத்தியா பேசுற, உன் கழுத்தை அறுத்துவிடுவேன்.!" என மிரட்டினார். அதனைக் கேட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கொதித்துவிட்டனர். என்னை மிரட்டிய நபரை கைது செய்ய வலிறுத்தி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினேன். இறுதியில், சின்னாளபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்தேன். ஐ.பெரியசாமி தோல்வி பயத்தால் பணத்தை அள்ளி வீசுகிறார். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆத்தூரில் தேர்தலை நிறுத்த வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2R7gavH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*