தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பணியிலிருந்த அரசு அலுவலர்களுக்கு காலை 10 மணி வரை டிபன் வரவில்லை. பாதுகாப்பு பணியிலிருந்த ஆந்திர போலீஸ் ஒருவர், `நான் பிபி பேஷன்டு, மாத்திரை போட வேண்டும். ஆனால் இன்னும் டிபன் வரவில்லை. சாப்பிடலன்னா மயக்கம் வந்துரும்’ என பசியால் அவதிப்பட்டு தெலுங்கில் புலம்பி கொண்டிருந்தார். இதை கவனித்த ஒருவர் அவரை தனது இரு சக்கர வாகனத்தில் கடைக்கு அழைத்து சென்று சாப்பிட வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை முதலே விறு விறுப்பான வாக்கு பதிவுகள் நடைபெற்றன. வாக்குப்பதிவு குறித்த அவசியத்தை புரிந்து கொள்ளவும், ஜனநாயகத்தின் நடைமுறைகளை தெரிந்து கொள்ளவும் பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்திருந்தனர். பிள்ளைகள் தன் அம்மாவிடம் ஓட்டு குறித்து ஆர்வமாக கேட்டதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
கொரோனா பரவுதலை தடுப்பதற்கான பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. தன்னார்வலர்கள் வாக்காளர்களுக்கு உடலின் வெப்பத்தை செக் செய்த பின்னர் கையுறை கொடுத்து அதனை அணிந்த பிறகே உள்ளே அனுமதித்தனர். வாக்குச் சாவடிக்குள் வட்டமிட்டு சமூக இடைவெளியினை கடைபிடிப்பதற்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் வாக்கு சாவடிக்கு வெளியே அப்படியான ஏற்பாட்டை பல இடங்களில் செய்யவில்லை.
இதனால் வாக்களிப்பதற்காக சமூக இடைவெளி இல்லாமலேயே வாக்காளர்கள் வரிசையில் நின்றனர். பணியிலிருந்த அரசு அலுவலர்கள் இதனை சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. டெம்பரேச்சர் செக் செய்யும் போது உடலில் வெப்ப நிலை அதிகமாக இருந்தால் ஓரமாக உட்கார வைத்து விடுகின்றனர். இதனால் கிராம பகுதிகளில் பலர் ஓட்டு போடாமலேயே சென்றனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவை மீறி ஒரத்தநாடு தொகுதியில் அ.தி.மு.கவினர் லோடு ஆட்டோக்களில் வாக்காளர்களை அழைத்து வந்திருந்தனர். வாக்கு சாவடியில் பணியிலிருந்த அரசு அலுவலர்கள், போலீஸார் ஆகியோருக்கு குறித்த நேரத்தில் உணவு வழங்கவில்லை என்ற புலம்பலை கேட்க முடிந்தது. இதனால் பலரும் பசியால் அவதிப்பட்டபடியே பணி செய்தனர்.
குறிப்பாக ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்குளம் வாக்கு சாவடியில் பணிக்கு வந்திருந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த போலீஸ் ஒருவர், தனக்கு பிபி இருக்கு நேரத்து சாப்பிடலைன்னா சரியா வராது ஆனா பத்து மணி ஆச்சு இன்னும் டிபன் வரலை என புலம்பி கொண்டிருந்தார். ஆந்திராவில் உள்ள தன் குடும்பத்தினரிடம் போன் செய்தவர் இப்பவரைக்கும் டிபன் வரலை. எங்கள அரசும் கண்டுக்கல , கட்சிகாரங்களும் கண்டுக்கல. என்னால பசிய கட்டுப்படுத்த முடியலை. மயக்கம் வர்ற மாதிரி இருக்கு’ என தெலுங்கில் புலம்பி கொண்டிருந்தார்.
இதனை கவனித்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உணவகத்துக்கு அந்த போலீஸை அழைத்து சென்று சாப்பிட வைத்த பிறகு கொண்டு வந்து விட்டார். அவர்கிட்ட, `எனக்கு தமிழ் தெரியாது நான் பிபி பேசண்ட் பசியை தாங்க முடியாம என் வீட்டுக்கு போன் பண்ணி புலம்பினேன். நீங்க என்னை அழச்சுக்கிட்டு போய் சாப்பிட வச்சீங்க ரொம்ப நன்றி’ என தமிழ் கலந்த தெலுங்கில் கூறி விட்டு பிபி மாத்திரையினை போட்டார். இது போல் பல இடங்களில் சாப்பாடு தாமதமாகவே வந்ததாக பணியிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில் சத்யா என்ற பெண் வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து வந்திருந்தார். ஆனால் பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் நீண்ட நேரம் வாக்கு சாவடிக்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தவர், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். அய்யம்பேட்டை வாக்கு சாவடி ஒன்றில் அர்ச்சுணன் என்ற 55 வயது முதியவர் வாக்களித்து விட்டு வெளியே வந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து, இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய உறவினர்கள் அழுது கொண்டே வாக்கு சாவடிக்கு முன் திரண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3mlufRV
via
