கொரோனா லாக்டெளன் நேரத்தில் வருமானத்திற்காக திருவையாறில் லோடு ஆட்டோ மூலம் பழம் வியாபாரம் செய்து வந்த விவசாயியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ 6,000 அபராதம் வசூல் செய்ததுடன் அதற்கான பில்லையும் தர மறுத்துள்ளார்.இது தொடர்பாக பேஸ்புக், ட்விட்டர் மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் தெரிவிக்கப்பட உடனடியாக பணம் திரும்ப கிடைத்துள்ளது.
அரியலுார் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா ஜமீன் குளத்தூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(31) விவசாயியான இவர் மொத்தமாக பழ வியாபாரமும் செய்து வருகிறார். கொரோனா லாக்டெளன் அமலில் இருப்பதால் ஆண்டிமடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநரிடம் உரிய அனுமதி பெற்று லோடு ஆட்டோவில் கிர்ணி உள்ளிட்ட பழங்கள் எடுத்துச் சென்று திருவையாறு, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.
சம்பவம் குறித்து சிலம்பரசனிடம் பேசினோம், "மே 10ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரைக்கும் பழம் வியாபாரம் செய்வதற்கான உரிய அனுமதி பெற்று அதற்கான அனுமதி சான்றிதழையும் வைத்துக் கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன்.அன்றைக்கு நான் வியாபாரத்திற்கு செல்லாமல் டிரைவர் சங்கர் மட்டும் சென்றார். கொண்டு சென்ற பழத்தில் பாதிகூட விற்பனையாகாமல் மாலை 4 மணி அளவில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். வண்டியை மறித்த இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், லோடு ஆட்டோவை ஸ்டேஷனுக்கு வரவழைத்தார். பின்னர் டிரைவரிடம் ரூ 6,000 கொடுங்க எனக் கேட்டுள்ளார். 'பணம் இல்லைனா வண்டியை விட்டுட்டு போங்க' எனக் கூறியுள்ளார்.
"வண்டியில் பழம் இருக்கு, பஸ்ஸும் இல்ல, எப்படி சார் ஊருக்கு போறதுனு கேட்க, எப்படியாவது போங்க பழத்தை வேறு வண்டியை கொண்டு வந்து எடுத்துக்கிட்டு போங்க!" என கூறிவிட்டு வழக்கும் பதிந்துவிட்டார். இதனை டிரைவர் சங்கர் எனக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். நான் லோக்கலில் இருந்த எனது நண்பர் அன்புவிடம் தகவல் சொல்லி ஸ்டேஷனுக்கு போய் பார்க்க சொன்னேன்.அன்பு போய் வாகனத்தை விடுங்க எனக் கூறியதற்கு, 'எப்.ஐ.ஆர் போட்டாச்சு அபராதம் செலுத்தினால் மட்டுமே விடமுடியும் என்றுள்ளார் பின்னர் ரூ 6,000 கொடுத்த பிறகு அதற்கான ரசீதை கொடுக்காமல் ரூ 200 அபராதம் வசூலித்ததாக ரசீது கொடுத்துள்ளனர். என்ன சார் இதுனு கேட்டதற்கு வண்டிய எடுத்துக்கிட்டு கிளம்புங்க' எனக் கூறியுள்ளனர்.
கொரோனா அச்சத்தையும் மீறி லாக்டெளன் நேரத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சொற்ப வருமானத்திற்காக உயிரையே பணயம் வச்சு வியாபாரம் செய்யப் போறோம். போலீஸ் அபராதம் வாங்கிட்டு அதற்கான பில்லையும் கொடுக்கவில்லை அப்படியென்றால் இதனை என்ன சொல்வது என எனக்கு தெரிந்தவரான அரியலுார் விவசாய சங்கத்தை சேர்ந்த செல்வம் தனவேல் என்பவரிடம் புலம்பியபடி தகவல் தெரிவித்தேன். அவர்,ட்விட்டர் மூலம், 'விவசாயியிடம் ரூ 6,000 பணம் வாங்கி கொண்டு வண்டியை விடுவித்துள்ளார் திருவையாறு இன்ஸ்பெக்டர். ஊரடங்கால் நஷ்டம் அடைந்து கொண்டிருக்கும் விவசாயியை மேலும் நஷ்டமடைய வைப்பது சரியா, அடிமட்டத்தில் இருக்கும் விவசாயிக்கு இது தான் நிலையா ?' எனப் புகாராக பதிவிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு அனுப்பினார்.
இதையடுத்து அந்த பதிவு முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் சென்றதாகத் தெரிகிறது.பின்னர் சிபிசிஐடி போலீஸார் போன்செய்து விசாரித்ததுடன் வங்கி கணக்கு எண்ணையும் பெற்றுக் கொணடனர். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள்,என்னிடம் பெற்ற பணத்தைத் திருப்பி கொடுக்கவும் வலியுறுத்தினர்.அதன் பிறகு என் வங்கி கணக்கிற்கு ரூ 6,000 பணம் வந்து சேர்ந்தது. ட்விட்டரில் பார்த்து விவசாயியான எனக்கு நியாயம் கிடைக்க செய்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் தஞ்சாவூர்,அரியலூர் மாவட்ட போலீஸ் தரப்பிற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." ட்விட்டரிலும் எங்களது நன்றியை பதிவு செய்திருக்கிறோம் என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fmP0JC
via
