கடலூர்: புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சைப்பயறு; கலங்கும் விவசாயிகள்!

0

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா, குமராட்சி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பச்சைப்பயறு ஆகியவைகளை கறுப்பு நிற புழுக்கள் தாக்கியதால், கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள். சிதம்பரம் தாலுகா, அதன் அருகிலுள்ள இளநாங்கூர், நந்திமங்கலம், காட்டு கூடலூர், வையூர், அத்திப்பட்டு, பூலாம்மேடு உள்ளிட்ட இன்னும் பல கிராமங்களில் தாளடி நெல் அறுவடையை தொடர்ந்து தை, மாசி மாதங்களில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி மேற்கொள்வதை இப்பகுதி விவசாயிகள் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

விவசாயி அசோக்குமார்

இந்நிலையில்தான் கறுப்பு நிற புழுக்களின் தாக்குதலால், பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் மிகுந்த வேதனையோடு பேசிய இளநாங்கூர் விவசாயி அசோக்குமார், ``இந்த பகுதி விவசாயிகள் வடக்குராஜன் வாய்க்கால் மூலம் பாசனம் பெற்று வெள்ளாமை செஞ்சிக்கிட்டு இருக்கோம். இது காவிரியின் கடைமடை பகுதிங்குறதுனால, சம்பா, தாளடி பட்டத்துல நெல் சாகுபடி செய்றதுங்கறது ரொம்பவே சவாலான காரியம். ஒண்ணு, வெள்ளத்தால் நெற்பயிர்கள் அழியும், இல்லைனா வறட்சியினால், பயிர் பாதிக்கப்படும். இதனால் எங்களுக்கு உத்தரவாதமான லாபம் கிடைக்காது. இதனால நாங்க, தை, மாசிப்பட்ட உளுந்து, பச்சைப்பயறு சாகுபடியைத்தான் உத்தரவாதமான வாழ்வாதாரமாக நம்பி இருக்கோம். பெரும்பாலும் கைவிட்டதே இல்லை. நிறைவான லாபம் கிடைக்கும். இதுக்கு ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லியெல்லாம் அதிகம் தேவைப்படாது. வேற பராமரிப்புகளும் அதிகம் கிடையாது. தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. நிறைவான மகசூல் கிடைக்கும்.

இது விற்பனை செய்றதும் ரொம்ப எளிது. இதனால்தான் இந்தப் பகுதி விவசாயிகள், நெல் சாகுபடி செய்றதைவிட, உளுந்து, பச்சைப்பயறு சாகுபடியைதான் அதிகம் விரும்புவாங்க. ஆனால் இந்த வருசம் எங்களோட துரதிர்ஷ்டம், கறுப்பு புழு தாக்குதலால் கடுமையான பாதிப்பு. செடிகள்ல இருந்த பிஞ்சுகளையும் காய்களையும் நிறைய சாப்பிட்டுடுச்சி. இதனால் கடுமையான மகசூல் இழப்பு.

பாதிப்பு ஏற்பட்டப்பவே, வேளாண்மைத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு இதை கொண்டு போனோம். கொரோனா, தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி, இதை அவங்க கண்டுக்கவே இல்லை. யாரும் வந்து இங்க பயிரைப் பார்க்கவே இல்லை. நாங்க போட்ட முதலுக்கும் உழைப்புக்கும் கூட வருமானம் தேறலை. எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒழுங்கா விளைஞ்சிருந்தால், உளுந்துல ஏக்கருக்கு ஏழரை குவிண்டால் மகசூல் கிடைச்சிருக்கும், பச்சைப்பயறுல 5 குவிண்டாலுக்கும் மேல மகசூல் கிடைச்சிருக்கும். ஏக்கருக்கு ரூ.35,000க்கு மேல லாபம் கிடைச்சிருக்கும். கடந்த ஆண்டு நிவர், புரெவி, பருவம் தவறிய மழையினால், நெல் சாகுபடியில் கடுமையான நஷ்டம்.

புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட உளுந்து செடி

இந்த முறை உளுந்து, பச்சைப்பயறு சாகுபடியில் புழு தாக்குதலால் நஷ்டம். பொருளாதார நெருக்கடியை எங்களால சமாளிக்கவே முடியலை, அன்றாட குடும்ப செலவுகளுக்கே திண்டாடிக்கிட்டு இருக்கோம். விவசாயிகள் கையில் கொஞ்சம் பணமே இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள், உளுந்து, பச்சைப்பயறுக்கு காப்பீடு செலுத்தவே இல்லை. ஒருவேளை செலுத்தினாலும் இழப்பீடு வாங்குறது சாதாரண காரியமல்ல.

உளுந்து, பச்சைப்பயறு சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய, தமிழக அரசு எங்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 நஷ்ட ஈடு வழங்கணும். புழுத்தாக்குதலும் இயற்கை பேரிடர்தான்’’ என்றார். இப்பகுதி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பாலசுப்ரமணியனின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ``முறையான ஆய்வுகள் நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oJWhrz
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*