மதுரை: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை!' -சமூக ஆர்வலர் புகாரால் பரபரப்பு

0

மதுரையில நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தற்போதைய மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், இத்திட்டம் தொடங்கியதிலிருந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

பெரியார் பேருந்து நிலையப் பணி

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை நடந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கு புகார் மனு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், "மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம், வாகனம் நிறுத்துமிடம் என மிகப்பெரியதாக பெரியார் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

அரவிந்த் பாலாஜி

வாகன நிறுத்துமிட பணிக்காக சுமார் 10 மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டது. அப்படி தோண்டும்போது கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கிராவல் மணல் அதிக அளவில் கிடைத்துள்ளது .

இந்த மணலை மாநகராட்சி தலைமை பொறியாளரும், சில அதிகாரிகளும் இணைந்து அரசுக்கும் கனிமவளத்துறைக்கும் தெரியாமல் விற்பனை செய்துள்ளனர்.

இதனால் தமிழக அரசுக்கு சுமார் 15 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உட்படுத்தி கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல முறைகேடு செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகளிடமிருந்து பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருக்கிறார்.

நம்மிடம் பேசிய அரவிந்த் பாலாஜி, "பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த ஊழல் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடுவார் என்று நம்புகிறேன்" என்றார்.

மதுரை மாநகராட்சி

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையருக்கும், கனிம வளத்துறை இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ள இம்மனு தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வரிசையாக வழக்குகள் பதிவு செய்து வரும் நிலையில் இப்புகார் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tTWI3p
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*