குற்றாலம்: ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்! - சீசன் தொடங்கியும் ஊரடங்கால் வெறிச்சோடியது!

0

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் சீசன் களைகட்டத் தொடங்கும். மலைகளின் மூலிகைகளை ஊடுருவி வரும் சுகமான தென்றல் காற்று வருடிச் செல்ல சில்லென்ற சாரலில் நனைவது சுகமான அனுபவம்.

Also Read: லாங் டிரைவ் போலாமா? - 4 | குற்றாலம் போனா... மேக்கரையையும் மணலாறையும் மறந்துடாதீங்க!

சீசன் சமயத்தில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். அருவிகளில் கொட்டும் நீரில் இரவில் குளித்தால்கூட குளிர்வதில்லை என்பதால் 24 மணி நேரமும் அருவிகளில் கூட்டம் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு குற்றாலம் சீசனுக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருக்கும் டவ்தே புயல் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.

குற்றாலம் மெயின் அருவியின் அழகுக் காட்சி

புயலின் சீற்றம் காரணமாக இந்த ஆண்டு குற்றாலம் சீசன் முன்கூட்டியே தொடங்கி விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் நிறம் மாறி, மண்ணின் நிறத்தில் கொட்டுகிறது. அத்துடன், பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் அதிக அளவுக்கு விழுகிறது.

ஐந்தருவி

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நடைபாதையிலும் தண்ணீர் ஓடுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்த போதிலும் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகளோ உள்ளூர் நபர்களோ அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பதிவானது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி பகுதியில் 4.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக நெல்லையின் பிரதான அணையான பாபநாசம் 106 அடியை (கொள்ளளவு 143 அடி) எட்டியது. 156 அடி கொள்ளளவுள்ள சேர்வலாறு அணையில் 119 அடி நீர் இருப்பு உள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை 86 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை 65 அடியாகவும் (கொள்ளளவு 85 அடி), ராமாநதி அணை 52 அடியாகவும்(84 அடி கொள்ளளவு) 72 அடி கொண்ட கருப்பாநதி அணை 49 அடியாகவும் உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Rm6iPg
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*