நெல்லை: ஆடு திருடிய கும்பல் மீது போலீஸில் புகார்?! - பார் உரிமையாளர் வெட்டிக் கொலை

0

நெல்லையை அடுத்த பேட்டை மயிலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற கருத்தப்பாண்டி. 54 வயதான இவர் பேட்டை அருகே உள்ள திருப்பணிக்கரிசல்குளம் பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடையில், ‘பார்’ குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

Also Read: `சொகுசு கார்னா சந்தேகம் வராது!’ - போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

கணேசனின் உறவினரான முருகன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவரது ஆடுகளில் சிலவற்றை மூன்று தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதனால் அச்சம் அடைந்த முருகன் தன் உறவினரான கணேசனை அழைத்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார். உறவினருக்காக கணேசன் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆடு திருட்டு தொடர்பாக முருகனுடன் சென்ற கணேசன், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது குறிப்பிட்டுள்ளார். போலீஸார் சந்தேகத்துக்குரிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

கொலையான கணேசன்

காவல்துறையினரின் விசாரணை காரணமாகக் கலக்கம் அடைந்த அந்த தரப்பினர் முருகன் மற்றும் கணேசனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதுடன், காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். அதற்கு கணேசன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக அந்தக் கும்பல் கோபம் அடைந்துள்ளது. ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாத கணேசன், வழக்கம் போல தான் பார் நடத்தி வந்த இடத்தில் தங்கியிருந்திருக்கிறார்.

கணேசன் உடலை கைப்பற்றிய போலீஸார்

அவர் தனியாக இருப்பதை அறிந்த கும்பல் அங்கு சென்று கணேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது கணேசன் கொலையாகிக் கிடப்பதை அறித்த உறவினர்கள், காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப் , சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நெல்லை மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணனும் சம்பவம் நடத்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

சம்பவ இடத்தில் எஸ்.பி மணிவண்ணன்

பின்னர் கணேசனின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆடு திருட்டு தொடர்பாக புகார் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் எதுவும் இருக்கிறதா என்பது பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3eG4jOI
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*